Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India host WTC: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை நடத்த விருப்பம்.. ஐசிசியிடம் கோரிக்கை வைத்த பிசிசிஐ.. விட்டுக்கொடுக்குமா இங்கிலாந்து..?

BCCI's Bid to Host WTC Final 2027: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்த பிசிசிஐ தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. இதுவரை இங்கிலாந்திலேயே போட்டிகள் நடந்து வருகின்றன. தற்போது 2025 இறுதிப் போட்டி லார்ட்ஸில் நடைபெறுகிறது. பிசிசிஐயின் தீவிர முயற்சிகளுக்கிடையே, இங்கிலாந்து அடுத்த மூன்று போட்டிகளையும் நடத்தும் எனக் கூறப்படுகிறது.

India host WTC: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலை நடத்த விருப்பம்.. ஐசிசியிடம் கோரிக்கை வைத்த பிசிசிஐ.. விட்டுக்கொடுக்குமா இங்கிலாந்து..?
லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம்Image Source: Twitter and ICC
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 14 Jun 2025 10:17 AM

2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC Final 2025) இறுதி போட்டியானது தற்போது லார்ட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா (Australia vs South Africa) அணிகள் மோதி வருகின்றன. இந்த போட்டியில் கிட்டத்தட்ட தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்று, கோப்பையை வெல்லும் நிலையில் உள்ளது. இந்தநிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்த வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) கனவு கண்டு வருகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி தொடங்கப்பட்டதிலிருந்து, இறுதிப் போட்டிகள் இங்கிலாந்தில் நடைபெற்று வருகின்றன. அதே நேரத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை இந்தியாவில் நடத்துவது குறித்து பிசிசிஐ, ஐசிசியிடம் முன்வைத்து வருகிறது. இந்தநிலையில், டெலிகிராஃப் அறிக்கையின்படி இங்கிலாந்து அடுத்த 3 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிகளையும் நடத்த இருப்பதாக கூறப்படுகிறது.

பிசிசிஐக்கு வாய்ப்பு இல்லையா..?

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த ஆறு ஆண்டுகளாக உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை நடத்தும் உரிமையை இந்திய மண்ணில் நடத்த தொடர்ந்து முயற்சித்து வருகிறது. ஆனால் உலக கிரிக்கெட்டில் பிசிசிஐயின் செல்வாக்கு அதிகரித்து வரும் போதிலும், அதை நடத்தும் உரிமையைப் பெற முடியவில்லை. முன்னாள் பிசிசிஐ செயலாளர் ஜெய் ஷா தற்போது ஐசிசியின் தலைவராக உள்ளார். இருப்பினும், இந்த வாய்ப்பு இந்தியாவின் கைகளுக்கு எளிதாக கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இருந்தபோதிலும், இங்கிலாந்து மண்ணிலேயே உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி நடத்த பெரும்பாலானோர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் அதிகாரம் இங்கிலாந்திடம் உள்ளதா..?


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் முதல் இறுதிப் போட்டி 2021ம் ஆண்டு இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே இங்கிலாந்தின் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணியை வீழ்த்தி நியூசிலாந்து அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அதே நேரத்தில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2வது இறுதிப் போட்டியானது 2023ம் ஆண்டு இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெற்றது. இந்தபோட்டியில், ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. இப்போது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின்  3வது இறுதிப் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையே லார்ட்ஸில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் தற்போதைய நிலைமையின்படி, தென்னாப்பிரிக்கா அணியே வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.