Women’s World Cup 2025: மகளிர் உலகக் கோப்பை அட்டவணை வெளியீடு! இந்தியா – பாகிஸ்தான் எப்போது மோதுகிறது..?
ICC Women's World Cup 2025 Schedule: 2025ம் ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறும் ICC மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 8 அணிகள் ரவுண்ட் ராபின் முறையில் பங்கேற்கின்றன. இந்தியா - இலங்கை போட்டி 2025 செப்டம்பர் 30 அன்று தொடங்குகிறது. முக்கிய போட்டிகள், இந்தியா-பாகிஸ்தான் போட்டி அக்டோபர் 5ம் தேதி இலங்கையில், அரையிறுதிப் போட்டிகள் 2025 அக்டோபர் 29, 30 மற்றும் இறுதிப் போட்டி 2025 நவம்பர் 2ம் தேதி நடைபெறும்.

2025 மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை
2025 சாம்பியன்ஸ் டிராபியை (2025 Champions Trophy) தொடர்ந்து, 2025ம் ஆண்டு ஐசிசி நடத்தும் மிகப்பெரிய பெரிய மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை (ICC Womens ODI World Cup 2025) போட்டியாகும். இந்தநிலையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பையின் முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது. இந்த ஒருநாள் உலகக் கோப்பையில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. இந்த போட்டிகள் முழுவதும் ரவுண்ட் ராபின் வடிவத்தில் நடத்தப்படும். அதன்படி, 8 அணிகளும் லீக் ஸ்டேஜில் மற்ற அணிகளை ஒரு முறை நேருக்குநேர் எதிர்கொள்ளும். இந்த முறை உலகக் கோப்பையை இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்துகின்றன. 2025 மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை முதல் போட்டியில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே எம் சின்னசாமி ஸ்டேடியத்தில் (M. Chinnaswamy Stadium) நடைபெறுகிறது.
2025 மகளிர் உலகக் கோப்பை போட்டிகள் எப்போது தொடங்குகிறது..?
2025 மகளிர் உலகக் கோப்பை வருகின்ற 2025 செப்டம்பர் 30 முதல் 2025 நவம்பர் 2ம் தேதி வரை நடைபெறும். மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் பலம் மிக்க ஆஸ்திரேலிய அணி நடப்பு சாம்பியன் என்ற அந்தஸ்துடன், வருகின்ற 2025 அக்டோபர் 1ம் தேதி நியூசிலாந்திற்கு எதிராக தனது முதல் போட்டியில் களமிறங்கிறது. அதேநேரத்தில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட 2025 மகளிர் உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் போட்டியின் தேதியும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டி வருகின்ற 2025 அக்டோபர் 5ம் தேதி இலங்கையில் உள்ள பிரேமதாசா ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்தநிலையில், இந்திய மகளிர் அணியின் போட்டி அட்டவணையை இங்கே தெரிந்துகொள்வோம்.
இந்தியாவின் முழு அட்டவணை
- இந்தியா vs இலங்கை – 2025 செப்டம்பர் 30
- இந்தியா vs பாகிஸ்தான் – 2025 அக்டோபர் 2
- இந்தியா vs தென்னாப்பிரிக்கா – 2025 அக்டோபர் 9
- இந்தியா vs ஆஸ்திரேலியா – 2025 அக்டோபர் 12
- இந்தியா v இங்கிலாந்து – 2025 அக்டோபர் 19
- இந்தியா vs நியூசிலாந்து – 2025 அக்டோபர் 23
- இந்தியா vs வங்கதேசம் – 2025 அக்டோபர் 26
அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகள் எங்கு நடைபெறுகிறது..?
The countdown begins ⏳
The full schedule for the ICC Women’s Cricket World Cup 2025 is out 🗓
Full details ➡ https://t.co/lPlTaGmtat pic.twitter.com/JOsl2lQYpy
— ICC (@ICC) June 16, 2025
2025 மகளிர் உலகக் கோப்பையின் முதல் அரையிறுதிப் போட்டி வருகின்ற அக்டோபர் 29ம் தேதி குவஹாத்தி/கொழும்பிலும், இரண்டாவது அரையிறுதி 2025 அக்டோபர் 30ம் தேதி பெங்களூருவிலும் நடைபெறும். இறுதிப் போட்டிக்கான தேதியாக நவம்பர் 2 ஆம் தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் அணிகளைப் பொறுத்து கொழும்பு அல்லது பெங்களூருவில் நடைபெறும். பாகிஸ்தான் அணி இந்தியாவில் விளையாடாது என்பதால், ஐசிசி இந்த 2 ஸ்டேடியங்களை தேர்வு செய்துள்ளது.
இதுவரை அதிக முறை கோப்பையை வென்ற அணி எது..?
மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை அதிகபட்சமாக ஆஸ்திரேலியா 7 முறையும், இங்கிலாந்து 4 முறையும், நியூசிலாந்து ஒரு முறையும் வென்றுள்ளது. இந்திய அணி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றதில்லை. இருப்பினும், இந்திய அணி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையில் இரண்டு முறை இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்று 2ம் இடத்தைப் பிடித்துள்ளது.