Shubman Gill: ரோஹித் களத்தில் அசிங்கமாக திட்டினாலும்.. ஹிட் மேன் கேப்டன்சி குறித்து கில் ஓபன் டாக்!

ENG vs IND Test Series 2025: இந்திய அணியின் புதிய டெஸ்ட் கேப்டன் சுப்மன் கில், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் தலைமையின் அனுபவங்களைப் பகிர்ந்துள்ளார். ரோஹித் சர்மாவின் தெளிவான திட்டமிடல் மற்றும் விராட் கோலியின் துல்லியமான போட்டித் திட்டமிடலை அவர் பாராட்டினார். 18 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல இந்திய அணி முயற்சிக்கும் நிலையில், கிலின் தலைமையின் கீழ் அணியின் வெற்றிக்குரிய பயணம் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

Shubman Gill: ரோஹித் களத்தில் அசிங்கமாக திட்டினாலும்.. ஹிட் மேன் கேப்டன்சி குறித்து கில் ஓபன் டாக்!

சுப்மன் கில் - ரோஹித் சர்மா

Published: 

15 Jun 2025 22:08 PM

வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி (ENG vs IND Test Series 2025) விளையாடவுள்ளது. இந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு முன்னதாக, இந்திய அணியின் ஜாம்பவான்களான ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். இது இந்திய ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை கொடுத்தது. இதன் காராமாக, டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லை (Shubman Gill) நியமிக்க பிசிசிஐ (BCCI) முடிவு செய்தது. இந்தநிலையில், 2025 ஜூன் 15ன் தேதியான இன்று சுப்மன் கில் வீடியோ ஒன்றில் பேசினார். அப்போது அவர், ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலியின் கேப்டன்சியில் தான் கற்றுக்கொண்டவை குறித்து பேசினார்.

ரோஹித் குறித்து என்ன சொன்னார் கில்..?

ரோஹித் சர்மா கேப்டன்சி குறித்து பேசிய சுப்மன் கில், “ரோஹித் சர்மா உருவாக்கிய சூழல் இதுதான். அதனால்தான் அவர் உங்களை அசிங்கமாக திட்டினாலும், நீங்கள் மனதளவில் புண்படுத்தாது. அதை பெரிதாக எடுத்துக்கொள்ள மாட்டீர்கள். இதுதான் அவரது ஆளுமை. இதுதான் அவரது சிறப்பு என்றும் நினைக்கிறேன். போட்டியின்போது ரோஹித் சர்மா உறுதியாகவும், உங்களிடம் கண்டிப்பாகவும் இருக்கலாம். ஆனால், அது என்றுமே அவரது இதயத்திலிருந்து வருவது நல்லது. அணியின் வெற்றிக்காகதான் என்பதை நீங்கள் அறிவீர்கள்.

கில் பேசிய வீடியோ காட்சி

களத்திற்கு வெளியே ரோஹித் சர்மா அவ்வளவு ஆக்ரோஷமானவர் இல்ல என்பது போல் தோன்றும். ஆனால், அவர் மிகவும் ஆக்ரோஷமானவர். ரோஹித் சர்மாவின் தலைமையின்கீழ், மிகவும் தெளிவாக திட்டமிடல் இருக்கும். ஒரு தொடருக்கு முன்பும், தொடரின் போது தொடருக்கு பிறகும், எதையும் மறைக்காமல் ரோஹித் சர்மா வீரர்களிடம் எல்லாவற்றையும் சொல்லி பேசுவார்” என்றார்.

விராட் கோலி குறித்து கில்:

விராட் கோலி கேப்டன்சி குறித்து பேசிய கில், “ நான் விராட் கோலியின் தலைமையின்கீழ் விளையாடியபோது, டெஸ்ட் போட்டியின்போது அவரது எண்ணங்களும் சிந்தனையும் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று என்று நினைக்கிறேன். போட்டியின் போது, ​​ஒரு திட்டம் வேலை செய்யவில்லை என்றால், அவர் உடனடியாக மற்றொரு திட்டத்தை உருவாக்கி, பந்து வீச்சாளரிடம் என்ன செய்ய வேண்டும் என்று கூறுவார்” என்று தெரிவித்தார்.

தொடரின் வெற்றிக்காக 18 ஆண்டுகள் காத்திருப்பு:

இந்திய அணி இதுவரை இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 19 டெஸ்ட் தொடர்களில் விளையாடியுள்ளது. இதில், 3 முறை மட்டுமே இந்திய அணி தொடரை வென்றுள்ளது. கடந்த 18 ஆண்டுகளாக இந்திய அணியால் இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வெல்ல முடியவில்லை. கடைசியாக 18 ஆண்டுகளுக்கு முன்பு, ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியா இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை வென்றது. இதன் காரணமாக, 18 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்தில் டெஸ்ட் தொடரை இந்தியா வெல்ல சுப்மன் கில் தலைமையிலான இளம் படை முயற்சிக்கும்.