IND vs AUS 2nd T20: 5 ஆண்டுகளுக்கு பிறகு! சொந்த மண்ணில் இந்தியாவை வீழ்த்திய ஆஸ்திரேலியா!
IND vs AUS 2nd T20 Highlights: 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் இந்தியாவை ஒரு டி20 போட்டியில் தோற்கடிப்பது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலியா கடைசியாக 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிட்னியில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது.

இந்தியா - ஆஸ்திரேலியா 2வது டி20 போட்டி
இந்தியா – ஆஸ்திரேலியா இடையிலான இரண்டாவது டி20 போட்டியில் (IND vs AUS 2nd T20) ஆஸ்திரேலியா இந்திய அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆஸ்திரேலியாவைத் தடுக்க தங்களால் முடிந்த அனைத்தையும் செய்த போதிலும், ஆஸ்திரேலிய அணி 40 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்று அசத்தியது. முதலில் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணியால் வெறும் 125 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால், ஆஸ்திரேலிய அணி மிடில் ஆர்டரில் சொதப்பினாலும் போராட்டி வெற்றியை ருசித்தது. மேலும், ஆஸ்திரேலிய அணி தனது சொந்த மண்ணில் நீண்ட நாட்களுக்கு பிறகு, இந்தியாவை வீழ்த்தியுள்ளது.
ALSO READ: கழுத்தில் அடித்த பந்து.. இளம் கிரிக்கெட் வீரர் உயிரிழப்பு.. ரசிகர்கள் சோகம்!
126 ரன்கள் இலக்கு:
126 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஜோடியாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் மற்றும் மிட்செல் மார்ஷ் களமிறங்கியது முதலே அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதன் காரணமாக, ஆஸ்திரேலிய அணி வெறும் 4 ஓவர்களில் 50 ரன்களைக் கடந்தது. டிராவிஸ் ஹெட் 15 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்க, கேப்டன் மிட்செல் மார்ஷ் 26 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 46 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
பும்ரா-சக்கரவர்த்தியின் முயற்சி:
Australia win the second T20I by 4 wickets.#TeamIndia will look to bounce back in the next match.
Scorecard ▶ https://t.co/7LOFHGtfXe#AUSvIND pic.twitter.com/rVsd9Md9qh
— BCCI (@BCCI) October 31, 2025
ஆஸ்திரேலியாவை குறைந்த ஸ்கோருக்குள் கட்டுப்படுத்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் வருண் சக்ரவர்த்தி எவ்வளவோ முயற்சிகளை மேற்கொண்டனர். பும்ரா 4 ஓவர்களில் 26 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மறுமுனையில் சக்ரவர்த்தி 4 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். மற்ற பந்து வீச்சாளர்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. குல்தீப் யாதவ் தன் பங்கிற்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாலும், 3.2 ஓவர்களில் 45 ரன்களை விட்டு கொடுத்திருந்தார்.
இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தபோது, அபிஷேக் சர்மா மற்றும் ஹர்ஷித் ராணா மட்டுமே அதிக ரன்களை எடுத்திருந்தனர். அபிஷேக் 68 ரன்கள் எடுத்து அதிரடியாக விளையாடிய நிலையில் 7வது இடத்தில் பேட்டிங் செய்த ஹர்ஷித் ராணா 35 ரன்கள் எடுத்திருந்தார். இருப்பினும், பந்துவீச்சில் ஹர்ஷித் ராணா 2 ஓவர்களில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார்.
ALSO READ: சீரான உடல்நிலை! இந்திய அணிக்கு திரும்புவது எப்போது? அப்டேட் கொடுத்த ஷ்ரேயாஸ் ஐயர்!
5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா வெற்றி:
5 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியா தனது சொந்த மண்ணில் இந்தியாவை ஒரு டி20 போட்டியில் தோற்கடிப்பது இதுவே முதல் முறை. ஆஸ்திரேலியா கடைசியாக 2020ம் ஆண்டு டிசம்பர் மாதம் சிட்னியில் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்தது. இது இந்தியாவுக்கு எதிராக ஆஸ்திரேலியாவின் 12வது ஒட்டுமொத்த டி20 வெற்றியாகும்.