ராஞ்சியில் நடந்த ரீயூனியன்: “தோனி – கோலி கார் ரைடு”… கொண்டாட்டத்தில் அதிரும் இணையம்!!..
இந்த ஒருநாள் போட்டிக்கு முன், இந்திய அணியில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. கேப்டன் சுப்மன் கில் கழுத்து வலி காரணமாக தொடரிலிருந்து விலகியுள்ளார். அதேபோல், துணைக் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் மண்ணீரல் காயம் காரணமாக இத்தொடரில் பங்கேற்கவில்லை. இதனால், கே.எல்.ராகுல் அணியின் கேப்டனாகப் பொறுப்பேற்றுள்ளார்.
தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு முன்னதாக, விராட் கோலி, ரிஷப் பண்ட் உள்ளிட்ட இந்திய அணி வீரர்கள் ராஞ்சியில் தோனியின் வீட்டில் நடைபெற்ற இரவு விருந்தில் கலந்து கொண்டனர். தொடர்ந்து, வீட்டிற்கு வந்த வீரர்களை வெளியே வந்து வரவேற்ற தோனி, விருந்துக்குப் பிறகு தானே காரில் கோலியை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 0-2 என்ற கணக்கில் இழந்த சோகத்தில் இருந்த இந்திய ரசிகர்களுக்கு, தோனி – கோலி சந்திப்பு பெரும் உற்சாகத்தை தந்துள்ளது. அதோடு, ஒருநாள் போட்டி தொடங்குவதற்கு முன்பே, ‘ராஞ்சியில் தரமான சம்பவம்’ நிகழ்ந்துள்ளதாக ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
ALSO READ: WTC புள்ளிகள் பட்டியலில் சரிந்த இந்தியா.. பாகிஸ்தான் முன்னிலை.. யார் முதலிடம்?




ராஞ்சியில் இந்திய அணி:
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் தென்னாப்ரிக்க கிரிக்கெட் அணி 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள், 5 T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்திருக்கும் நிலையில், இரண்டிலுமே தென்னாப்ரிக்காவே வெற்றி பெற்றிருக்கிறது. அடுத்ததாக மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர், வரும் ஞாயிற்றுக்கிழமை (நவ.30) ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் நடைபெறவுள்ளது. ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கு கே.எல்.ராகுல் தலைமையில் இந்திய அணி அறிவிக்கப்பட்டிருக்கிறது. விராட்கோலி மற்றும் ரோகித் சர்மா மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். இதற்காக இந்திய வீரர்கள் ராஞ்சிக்கு வந்துள்ளனர்.
தோனி வீட்டில் இரவு விருந்து:
இந்நிலையில், வியாழக்கிழமை ராஞ்சியில் நடந்த இந்திய அணியின் பயிற்சிக்குப் பிறகு, விராட் கோலி நேராக தோனியின் பண்ணை வீட்டிற்கு சென்றார். அவருடன் ரிஷப் பண்ட் மற்றும் சி.எஸ்.கே. கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆகியோரும் இணைந்தனர். தோனி ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்தில் கலந்துகொள்ள கிரிக்கெட் வீரர்கள் சென்றதுதான் காலை முதலே சமூக வலைதள டிரெண்டிங் டாபிக்காக உள்ளது. இந்த சந்திப்பு சாதாரண ஒன்று இல்லை என ரசிகர்கள் சிலாகித்து வருகின்றனர்.
தோனி – கோலி கார் ரைடு வீடியோ:
MS Dhoni driving and Virat Kohli sitting with him in front seat 😍💛 pic.twitter.com/A994WuL7Uo
— Yash MSdian ™️ 🦁 (@itzyash07) November 27, 2025
அதோடு, கிரிக்கெட் வீரர்கள் தோனியின் வீட்டிற்கு சென்றது தொடர்பாக பல வீடியோக்களும் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதில் தோனி, கோலியை வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் செல்லும் காட்சிகள் வைரலானது. குறிப்பாக விருந்து முடிந்தபின், தோனி தானே காரை ஓட்டிச்சென்று கோலியை நேரடியாக ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். ஓட்டுநர் இருக்கையில் தோனி, பக்கத்து இருக்கையில் கோலி அமர்ந்திருக்கும் அந்தக் காட்சிகள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனை, இந்த ஆண்டின் சிறந்த சந்திப்பு என ரசிகர்கள் கொண்டாடும் அளவிற்கு இந்த வீடியோ வைரலாகியுள்ளது.
ராஞ்சி வந்தால் விருந்து நிச்சயம்:
இந்தியா ராஞ்சியில் விளையாடும் போதெல்லாம், தோனி அணி வீரர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்தளிப்பது என்பது சாதாரணமானது தான். 2019ம் ஆண்டில் கோலி கேப்டனாக இருந்தபோதும், ஆஸ்திரேலியா தொடருக்கு நடுவே முழு இந்திய அணியையும் தோனி தனது வீட்டிற்கு அழைத்திருந்தார். இந்த மரபு இன்றும் தொடர்கிறது என்பதற்கான சான்றே இந்த சந்திப்பு.
ALSO READ: தென்னாப்பிரிக்கா தொடர் இழப்பு.. பிரஸ் மீட்டில் கவுதம் கம்பீர் காட்டம்!
ராஞ்சியில் வெற்றி பாதை தொடங்குமா?
டெஸ்ட் தொடரில் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, ஒருநாள் தொடரில் வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இந்திய அணி இருக்கிறது. ரோஹித், கோலி, ராகுல் போன்ற மூத்த வீரர்கள் உள்ளதால் இந்திய அணிக்கான நம்பிக்கையும் அதிகமாக உள்ளது. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்தியா வெற்றிப் பாதை தொடங்குமா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.