Vaikasi Amavasya: பலன்களை அள்ளித்தரும் வைகாசி அமாவாசை விரதம்!
வைகாசி அமாவாசை 2025 மே 26 அன்று வருகிறது. முன்னோர் வழிபாடு, தர்ப்பணம், தானம் போன்றவற்றிற்கு இது சிறந்த நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் காகங்களுக்கு உணவு வைப்பதும் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. வணிகர்கள் மற்றும் உடல்நலம் குன்றியவர்கள் அமாவாசை நாளில் பரிகாரம் செய்யலாம் என சொல்லப்படுகிறது.
இந்து மதத்தைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் 14 வகையான திதிகள் வருகிறது. அமாவாசை மற்றும் பௌர்ணமி தவிர்த்து பிற திதிகள் இரண்டு காலங்களிலும் வருகிறது. அமாவாசை என்றால் பலருக்கும் வானில் நிலவு இருக்காது. அன்றைக்கு இருட்டாக இருக்கும் என்பது தான் சொல்ல தோன்றும். ஆனால் ஆன்மிகத்தைப் பொறுத்தவரை அமாவாசை முன்னோர்களுக்கான நாளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நாளில் நாம் வீட்டில் மறைந்த முன்னோர்களை வழிபட்டால் பல நன்மைகளைப் பெறலாம் என சொல்லப்படுகிறது. அந்த வகையில் திதி, தர்ப்பணம், தானம் செய்வது, வீட்டில் முன்னோர்களுக்கு பிடித்தவற்றை படைத்து வழிபடுவது ஆகியவை அமாவாசை நாளில் மேற்கொள்ளலாம் என சொல்லப்பட்டுள்ளது. அப்படியான நிலையில் வைகாசி மாதம் அமாவாசையில் கடைபிடிக்க வேண்டிய விரதம் பற்றிப் பார்க்கலாம்.
வைகாசி அமாவாசை எப்போது?
2025ஆம் ஆண்டுக்கான வைகாசி மாத அமாவாசை மே 26 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் முற்பகல் 11.31 மணிக்கு தொடங்கும் அமாவாசை திதியானது, 2025 மே 27 ஆம் தேதி காலை 9.09க்கு முடிவடைகிறது. திங்கட்கிழமை வருவதால் சிவபெருமானுக்குரிய விஷேச தினமாகவும் இருப்பதால் இந்நாள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.
விரதம் மேற்கொள்வது எப்படி?
வைகாசி மாத அமாவாசை நாளில் அதிகாலையில் எழுந்து வீட்டில் புனித நீராட வேண்டும். ஒருவேளை அருகில் நீர்நிலைகள் இருந்தால் அங்கும் சென்றும் நீராடலாம். பின்னர் இந்நாளில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க வேண்டும் என நினைப்பவர்கள் நீர்நிலைகளில் அதனை மேற்கொள்ளலாம். ஒருவேளை திதி அல்லது தர்ப்பணம் செய்ய இயலாதவர்கள் இந்த நாளில் உங்கள் வீட்டிலேயே முன்னோர்களை வழிபடலாம். பின்னர் கருப்பு மற்றும் வெள்ளை எள் கலந்த சாதத்தை காகங்களுக்கு உணவாக வைத்து விட்டால் போதும். சாஸ்திரத்தில் காகங்கள் நம்முடைய முன்னோர்களாக கருதப்பட்டு வருகிறது.
தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டு வருபவர்கள், நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த வைகாசி அமாவாசை நாளில் பூசணிக்காய் வாங்கி திருஷ்டி கழிக்கலாம். மேலும் தர்ப்பணம் கொடுக்க நினைப்பவர்கள் மே 26 ஆம் தேதி காலை 11.30 மணிக்குத்தான் அமாவாசை திதி வருகிறது என நினைத்து மே 27ஆம் தேதி காலையில் கொடுக்கலாம் என முடிவு செய்யக்கூடாது. அமாவாசை என குறிப்பிடப்பட்டுள்ள நாளில் காலை 6 மணியிலிருந்து 12 மணிக்குள் நீங்கள் தர்ப்பணம் செய்து குடுக்கலாம்.
முன்னோர் வழிபாட்டால் கிடைக்கும் பலன்
வீட்டில் இறந்தவர்களின் புகைப்படத்தை வைத்து அவர்களுக்கு முன்னால் வாழை இலை விரித்து அதில் பிடித்தமான உணவுப் பொருள்களை எல்லாம் படைத்து வழிபட வேண்டும். இதன் மூலம் முன்னோர்கள் திருப்தி அடைவார்கள் என்பது நம்பப்படுகிறது. மேலும் நம்முடைய குலம் செழித்து வளரவும், குடும்பத்திற்கு ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கவும் முன்னோர் வழிபாடு மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் முன்னோர் வழிபாட்டால் நிம்மதியான சூழல், திருமண நிகழ்ச்சி, புத்திர பாக்கியம், வியாபாரத்தில் வளர்ச்சி, குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்கும் நிலை, உடல் ஆரோக்கியம், சிறந்த பொருளாதார நிலை ஆகியவை ஏற்படும் என்பது நம்பிக்கையாக உள்ளது.
(ஆன்மிகத்தின் நம்பிக்கையின்படி சொல்லப்பட்டுள்ள தகவல்கள் அடிப்படையில் இந்த செய்தியானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)