AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Panguni Uthiram: திருமணத் தடை நீங்க பங்குனி உத்திர விரதம்…

Panguni Uthiram Fasting: பங்குனி உத்திரம் தெய்வத் திருமண தினமாக சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து சிவன், முருகனை வழிபட்டால் திருமணத் தடைகள் நீங்கும் என நம்பிக்கை. கோவில்களில் திருக்கல்யாணம், வீதியுலா போன்ற விழாக்கள் நடைபெறும். குலதெய்வ வழிபாடு மற்றும் தானங்கள் செய்வது மிகுந்த பலனை தரும்.

Panguni Uthiram: திருமணத் தடை நீங்க பங்குனி உத்திர விரதம்…
திருமணத் தடை நீங்க பங்குனி உத்திர விரதம்Image Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 31 Mar 2026 16:28 PM IST

பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும், பௌர்ணமியும் சேர்ந்து வரும் நாளே பங்குனி உத்திரமாகும். தெய்வத் திருமணங்கள் நடைபெற்ற நாள், பங்குனி உத்திர திருநாளாகும். இந்த நாளில் விரதம் இருந்து சிவபெருமானை கல்யாண சுந்தரமூர்த்தியாக வழிபடுவது வழக்கம். நல்ல மணவாழ்க்கை வேண்டுவோர் இந்நாளில் சிவபார்வதியை வேண்டி விரதம் மேற்கொள்வர். இவ்விரதத்தினை முருகப்பெருமானை வேண்டியும் மேற்கொள்ளலாம்.

திருமண தடைகள் நீங்கும் நம்பிக்கை

சிறப்புமிக்க இந்த நாளில் விரதம் இருந்து தெய்வ வழிபாட்டை மேற்கொண்டால் திருமணத் தடைகள் நீங்கி விரைவில் திருமணம் நடைபெறும் என்பது ஐதீகம். பக்தர்களிடையே இந்த நம்பிக்கை மிகவும் வலுவாக உள்ளது. பலரும் தங்கள் வாழ்க்கையில் நல்ல துணையை பெற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த விரதத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.

2026ம் ஆண்டு பங்குனி உத்திர விழா ஏற்பாடுகள்

இந்த ஆண்டு நாளை (1.4.2026) பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், திருக்கல்யாண உற்சவங்கள், சுவாமி வீதியுலா நிகழ்ச்சிகள் விமரிசையாக நடைபெறும். மாநிலம் முழுவதும் உள்ள சிவன் மற்றும் முருகன் கோவில்களில் பக்தர்கள் பெருமளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குல தெய்வ வழிபாட்டின் சிறப்பு

அதேபோல் குல தெய்வ வழிபாட்டிற்கும் உகந்த நன்னாளாக பங்குனி உத்திரம் அமைந்துள்ளது. மற்ற நாட்களில் குல தெய்வ கோவில்களுக்கு போக முடியாவிட்டாலும் இந்த ஒரு நாளிலாவது குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவது மிகுந்த பலனைத் தரும் என்பது நம்பிக்கை. குல தெய்வ கோவில் பூஜைகளுக்கு முடிந்த உதவிகளை செய்யலாம், நன்கொடைகளை வழங்கலாம்.

விரதம் இருப்பது எப்படி?

பங்குனி உத்திர விரதத்தை சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனுஷ்டிக்கலாம். விரதம் இருப்பவர்கள் அதிகாலையில் எழுந்து நீராடிவிட்டு, புதிய உடை அணிந்துகொண்டு பூஜையறையில் முருகப்பெருமான், சிவன் – பார்வதி படத்துக்கு பூக்களால் அலங்காரம் செய்ய வேண்டும். பின்பு விளக்கேற்றி, பூஜை செய்து விரதத்தை தொடங்க வேண்டும்.

பாராயணம் மற்றும் மந்திர உச்சரிப்பு

கந்தசஷ்டி கவசம், திருமுருகாற்றுப்படை, திருப்புகழ், சிவபுராணம் போன்றவற்றை பாராயணம் செய்து வழிபடலாம். அன்றைய தினம் முழுவதும் முருகப்பெருமானுக்குரிய ‘ஓம் சரவண பவ’ என்ற மந்திரத்தை உச்சரிப்பது விசேஷம். இது மன அமைதியையும் ஆன்மிக நிறைவையும் தரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

Also Read: பங்குனி உத்திரம்.. நாள் முழுவதும் விரதம் இருப்பது எப்படி? கடைப்பிடிக்க வேண்டியவை..

அபிஷேகம் மற்றும் விரத நிறைவு முறைகள்

திருமணக் கோலத்தில் இருக்கும் சிவபெருமான் – பார்வதி தேவிக்கு அபிஷேகம், ஆராதனை செய்தும் வழிபடலாம். விரதம் இருக்கும் நாளில், உணவு எதுவும் சாப்பிடாமல் முழு உண்ணாவிரதம் இருப்பது சிறந்தது. இயலாதவர்கள் பகலில் ஒரு வேளை மட்டும் உணவு சாப்பிடலாம். வயதானவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள் பால், பழம் போன்றவற்றை சாப்பிடலாம்.

கோவில்களுக்கு சென்று அர்ச்சனை செய்து, இறைவனிடம் கோரிக்கைகளை முன்வைத்து பிரார்த்தனை செய்யலாம். நாள் முழுவதும் விரதம் இருந்து, மாலையில் முருகன் அல்லது சிவன் கோவிலுக்கு சென்று இறைவனை வழிபட்டு, இரவில் பால், பழம் சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம்.

Follow Us