Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

WTC Final 2025: டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா?

World Test Championship Tournament: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில், தென்னாப்பிரிக்கா வெற்றிக்காக 69 ரன்கள் மட்டுமே தேவை என்ற சூழல் உருவாகியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தப் போட்டியில், தென்னாப்பிரிக்கா டாஸ் வென்று முதலில் பந்து வீச்சைத் தேர்வு செய்தது. ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென்னாப்பிரிக்கா 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது.

WTC Final 2025: டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி.. வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா?
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 14 Jun 2025 08:23 AM

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் (World Test Championship Tournament) இறுதிப்போட்டியில் தென்னாப்பிரிக்கா அணி (South Africa) வெற்றி பெற இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் இன்றைய ஆட்டம் யாருக்கு சாதகமாக இருக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா (Team Australia) அணிகள் மோதிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 2025, ஜூன் 11 ஆம் தேதி லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் ஏற்கனவே 2 முறை டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றிய ஆஸ்திரேலியாவும், கிரிக்கெட்டில் தனக்கென சோகமான வரலாறை மட்டுமே வைத்துக் கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணியும் களம் கண்டது. பலரது எண்ணமும் எப்படியாவது தென்னாப்பிரிக்கா அணி டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தனது சோகமான வரலாறை மாற்ற வேண்டும் என இருந்தது.

தென்னாப்பிரிக்கா – ஆஸ்திரேலியா அணிகள்

இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வதாக அறிவித்தது. அதன்படி களம் கண்ட ஆஸ்திரேலியா அணியில் பியூ வெப்ஸ்டர் 72 ரன்களும், ஸ்டீவ் ஸ்மித் 66 ரன்களும் விளாச மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டாயினர். இதனால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய தென்னாப்பிரிக்கா அணிக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி காத்திருந்தது.

அந்த அணியில் டேவிட் பெடிங்காம் 45 ரன்களும், கேப்டன் தெம்பா பவுமா 36 ரன்கள் மட்டுமே அதிகப்பட்சமாக எடுத்தனர்.மற்ற யாரும் பெரிதாக ரன் அடிக்காததால் முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்கா அணி 138 ரன்கள் ஆல் அவுட்டானது. இதனால் 74 ரன்கள் முன்னிலைப் பெற்ற ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸை தொடங்கியது.

3வது நாள் ஆட்டத்தில் மாறிய முடிவுகள்


தென்னாப்பிரிக்கா அணியை ஆஸ்திரேலியா எளிதில் வீழ்த்தி விடும் என ரசிகர்களும் யூகிக்க தொடங்கினார். ஆனால் ஜூன் 13 ஆம் தேதி நடைபெற்ற 3ஆம் நாள் ஆட்டம் வேறு மாதிரியாக மாறியது. தென்னாப்பிரிக்கா அணி வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் களத்துக்கு வந்த சில நிமிடங்களிலேயே அவுட்டாவதுமாக இருந்தனர். அந்த அணியில் மிட்செல் ஸ்டார்க் 53 ரன்களும், விக்கெட் கீப்பர் அலெக்ஸ் கேரி 43 ரன்களும் எடுக்க 2வது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 207 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனால் முதல் இன்னிங்ஸ் முன்னிலையுடன் சேர்த்து தென்னாப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் டார்கெட் ஆக நிர்ணயிக்கப்பட்டது.

இதனையடுத்து 2வது இன்னிங்ஸை ஆட வந்த தென்னாப்பிரிக்காவில் தொடக்க ஆட்டக்காரர் ரியான் ரிக்கெட்சன் 6 ரன்களில் ஆட்டமிழந்தார். அதேபோல் வியான் முல்டரும் 27 ரன்களில் பெவிலியன் திரும்ப ஆஸ்திரேலிய வீரர்கள் சற்று சந்தோஷப்பட்டனர். ஆனால் மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான எய்டன் மார்க்ரம், கேப்டன் தெம்பா பவுமா இருவரும் நிதானமாக ஆடி விக்கெட்டுகளை இழக்காமல் பார்த்துக் கொண்டனர். மார்க்ரம் சதமடித்தார். பவுமாவும் தன் பங்குக்கு அரைசதம் அடித்தார்.

வரலாறு படைக்குமா தென்னாப்பிரிக்கா?

3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் தென்னாப்பிரிக்கா அணி 2 விக்கெட்டுகளை இழந்து 213 ரன்கள் எடுத்துள்ளது. எய்டன் மார்க்ரம், தெம்பா பவுமா இருவரும் களத்தில் இருப்பதால் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. தென்னாப்பிரிக்கா அணி வெற்றிக்கு 69 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா வெற்றி பெற 8 விக்கெட்டுகளை கைப்பற்ற வேண்டிய நிலை உள்ளது.