Our Lady of Snows: தூத்துக்குடி பனிமயமாதா திருவிழா.. கொடியேற்றத்துடன் கோலாகல தொடக்கம்!
தூத்துக்குடி பனிமயமாதா பேராலயத்தின் 443வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 16ம் நூற்றாண்டு போர்ச்சுகீசிய கட்டிடக்கலையில் கட்டப்பட்ட இந்த ஆலயம், மத நல்லிணக்கத்தின் அடையாளமாக விளங்குகிறது. ஆண்டுதோறும் நடைபெறும் இந்த விழாவில் உள்ளூர் முதல் வெளிநாடு வரையிலான லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பது சிறப்பானதாகும்.

உலக புகழ்பெற்ற தூத்துக்குடி (Thoothukudi) மாவட்டத்தில் அமைந்துள்ள பனிமயமாதா பேராலயத்தின் (Our Lady Of Snow Church) திருவிழாவானது கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதற்கு ஏற்ப இங்கு திரும்பும் திசையெங்கும் பல்வேறு மதங்களின் வழிபாட்டு தலங்கள் உள்ளது. அதைவிட மக்கள் அனைவரும் மத நல்லிணக்கத்தை பேணும் வகையில் பிற மதங்களின் மீது மதிப்பும், அவர்களின் கொண்டாட்டங்களில் பங்களிப்பும் கொண்டிருக்கின்றனர். அதற்கு எடுத்துக்காட்டாக திகழும் நிகழ்வுகளில் ஒன்று தான் பனிமயமாதா பேராலயத்தின் திருவிழாவாகும். போர்ச்சுகீசிய கட்டிடக்கலை பாணியில் 16ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த ஆலயம் 1982ம் ஆண்டு 400வது திருவிழாவை கொண்டாடியது. அதன்பின் பேராலயமாக உயர்த்தப்பட்டது. இப்படியான நிலையில் தற்போது 2025ம் ஆண்டு 443வது பேராலய திருவிழாவானது கொண்டாடப்படுகிறது.
Also Read: வாகன ஓட்டிகளே அலர்ட்.. தூத்துக்குடியில் போக்குவரத்து மாற்றம்.. முக்கிய ரூட் இதுதான்!
வெகுவிமரிசையாக நடைபெற்ற கொடியேற்றம்
இதனிடையே 2025ம் ஆண்டுக்கான பனிமயமாதா பேராலயத்தின் திருவிழா கொடியேற்றம் இன்று (ஜூலை 26) வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக நேற்று (ஜூலை 25) மாலை பேராலய வளாகத்தில் சிறப்பு திருப்பலியானது நடைபெற்றது. தொடர்ந்து தூத்துக்குடி மறைவட்ட முதன்மை குரு பென்சன் தலைமையில் திருச்சிலுவை சிற்றாலயம் முன்பு இருந்து 6 மணியளவில் கொடி பவனியானது நடைபெற்றது. பனிமயமாதா அன்னையின் திருவுருவம் பதித்த கொடியை காண வழியெங்கும் ஏராளமான மக்கள் கூடியிருந்தனர்.
அதேபோல் பக்தர்கள் நேர்த்திக்கடனாக செலுத்தும் கொடிகள், கல்வி உபகரணங்கள் என அனைத்தையும் இந்த கொடி பவனியின்போது எடுத்து செல்லப்பட்டது. இந்த பவனியானது செயின்ட் பீட்டர் தெரு, மணல் தெரு வழியாக மீண்டும் பேராலயத்தை வந்தடைந்தது. இதனைத் தொடர்ந்து இன்று (ஜூலை 26) 7 மணிக்கு ஆயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற நிலையில் கொடியேற்றம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மறை மாவட்ட பிஷப் ஸ்டீபன் தலைமையில் கூட்டு திருப்பலியானது நடைபெற்றது.
12 நாட்கள் நடைபெறும் விழாவில் 2025, ஆகஸ்ட் 3ம் தேதி நற்கருணை பவனி நடக்கவுள்ளது. அதேபோல் ஆகஸ்ட் 4ம் தேதி இரவு 9 மணிக்கு பேராலய வளாகத்தில் அன்னையின் திருவுருவ பவனி, ஆகஸ்ட் 5ல் தூத்துக்குடி நகர வீதிகளில் திருவுருவ பவனியும் நடைபெறும். இதில் திரளான மக்கள் கலந்து மத வேறுபாடின்றி பனிமயமாதா அன்னையை வரவேற்பார்கள்.
Also Read: Vastu Tips: குடும்ப ஆரோக்கியம்.. கவனிக்க வேண்டிய 8 வாஸ்து விஷயம்!
உள்ளூர் விடுமுறை – போக்குவரத்து மாற்றம்
இப்படியான நிலையில் விழாவின் சிகர நிகழ்ச்சியாக ஆகஸ்ட் 5ல் நடைபெறும் பனிமயமாதா அன்னையில் நகர வீதியுலாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. மாற்று வேலை நாளாக ஆகஸ்ட் 9ம் தேதி சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் போக்குவரத்து மாற்றமும் அமலுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த வாரம் தூத்துக்குடி மாவட்டத்தின் பிரதிநிதியாக திகழும் அமைச்சர் கீதாஜீவன் தலைமையில் பேராலய திருவிழா குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த விழாவுக்கு வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் மக்கள் வருகை தருவார்கள் என்பதால் பலத்த பாதுகாப்பானது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.