Mahalaya Amavasya: மகாளய அமாவாசை.. வீட்டில் படையலிட உகந்த நேரம் எது?
மகாளய அமாவாசை 2025 செப்டம்பர் 21 ஞாயிற்றுக்கிழமை வருகிறது. முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், வழிபாடு செய்வதற்கு மிகவும் முக்கியமான நாள் இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். அன்று காலை 6 முதல் 12 மணிக்குள் நீர்நிலையில் திதி தர்ப்பணம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து சாஸ்திரத்தில் அமாவாசை என்பது முன்னோர்கள் வழிபாட்டிற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. 12 மாதங்களில் வரும் அமாவாசையில் ஆடி, தை, புரட்டாசி ஆகிய மாதங்களின் அமாவாசை மிக முக்கியமானது. அந்த வகையில் புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. இந்த நாள் அமாவாசைகளில் மிகப்பெரிய அமாவாசையாக பார்க்கப்படுகிறது. இன்றைய நாளில் நாம் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம், விரமிருந்து வழிபாடு ஆகியவற்றை மேற்கொண்டால் அதன் பலன்கள் நம்முடைய 7 தலைமுறைகளுக்கும் இருக்கும் என நம்பப்படுகிறது. மஹாளய அமாவாசை நாளில் சூரியன் உதிக்கும் காலை 6 மணிக்கு தொடங்கி முற்பகல் 12 மணிக்குள் அருகில் இருக்கும் ஏதேனும் நீர்நிலைகளில் நாம் திதி, தர்ப்பணம் மேற்கொள்ள வேண்டும்.
வீட்டில் படையல் போட உகந்த நேரம்
அதேசமயம் வீட்டில் முன்னோர்கள் புகைப்படத்திற்கு முன் படையல் போடுவதற்கான நேரமாக காலை 11 மணி முதல் 11.45 மணி வரை சொல்லப்பட்டுள்ளது. ஒருவேளை மதியம் வழிபாடு செய்கிறீர்கள் என்றால் படையல் போடும் நேரமாக 1.35 முதல் 2 மணி வரை குறிக்கப்பட்டுள்ளது. இந்த முறை சூரிய பகவானுக்கு உகந்த ஞாயிற்றுக்கிழமை மஹாளயா அமாவாசை வருவது ஒரு சிறப்பாக பார்க்கப்படுகிறது.
Also Read: ஒரே இடத்தில் காசி, ராமேஸ்வரம் சென்ற பலன்.. இந்த கோயில் தெரியுமா?




அதனால் விடுமுறை நாள் என்பதால் கண்டிப்பாக முன்னோர் வழிபாட்டில் அனைவரும் ஈடுபட்டு அதற்கான பலன்களை பெற வேண்டும். திதி, தர்ப்பணம் மற்றும் விரதம் இருப்பவர்கள் அதனை முடிக்கும் வண்ணம் படையல் போடுவதற்கு முன்னதாகவோ அல்லது மாலை நேரத்திலேயே அருகில் உள்ள ஏதேனும் ஒரு கோயிலுக்கு சென்று வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.
அதேபோல் வீட்டில் முன்னோர் புகைப்படம் இருந்தால் அதற்கு முன் வாழையிலை விரித்து அவர்களுக்கு பிடித்த பொருள்களை எல்லாம் படையலாக வைக்கலாம். ஒருவேளை புகைப்படம் இல்லை என்றால் அவர்கள் பயன்படுத்திய உடை இருந்தால் உபயோகித்துக் கொள்ளலாம். அதுவும் இல்லை என்றால் ஒரு இலையை முன்னோராக நினைத்து வழிபடலாம். உங்களுக்கு வழக்கமான இடங்களில் இந்த சடங்குகளைப் பின்பற்றலாம்.
மாலை, ஊதுபத்தி போன்ற நறுமணப் பொருட்களை வழிபாட்டின்போது பயன்படுத்தலாம். நாட்டு காய்கறிகளை பயன்படுத்தி முன்னோர்களுக்கு பிடித்தவற்றை சமைக்க வேண்டும். மேலும் இந்த படையல் சைவமாக தான் இருக்க வேண்டும். பெண்கள் புகுந்த வீட்டில் தங்களுடைய பெற்றோருக்கு படையலிட முடியவில்லை என வருத்தப்படுவார்கள். நீங்கள் இன்றைய நாளில் காகம், பசு போன்ற உயிரினங்களுக்கு உணவு படைக்கலாம்.
Also Read: பித்ரு பக்ஷ காலம்.. வீட்டில் இதெல்லாம் இருந்தால் நல்லதல்ல
அமாவாசை நாளில் நீங்கள் திதி, தர்ப்பணம் போன்றவை சூழல் காரணமாக மேற்கொள்ள முடியாமல் போனாலும் பரவாயில்லை. குறைந்தது 2 பேருக்காவது உணவு வாங்கி கொடுங்கள். அது நம்முடைய வினைகளை நீக்கி எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)