AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பங்குனி பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம்…. எப்போது செல்லலாம்…?

Tiruvannamalai Girivalam: திருவண்ணாமலை கிரிவலம் சிவனை நேரடியாக வணங்கும் புண்ணிய வழிபாடாக கருதப்படுகிறது. பங்குனி பௌர்ணமி 2026 அன்று கிரிவலம் செய்வது சிறப்பு பலன்களை தரும் என நம்பப்படுகிறது. குறிப்பாக புதன்கிழமை மற்றும் உத்திர நட்சத்திரத்தில் கிரிவலம் செய்வதால் கல்வி, ஞானம் மற்றும் தொழில் வளர்ச்சி கிடைக்கும்.

பங்குனி பௌர்ணமியில் திருவண்ணாமலை கிரிவலம்…. எப்போது செல்லலாம்…?
திருவண்ணாமலையில் கிரிவலம் வர உகந்த நேரம்Image Source: tv9
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 01 Apr 2026 11:44 AM IST

திருவண்ணாமலை என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கிரிவலம் வழிபாடு தான். பஞ்சபூத தலங்களில் நினைத்தாலே முக்தி தரும் புண்ணிய தலமான திருவண்ணாமலை தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான, பழமையான சிவாலயங்களில் ஒன்றாகும். ஆன்மீக பூமி, சித்தர்களின் பூமி என போற்றப்படும் திருவண்ணாமலையில் சிவனே மலையாக வீற்றிருப்பதாக ஐதீகம். அதனால் இங்கு மலையை வலம் வந்து வழிபடுவது சிறப்புக்குரியதாக கருதப்படுகிறது. இது சிவனையே வலம் வந்து வழிபட்டதற்கு சமமாக கருதப்படுகிறது. திருவண்ணாமலை கிரிவல பாதையில் 92 கோவில்கள் உள்ளன. இதைத் தவிர ஜீவ சமாதிகள், குளங்கள், சித்தர்கள் தவம் செய்த குகைகள் என பல ஆன்மீக இடங்களும் அமைந்துள்ளன.

கிரிவலம் செல்லும் நேரம் மற்றும் அதன் முக்கியத்துவம்

திருவண்ணாமலையில் வருடத்தின் 365 நாட்களும், 24 மணி நேரமும் கிரிவலம் செல்லலாம் என்றாலும் சில குறிப்பிட்ட நாள், நேரத்தில் கிரிவலம் வந்து வழிபடுவது மிக அதிகமான பலன்களை தரும் என சொல்லப்படுகிறது. கிழமை, திதி, நட்சத்திரம், மாதம், நேரம் ஆகியவற்றைப் பொருத்து நாம் கிரிவலம் செல்வதற்கான பலன் மாறும் என நம்பப்படுகிறது. இருந்தாலும் லட்சக்கணக்கான பக்தர்கள் பௌர்ணமி நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் ஒவ்வொரு மாதமும் எந்த நாளில் பௌர்ணமி வருகிறது, எப்போது கிரிவல வழிபாட்டை துவக்கி, எப்போது நிறைவு செய்ய வேண்டும் என்பதற்கான நேரத்தை அண்ணாமலையார் கோவில் நிர்வாகம் வெளியிட்டு வருகிறது.

பங்குனி பௌர்ணமி 2026 – கிரிவலம் நேர விவரம்

பங்குனி பௌர்ணமி 2026 ஆம் ஆண்டிற்கான கிரிவலம் நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பௌர்ணமி திதி ஏப்ரல் 01 காலை 07.38 மணிக்கு துவங்கி, ஏப்ரல் 02 காலை 07.57 மணிக்கு நிறைவடைகிறது. கிரிவலம் துவக்க வேண்டிய நேரம் ஏப்ரல் 01 காலை 07.23 என்றும், கிரிவலம் நிறைவு செய்ய வேண்டிய நேரம் ஏப்ரல் 02 காலை 07.44 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதாவது ஏப்ரல் 01ம் தேதி புதன்கிழமை காலை கிரிவலத்தை துவக்கி, ஏப்ரல் 02ம் தேதி வியாழக்கிழமை காலை கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும். பங்குனி பௌர்ணமி என்பது பங்குனி உத்திர திருநாளாக இருப்பதால், இந்த நாளில் கிரிவலம் செல்வதால் சிவபெருமானின் அருளுடன் முருகப் பெருமானின் அருளும் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

பங்குனி உத்திரம் கிரிவலம் – கிடைக்கும் பலன்கள்

புதன்கிழமையில் திருவண்ணாமலை கிரிவலம் செல்வது கல்வி, ஞானம் மற்றும் அறிவு விருத்தியைத் தரும் என நம்பப்படுகிறது. இந்த நாளில் கிரிவலம் வருவதால் புதன் கிரக தோஷங்கள் நீங்கி, நினைவாற்றல், புத்திசாலித்தனம் மற்றும் கல்வியில் சிறந்த முன்னேற்றம் ஏற்படும். வணிகம் மற்றும் தொழிலில் மேன்மை அடையவும், பேச்சுத்திறன் மேம்படவும் இது உதவும். குறிப்பாக உத்திர நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் பங்குனி உத்திரம் அன்று கிரிவலம் வருவதால் சூரியனின் அருள், யோக பலன்கள் ஆகியவை கிடைக்கும். வாழ்க்கையில் சவால்கள் இருந்தாலும் வெற்றி, மனநிம்மதி மற்றும் தொழில் வளர்ச்சி கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Also Read: வடபழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திரத் திருவிழா

உத்திர நட்சத்திரத்தின் சிறப்பு மற்றும் தெய்வ அருள்

27 நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரமாகும் உத்திரம் நட்சத்திரத்திற்கு அதிபதி சூரிய பகவான் ஆவார். இந்த நட்சத்திரத்திற்குரிய அதிர்ஷ்ட தெய்வம் மகாலட்சுமி என கருதப்படுகிறது. ஆரோக்கியம், உயர்ந்த பதவி, அதிகாரம், தலைமைத் திறன் ஆகியவற்றிற்கு காரணமானவர் சூரிய பகவான். அதேபோல் செல்வ வளத்தை வழங்குபவர் மகாலட்சுமி. ஆகவே உத்திரம் நட்சத்திர நாளில் திருவண்ணாமலையில் கிரிவலம் செய்வது சூரிய பகவானின் அருளும், மகாலட்சுமியின் அருளும் ஒரே நேரத்தில் கிடைக்க வழிவகுக்கும் என பக்தர்கள் நம்புகின்றனர்.

Follow Us