Vastu Tips: வீட்டில் சிவப்பு நிற பூச்செடி இருக்கா? – உடனே இதைப் பண்ணுங்க!
வாஸ்து சாஸ்திரப்படி, சிவப்புப் பூச்செடிகள் வீட்டில் நேர்மறை ஆற்றலைக் கொண்டுவரும். ஆனால், அவற்றை வைக்கும் திசை மிகவும் முக்கியம். கிழக்கு திசையில் வைப்பது ஆரோக்கியத்தையும், நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும். சரியான திசையில் வைப்பதன் மூலம் நல்ல பலன்களைப் பெறலாம் என சொல்லப்பட்டுள்ளது.

வாஸ்து சாஸ்திரம் என்பது ஆன்மிக ரீதியாகவும், ஜோதிட ரீதியாகவும் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. நிலத்தை அடிப்படையாக கொண்ட வாஸ்து விதிகள் வாழ்க்கையில் பல்வேறு விதமான மாற்றங்களை ஏற்படுத்தும் என நம்பப்படுகிறது. இத்தகைய விதிகள் வீட்டின் வாசல் தொடங்கி சமையலறை, படுக்கையறை, ஹால், தோட்டம் என பல்வேறு இடங்களுக்கும் எழுதப்பட்டுள்ளது. அதேபோல் அலுவலகத்தில் பின்பற்ற வேண்டியவை குறித்தும் சாஸ்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் வீட்டில் தோட்டம் அமைப்பது என்பது பலருக்கு மிகவும் பிடித்தமான பொழுதுபோக்கு விஷயமாகும். ஆனால் அதில் சிவப்பு நிற பூக்கும் செடியை வளர்ப்பது வாஸ்து சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது பற்றிக் காணலாம்.
சரியான திசையில் வைக்க வேண்டும்
பொதுவாக வீட்டில் சிவப்பு நிறத்தில் பூக்கும் செடி இருப்பது நேர்மறையான எண்ணமாகவே பார்க்கப்படுகிறது. அது வீட்டின் மகிழ்ச்சியும் அமைதியும் உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிப்பதாக சொல்லப்படுகிறது. அதேசமயம் இவை வேண்டும் என்றால் அந்த செடியானது சரியான திசையில் வைக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. சிவப்பு நிறமானது ஆற்றல், மகிழ்ச்சி, அன்பு மற்றும் நெருப்பின் அடையாளமாக கருதப்படுகிறது. அப்படியான செடியை எந்த திசையில் வைத்தால் என்ன பலன்கள் கிடைக்கும் என சொல்லப்பட்டுள்ளது.
எந்த திசையில் வைத்தால் என்ன பலன்?
வாஸ்து சாஸ்திரத்தின் படி, கிழக்கு திசையானது சூரியனுடன் நெருங்கிய தொடர்புடையதாகும். இது வளர்ச்சி மற்றும் புதிய தொடக்கங்களின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இங்கு சிவப்பு நிற பூச்செடியை வைப்பது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது. இது குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல் நேர்மறை ஆற்றலையும் அதிகரிக்கும் என நம்பப்படுகிறது.
அதேசமயம் மேற்கு திசையானது சனி கிரகத்துடன் தொடர்புடையது. எனவே எக்காரணம் கொண்டும் அங்கு ஒரு சிவப்பு செடியை வைப்பது சாதகமான பலன்களை தராது என நம்பப்படுகிறது. இது பல நேரங்களில் மன அழுத்தத்தையோ அல்லது உறவுகளில் விரிசலையோ ஏற்படுத்தக்கூடும் என சொல்லப்படுகிறது.
வடக்கு திசையைப் பொறுத்தவரை அது தண்ணீருடன் தொடர்புடையது. மேலும் செல்வம் மற்றும் பல்வேறு விதமான வாய்ப்புகளை உருவாக்கும் அடையாளமாகவும் பார்க்கப்படுகிறது. எனவே இந்த இடத்தில் சிவப்பு நிற பூக்கும் செடியை வைப்பது தவறானதாகும். சிவப்பு என்பது நீர் உறுப்புடன் பொருந்தாத நிறம் என்பதால் அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.
நிலத்தின் தெற்கு திசை நெருப்புடன் தொடர்புடையது. அங்கு சிவப்பு நிற பூக்கும் செடியை வைப்பது ஆற்றல் ஓட்டத்தை சமநிலைப்படுத்த உதவும் என சொல்லப்பட்டுள்ளது. ஆனாலும், இந்த திசையில் அதிகமாக சிவப்பு நிறத்தைப் பயன்படுத்துவது சில நேரங்களில் அதிக வெப்பம் அல்லது எரிச்சல் போன்ற பிரச்சனைகளை உண்டாக்கலாம். எனவே நல்லது என நினைத்து அதிக எண்ணிக்கையில் செடிகளை வைக்காதீர்கள்.
(வாஸ்து அடிப்படையில் கூறப்பட்டிருக்கும் தகவல்கள் செய்திகளில் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பில்லை)