Harbhajan Singh: லலித் மோடி வெளியிட்ட வீடியோ.. கடும் கோபத்தை வெளிப்படுத்திய ஹர்பஜன் சிங்!
Lalit Modi's IPL Video Leak: 2008 ஐபிஎல் போட்டியின் போது ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்த வீடியோவை லலித் மோடி வெளியிட்டதால் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் பழையது என்றாலும், மீண்டும் வெளிச்சத்திற்கு வந்ததால் ஹர்பஜன் சிங் வருத்தம் தெரிவித்துள்ளார். ஸ்ரீசாந்தின் மனைவி லலித் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

முன்னாள் ஐபிஎல் தலைவரான லலித் மோடி (Lalit Modi) முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் மைக்கேல் கிளார்க்குடன் பாட்காஸ்ட்டில் ஈடுபட்டார். இந்த நிகழ்வின்போது, லலித் மோடி ஒரு வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். அதில், கடந்த 2008ம் ஆண்டு ஹர்பஜன் சிங் (Harbhajan Singh) ஸ்ரீசாந்தை கன்னத்தில் அறைந்த வீடியோ வெளியிடப்பட்டது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் தற்போது வைரலானதை தொடர்ந்து ஹர்பஜன் சிங் கோபமடைந்தார். மேலும், ஹர்பஜன் சிங் தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். இந்த சம்பவம் நடந்து கிட்டத்தட்ட 18 ஆண்டுகள் ஆகிவிட்டது. அதேநேரத்தில், இந்த சம்பவத்தின் இந்த கிளிப் முதல் முறையாக மக்கள் முன் வந்துள்ளது.
என்ன சொன்னார் ஹர்பஜன் சிங்..?
இதுகுறித்து இன்ஸ்டன்ட் பாலிவுட்டிடம் பேசிய முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங், ”இந்த வீடியோ வெளிவந்த விதம் தவறு. வீடியோவைப் பகிர்ந்ததன் பின்னணியில் லலித் மோடிக்கு ஏதோ சுயநல நோக்கம் இருக்கலாம். 18 ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை மக்கள் மறந்துவிட்டார்கள், லலித் மோடி மீண்டும் அந்த விஷயத்தை மக்களுக்கு நினைவூட்டுகிறார். அப்போது தான் செய்த இந்த செயல்களுக்கு வருந்துகிறேன், இந்த சம்பவத்திற்காக இன்னும் வெட்கப்படுகிறேன்” என்று கூறினார்.




ஸ்ரீசாந்தை அறைந்த ஹர்பஜன் சிங்:
🚨 After 18 yrs, Lalit Modi has released an unseen video of Bhajji–Sreesanth slapgate.#lalitmodi #sreesanth #HarbhajanSingh #slapgate #cricket pic.twitter.com/7vzcEtowKJ
— Trolls Officials (@trollsofficials) August 29, 2025
கடந்த 2008 ஐபிஎல் போட்டியில் ஹர்பஜன் சிங் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வந்தார். அதேநேரத்தில், முன்னாள் இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக விளையாடினார். ஐபிஎல்லின் முதல் சீசனில், மும்பை மற்றும் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டிக்குப் பிறகு, ஹர்பஜன் ஸ்ரீசாந்தை அறைந்தார். இந்த சம்பவம் போட்டி முடிந்த பிறகு நடந்தது. இதன் வீடியோ பதிவு செய்யப்படவில்லை அப்போது கூறப்பட்டது. இந்தநிலையில், அப்போதைய ஐபிஎல் தலைவர் லலித் மோடி இந்த வீடியோவைப் பகிர்ந்து கொண்டார். மேலும், இந்த சம்பவம் தனது பாதுகாப்பு கேமராவில் பதிவாகியுள்ளதாகவும் கூறினார்.
வீடியோ குறித்து கடுமையாக விமர்சித்த ஸ்ரீசாந்த் மனைவி:
முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்தின் மனைவி புவனேஸ்வரி குமாரி, வீடியோவைப் பகிர்ந்ததற்காக லலித் மோடியை கடுமையாக சாடி, ”லலித் மோடியும் மைக்கேல் கிளார்க்கும் வெட்கப்பட வேண்டும். இந்த சம்பவத்தை மறந்து ஹர்பஜனும் ஸ்ரீசாந்தும் கடந்து சென்றுவிட்டனர். அவர்கள் இருவருக்கும் பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளின் தந்தைகள், இன்னும் நீங்கள் பழைய காயங்களைத் தோண்டி எடுக்கிறீர்கள். இது மிகவும் அருவருப்பானது, கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது” என்று கூறினார்.