Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Mahalaya Amavasya: மஹாளய அமாவாசை.. என்ன செய்யலாம்?.. என்ன செய்யக்கூடாது?

புரட்டாசி மாத அமாவாசை, மஹாளய அமாவாசை என அழைக்கப்படுகிறது. இது முன்னோர் வழிபாட்டிற்கு மிகவும் முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. இந்நாளில் திதி தர்ப்பணம், வீட்டு வழிபாடு, தர்மம் செய்வது போன்றவற்றைச் செய்ய வேண்டும். இந்த நாள் முன்னோர்களுடனான நம் பிணைப்பை வலுப்படுத்த உதவும் என்பது ஐதீகமாகும்.

Mahalaya Amavasya: மஹாளய அமாவாசை.. என்ன செய்யலாம்?.. என்ன செய்யக்கூடாது?
மஹாளய அமாவாசை
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 18 Sep 2025 10:09 AM IST

இந்து மதத்தில் அமாவாசை மிக முக்கியமான நாளாக பார்க்கப்படுகிறது. மாதம் ஒருமுறை வரும் இந்த திதியானது முன்னோர்கள் வழிபாட்டிற்கு என அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. ஓராண்டின் வரும் 12 அமாவாசைகளில் ஆடி, புரட்டாசி மற்றும் தை மாதங்களில் வரும் அமாவாசை மிக முக்கியமானதாக பார்க்கப்படுகிறது. மரணித்து பித்ரு உலகத்திற்கு செல்லும் நம்முடைய முன்னோர்கள் ஆடி மாதம் மீண்டும் நம்மை காண பூலோகத்திற்கு புறப்படுவார்கள். புரட்டாசியில் நம்மிடையே இணைவார்கள். மீண்டும் தை மாதத்தில் பித்ரு உலகத்திற்கு புறப்பட்டு சென்று விடுவார்கள் என்பது ஐதீகமாக பார்க்கப்படுகிறது. இந்த அமாவாசை நாளில் நாம் திதி, தர்ப்பணம் அல்லது முன்னோர் வழிபாடு மேற்கொண்டால் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில் புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை மஹாளய அமாவாசை என சொல்லப்படுகிறது. அதாவது இதுதான் 12 அமாவாசைகளில் மிகப்பெரியதாகும். 2025 ஆம் ஆண்டு மஹாளய அமாவாசை செப்டம்பர் 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. அந்த நாளில் நாம் என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்பது பற்றி காணலாம்.

இந்த நாளில் செய்ய வேண்டியவை

மஹாளய அமாவாசை நாளில் முன்னோர் வழிபாட்டில் கண்டிப்பாக ஈடுபட வேண்டும். அருகில் இருக்கும் நீர் நிலைகள் அல்லது கோயில் குளங்களில் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் ஆகியவை செய்ய வேண்டும். தொடர்ந்து வீட்டில் முன்னோர்களின் படங்களுக்கு மாலையிட்டு அவர்கள் முன் பிடித்த பொருள்களை படையலிட்டு வணங்க வேண்டும். இன்றைய நாளில் முன்னோர் வழிபாடு செய்து முடித்தவுடன் மாலையில் அருகில் இருக்கும் கோயிலுக்கு சென்று வழிபடலாம்.

இந்த நாளில் ஏழைகளுக்கும், பொருளாதாரத்தால் நலிவடைந்தவர்களுக்கும் தேவையான உதவிகளையும் செய்யலாம். உணவு தானம் அளிக்கலாம். விரதம் இருப்பவர்கள் கண்டிப்பாக காகத்திற்கு உணவளித்து விட்டு தான் சாப்பிட வேண்டும். மேலும் வழிபாட்டின் போது முன்னோர்கள் தங்களை காக்க வேண்டும் என வணங்க வேண்டும்.

அமாவாசை நாளில் செய்யக்கூடாதவை

பொதுவாக புரட்டாசி மாதம் அசைவம் பெரும்பாலானவர்களால் தவிர்க்கப்படுகிறது என்றாலும் அமாவாசை ஞாயிற்றுக்கிழமை வருகிறது. எனவே அன்றைய நாள் கண்டிப்பாக அசைவம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் வெளியிலும் சுப காரியங்களில் ஈடுபட வேண்டாம். முடி மற்றும் நகங்களை வெட்டுவதை தவிர்க்கவும். புதிய தொழில்கள் தொடங்க வேண்டாம். கோபமாக பேசுவது, சண்டையிடுவது போன்ற காரியங்களில் ஈடுபட வேண்டாம்.

பகல் நேரங்களில் தூங்கக் கூடாது. விரதமிருப்பவர்கள், முன்னோர் வழிபாட்டில் ஈடுபடுபவர்கள் முன்கூட்டியே சாப்பிடுவது, நீர் அருந்துவது போன்றவற்றை செய்யக்கூடாது.  இந்த நாளில் உணவை வீணாக்கக்கூடாது. மஹாளய அமாவாசை நாளில் நாம் செய்யும் சடங்குகள் வெறும் வழிபாடாக மட்டுமில்லாமல் முன்னோர்களை மதிக்கவும் அவர்களின் ஆசிகளை பெறவும் உதவும் என்பதை உணர வேண்டும். இந்த நாள் நமக்கும் முன்னோர்களுக்கும் இடையிலான பிணைப்பை உறுதி செய்யும் என்பது ஐதீகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(ஆன்மிக மற்றும் சாஸ்திர நம்பிக்கைகளின் அடிப்படையில் இக்கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)