Champions League T20 Returns: புதிய பெயரில் மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி20.. எப்போது, எங்கு தெரியுமா?
Global Cricket's Comeback: 2026 ஆம் ஆண்டில், சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் "உலக கிளப் சாம்பியன்ஷிப்" என்ற புதிய பெயரில் மீண்டும் தொடங்கப்பட உள்ளது. ஐபிஎல், பிபிஎல், பிஎஸ்எல் உள்ளிட்ட உலகின் முன்னணி டி20 லீக்குகளின் சாம்பியன் அணிகள் இதில் பங்கேற்கும். பல ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டியின் மறுதோற்றம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்தப் போட்டி எப்போது துவங்கும் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறது.

உலகளாவிய உரிமையாளர் கிரிக்கெட் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளது. பல ஆண்டுகளாக மூடப்பட்டிருந்த சாம்பியன்ஸ் லீக் டி20 (Champions League Twenty20) கிரிக்கெட், இப்போது புதிய வடிவத்தில் மீண்டும் வர போகிறது. அதன்படி, சாம்பியன்ஸ் லீக் டி20 கிரிக்கெட், வருகின்ற 2026ம் ஆண்டு முதல் உலக கிளப் சாம்பியன்ஷிப் (World Club Championship) என்ற பெயரில் மீண்டும் தொடங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த முறை இதன் அமைப்பு முந்தைய சாம்பியன்ஸ் லீக்கை போலவே இருக்கும் என்றும், இதில் உலகெங்கிலும் உள்ள முக்கிய டி20 லீக்குகளில் பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்த அணிகள் பங்கேற்கும். இந்த போட்டியை காண ரசிகர்கள் பல ஆண்டுகளாக எதிர்பார்த்து காத்திருந்தனர்.
திரும்ப வரும் சாம்பியன்ஸ் லீக்:
தி கிரிக்கெட்டரின் அறிக்கையின்படி, சாம்பியன்ஸ் லீக் டி20 போட்டிகள் வருகின்ற 2026ம் ஆண்டில் இருந்து மீண்டும் உலக கிளப் சாம்பியன்ஷிப் என்ற பெயரில் தொடங்கப்பட இருக்கிறது. இந்த புதிய லீக்கில், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), பிக் பாஷ் லீக் (பிபிஎல்), பாகிஸ்தான் சூப்பர் லீக் (பிஎஸ்எல்), தென்னாப்பிரிக்கா டி20 லீக் மற்றும் தி ஹண்ட்ரட் போன்ற முக்கிய லீக்குகளின் சாம்பியன் அணிகள் ஒருவருக்கொருவர் மோதும் என்று நம்பப்படுகிறது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் (இசிபி) ஆகியவை ஐசிசி தலைவர் ஜெய் ஷாவுடன் அதன் ஒப்புதல் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இருப்பினும், இந்த லீக் 2026 ஆம் ஆண்டில் எப்போது நடைபெறும் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.




போட்டியாளர்கள் எப்படி பங்கேற்பார்கள்..?
🚨 CLT20 TO RETURN FROM 2026. 🚨
– The World Club Championship inspired by CLT20 to be launched in 2026.
– Champions from the IPL, SA20, Big Bash, The Hundred and other leagues will take part. (The Cricketer). pic.twitter.com/VxpF9bUWc9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) July 2, 2025
உலக கிளப் சாம்பியன்ஷிப் 2026 ஆம் ஆண்டில் நடத்தப்பட்டால், அது ஐபிஎல்லுக்குப் பிறகுதான் நடத்தப்படும். 2026ம் ஆண்டின் பிப்ரவரி மாத இறுதியில் அல்லது மார்ச் மாத தொடக்கத்தில் டி20 உலகக் கோப்பை நடத்தப்பட உள்ளது. இதன் பிறகு உடனடியாக ஐபிஎல் 2026 நடத்தப்படும். இதுபோன்ற சூழ்நிலையில், ஐபிஎல் 2026 வெற்றியாளர் உலக கிளப் சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கலாம்.
சாம்பியன்ஸ் லீக் டி20 முதன்முதலில் எப்ப்போது விளையாடப்பட்டது..?
சாம்பியன்ஸ் லீக் டி20 முதன்முதலில் 2009ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்தப் போட்டி 2014 வரை நடைபெற்றது. ஆனால் பின்னர் ஸ்பான்சர்ஷிப் பெறுவதில் உள்ள சிரமம் மற்றும் மோசமான டிஆர்பி காரணமாக இது தடைசெய்யப்பட்டது. ஐபிஎல் போலவே, சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளும் சாம்பியன்ஸ் லீக் டி20யில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தியுள்ளனர். எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2010 மற்றும் 2014ம் ஆண்டுகளில் சாம்பியன்ஸ் லீக் டி20யில் சாம்பியன் பட்டத்தை வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணியும் சாம்பியன்ஸ் லீக் டி20யில் 2 முறை சாம்பியன் பட்டத்தை வென்றது.