மதுரையில் மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்.. பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!

Madurai Chithirai thiruvizha 2026: திருக்கல்யாணத்தை அடுத்து, இன்று இரவு 7:30 மணிக்கு சுந்தரேஸ்வரர் தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான 'தேரோட்டம்' நாளை காலை மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மதுரையில் மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் கோலாகலம்.. பக்தி பரவசத்தில் லட்சக்கணக்கான பக்தர்கள்!

மதுரை மீனாட்சி திருக்கல்யாணம்

Updated On: 

28 Apr 2026 09:45 AM

 IST

உலகப்புகழ் பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி – சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண வைபவம் இன்று காலை பக்தி பரவசத்துடன் மிகச்சிறப்பாக நடந்தது. மதுரையே விழாக்கோலம் பூண்டிருந்த இந்த நிகழ்வில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். சித்திரைத் திருவிழா கடந்த 19-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் 8ஆம் நாள் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஒன்பதாம் நாள் நிகழ்வாக, மீனாட்சி அம்மன் போரில் தேவர்களை வென்று இறுதியில் சிவபெருமானுடன் போர் புரியும் ‘திக் விஜயம்’ நிகழ்ச்சி (9ம் நாள்) விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் மீனாட்சி அம்மனாக சௌந்தர்யன் மற்றும் சிவபெருமானாக சட்டம் ராஜசேகரன் ஆகியோர் வேடமணிந்து போர் புரிவது போன்று நடித்துக் காட்டினர்.

இதையும் படிக்க: மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2026: பெண்கள் தாலிச்சரடு மாற்ற நல்ல நேரம் அறிவிப்பு

திருக்கல்யாண வைபவம்:

மதுரை சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று காலை, கோவில் வளாகத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் வண்ண மலர்களாலும், பட்டுத் தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் மீனாட்சி அம்மனும், சுந்தரேஸ்வரரும் எழுந்தருளினர். அதிகாலை 4 மணி அளவில், சுந்தரேஸ்வரரும் மீனாட்சி அம்மனும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்தனர். பின்னர் சுவாமி முத்துராமய்யர் மண்டபத்தில் கன்னி ஊஞ்சலாகி, ஊர்வலமாகச் சென்று ஆடி வீதியில் உள்ள திருக்கல்யாண மணமேடையில் எழுந்தருளினார்கள்.

சரியாக இன்று காலை 8:35 மணிக்கு மேல் 8:59 மணிக்குள் ரிஷப லக்கனத்தில் வேத மந்திரங்கள் முழங்க, மங்கள வாத்தியங்கள் இசைக்க, மீனாட்சி அம்மனுக்கு மங்கல நாண் (திருமாங்கல்யம்)சூட்டப்பட்டது. அப்போது வானில் இருந்து மலர்கள் தூவப்பட்டது போன்ற சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது பக்தர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

கூடி நின்ற பக்தர்கள்:

இந்த வைபவத்தைக் காண தமிழகம் முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையில் குவிந்தனர். திருக்கல்யாணம் நடந்து முடிந்த தருணத்தில், அங்கிருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் தங்கள் மாங்கல்யப் பாக்கியம் நிலைக்க வேண்டி, புதிய மாங்கல்யக் கயிற்றை மாற்றிக் கொண்டனர். பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், மருத்துவ வசதி மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளைக் கோவில் நிர்வாகமும், மாவட்ட நிர்வாகமும் மிகத் தீவிரமாக மேற்கொண்டிருந்தன.

முன்னேற்பாடு பணிகள்:

இந்த விழாவிற்காக கடந்த சில நாட்களாகவே மதுரை மாநகரம் விழாக்கோலம் பூண்டிருந்தது. முன்னதாக, சித்திரைத் திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். பக்தர்களின் வசதிக்காகப் பல்வேறு இடங்களில் எல்.இ.டி (LED) திரைகள் அமைக்கப்பட்டு, திருக்கல்யாண நிகழ்வு நேரலையாக ஒளிபரப்பப்பட்டது.

இதையும் படிக்க: மதுரை மீனாட்சி திருக்கல்யாணம் 2026.. சுப நேரமும், வழிபாட்டு முறைகளும்..

இன்றைய இரவு மற்றும் நாளை நிகழ்வுகள்:

திருக்கல்யாணத்தை அடுத்து, இன்று இரவு 7:30 மணிக்கு சுந்தரேஸ்வரர் தங்க அம்பாரியுடன் கூடிய யானை வாகனத்திலும், மீனாட்சி அம்மன் ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழாவின் மற்றொரு முக்கிய நிகழ்வான ‘தேரோட்டம்’ நாளை காலை மிகப்பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

மதுரை மாநகரமே பக்தி வெள்ளத்தில் மூழ்கியுள்ள இந்த சித்திரைத் திருவிழாவிற்கான பாதுகாப்பு மற்றும் சுகாதாரப் பணிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சிறப்பாக மேற்கொண்டு வருகின்றனர்.

Follow Us
சிஇடி தேர்வு எழுத வந்த மாணவிகளின் மூக்குத்தியை அகற்ற சொன்னதால் பரபரப்பு
ஈரானில் அரசியல் அமைப்பில் திடீர் மாற்றங்கள் - என்ன காரணம்?
வெள்ளி விலை சரிவு, தங்கம் மற்றும் எண்ணெய் விலை உயர்வு
அதிக காய்கறி பழங்கள் சாப்பிட்டால் புற்றுநோய் அபாயமா? புதிய ஆய்வு சொல்வது என்ன?