Sani Pradhosm: சனிப்பிரதோஷம் விரதம்.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி?

2025 ஆம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 24 ஆம் தேதிகளில் சனி பிரதோஷம் வருகிறது. சிவபெருமானுக்குரிய இந்த முக்கிய தினத்தில், கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே எளிமையாக வழிபடலாம். சூரிய உதயத்திற்கு முன் நீராடி, வீட்டை சுத்தம் செய்து, பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்யலாம்.

Sani Pradhosm: சனிப்பிரதோஷம் விரதம்.. வீட்டிலேயே மேற்கொள்வது எப்படி?

சனிப்பிரதோஷம்

Published: 

05 May 2025 17:32 PM

இந்து மதத்தை பொருத்தவரை ஏராளமான விசேஷ தினங்கள் உள்ளது. ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு மாதத்தில் ஒவ்வொரு திதியில் இந்த விசேஷ தினங்கள் ஆவது கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் பிரதோஷம் என்பது சிவபெருமானுக்குரிய (Lord Shiva) முக்கிய தினங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு மாதத்திலும் வளர்பிறை மற்றும் தேய்பிறையில் வரும் திரயோதசி திதியில் பிரதோஷமானது கொண்டாடப்படுகிறது. பிரதோஷ காலம் என்பது மாலை 4:30 மணி முதல் 6 மணி வரை ஆகும். இந்த நேரத்தில் சிவன் கோயிலில் நடைபெறும் வழிபாட்டில் கலந்து கொண்டால் வாழ்க்கையில் பல நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது.

இப்படியான பிரதோஷமானது ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு தினத்தில் வரும். ஒவ்வொரு கிழமைக்கும் ஒரு தனி சிறப்பு என்பது உள்ளது. அந்த வகையில் சனி பிரதோஷம் (Sani Prodhosam) என்பது மிகவும் சக்தி வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு மே மாதம் 10 மற்றும் 24ஆம் தேதி சனி பிரதோஷம் கடைபிடிக்கப்படுகிறது. இப்படியான நிலையில் இந்த சனிப்பிரதோஷ தினத்தில் சிலர் விரதம் இருந்து வழிபடுவார்கள். அதனைப் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம்.

வீட்டில் இருந்து வழிபடுவது எப்படி?

சனிக்கிழமையில் வரும் பிரதோஷத்தில் விரதம் இருந்து வழிபட்டால் நாம் நினைத்தது அனைத்தும் விரைந்து ஈசனால் நிறைவேற்றப்படும் என்பது நம்பிக்கையாக பார்க்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் சிலரால் கோயிலுக்கு சென்று வழிபட முடியாத சூழல் ஏற்படலாம். அவர்கள் வீட்டில் இருந்து பின்வரும் வழிமுறைகளை பின்பற்றி எளிதாக விரதம் இருந்து வழிபடலாம்.

சனிப்பிரதோஷம் அன்று காலையில் சூரிய உதயத்திற்கு முன் எழுந்து புனித நீராட வேண்டும். முடிந்தால் அருகில் உள்ள ஏதேனும் நீர்நிலைகளுக்கு சென்று நீராடினால் மிகவும் சிறப்பானதாகும். பிரதோஷத்திற்கு முந்தைய நாள் வீட்டின் அறைகள் மற்றும் பூஜை அறையை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அன்றைய நாளில் காலையில் வழக்கம் போல சாமி படங்களுக்கு பூ வைத்து விளக்கேற்றி வழிபட வேண்டும்.

பின்னர் விரதத்தை தொடங்கலாம். உடல்நல பாதிப்பு உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையை பெற்று உண்ணா நோன்பு அல்லது பால் மற்றும் பழம் எடுத்துக்கொண்டு விரதத்தை தொடரலாம். மாலையில் பிரதோஷ காலத்தில் ஒரு மனை பலகையில் சிவன் புகைப்படத்தை வைத்து அதற்கு ஆராதனைகள் செய்யலாம். சிவனின் படம் மட்டும் இருந்தால் அதற்கு சந்தனம், குங்குமம் வைத்து வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

மேலும் நெய் விளக்கு தீபமேற்றி தூபங்கள் காட்டி வழிபடலாம். இதனால் சிவனின் ஆசி கிடைப்பதோடு வீட்டில் நேர்மறை ஆற்றலும் பரவும் என்பது நம்பிக்கையாகும்.இந்த வழிபாட்டில் சிவனுக்கு மிகவும் பிடித்த வெள்ளை நிற இனிப்புகளை பிரசாதமாக வைக்கலாம். மேலும் வில்வ இலைகள் கட்டாயம் பூஜையில் இருக்க வேண்டும். வழிபாட்டின் போது சிவனுக்குரிய மந்திரங்கள் அல்லது பாடல்களை பாடி சிறப்பிக்கலாம். மனதார சிவனிடம் நமது கோரிக்கைகளை எல்லாம் முறையிட்டு பின் படைக்கப்பட்ட உணவுகளை மற்றவர்களுக்கும் பகிர்ந்து நாமும் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

(ஜோதிட மற்றும் ஆன்மிக நம்பிக்கையின்படி இந்த தகவலானது கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)