Guru Peyarchi 2025: பாக்கிய ஸ்தானத்தில் குரு பகவான்.. துலாம் ராசிக்கான பலன்கள்!
ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு குரு பகவான் செல்வதால் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால், வீட்டு சுப நிகழ்ச்சிகள், குழந்தை பேறு, வீடு மாறுதல், வெளிநாட்டு குழந்தைகள் வீடு வருகை, உத்தியோகத்தில் முன்னேற்றம், தொழிலில் லாபம், கணவன் மனைவி ஒற்றுமை, கல்வியில் முன்னேற்றம், விவசாயத்தில் செழிப்பு போன்ற நற்பலன்கள் கிடைக்கும்.
ஜோதிடத்தை (Astrology) பொறுத்தவரை வியாழன் கிரகத்தின் அதிபதியான குருபகவான் 2025 ஆம் ஆண்டு மே 11 ஆம் தேதி வாக்கிய பஞ்சாங்கத்திலும், மே 14 ஆம் தேதி திருக்கணித பஞ்சாங்கத்திலும் பெயர்ச்சி (Guru Peyarchi 2025) மேற்கொள்ளவுள்ளார். இவர் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு செல்லவுள்ள நிலையில் மற்ற ராசிகளுக்கு இதனால் சாதகம் மற்றும் பாதகமான விஷயங்கள் நடக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது. அப்படியாக 2025 குரு பெயர்ச்சியால் துலாம் ராசிக்கு என்ன மாதிரியான ஏற்ற இறக்கங்கள் இருக்கும் என்பது பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இதுவரை துலாம் ராசிக்கு அஷ்டம ஸ்தானமாக ரிஷபத்தில் இருந்த குரு பகவான் இனி பாக்கியஸ்தானத்திற்கு மாறுகிறார். இதனால் அளவற்ற நற்பலன்கள் இந்த ராசியினருக்கு கிடைக்கப் போகிறது.
வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். குழந்தை பேறு தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். வசதியான வீட்டிற்கு மாறும் காலம் கனியும். வெளிநாட்டில் பணியாற்றி வரும் குழந்தைகள் வீட்டிற்கு வருகை தருவார்கள் ஆரோக்கியத்தில் கவனம் இருக்கும் பட்சத்தில் திருப்தியாக இருக்கும். எதிர்பார்த்த இடத்தில் இருந்து திருமண வரன் அமையும். எதிர்பாராத பண வரவும் இருக்கும்.
அடுத்த ஓராண்டு சிறப்பான காலம்
உத்தியோகத்தை பொறுத்தவரை அடுத்த ஒரு வருடம் சிறப்பான காலமாக அமையும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். சம்பள உயர்வு, பணி உயர்வு, பணியிட மாற்றம் தொடர்பான நல்ல செய்திகள் வந்து சேரும். வேலைக்கு முயற்சி செய்து வரும் நபர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடுகளுக்குச் சென்று பணியாற்றும் சூழல் உண்டாகும். அதேசமயம் தொழில் செய்பவர்களுக்கு அடுத்த ஓராண்டு சந்தை நிலவரம் மிக சாதகமாக இருக்கும். மேலும் உற்பத்தியை சூழலுக்கு ஏற்றவாறு அதிகரிக்கலாம். தேவைப்படும் இடத்திலிருந்து பண உதவிகள் கிடைக்கும். ஏற்றுமதி துறையினர் வெளிநாட்டுக்கு தொழிலை விருத்தி செய்வார்கள். தொழில் இடங்களை மாற்றி அமைப்பதற்கு இது சிறந்த காலமாகும்.
சிறந்த முன்னேற்றம்
கருத்து வேற்றுமையால் நீதிமன்றம் வரை சென்றிருக்கும் கணவன் மனைவிக்கு இடையே ஒற்றுமை உண்டாகும். உங்களுடைய நிதி தொடர்பான தேவைகளை சரி செய்து கொள்ள சரியான காலமாகும். குருபகவான் ராசி மாறுவதால் கல்வியில் சிறந்த முன்னேற்றம் இருக்கும். ஆசிரியர்களின் உற்சாகம் மாணவர்களிடையே நம்பிக்கையை அதிகரிக்கும். எந்த வகைப் போட்டி என்றாலும் அதில் இந்த ராசியினருக்கு வெற்றி கிடைக்க அதிக வாய்ப்பு உள்ளது. சிறு சிறு உடல் உபாதை ஏற்பட்டாலும் தேவையற்ற பாதையில் மனதை குழப்ப வேண்டாம். கல்வி நிலையங்களில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடுவது படிப்பை பாதிக்கலாம்.
விவசாயத்தைப் பொறுத்தவரை குரு பெயர்ச்சி மிகச் சிறப்பான பலன்களை தரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதன்படி பயிர்கள் செழித்து வளரும். சந்தையில் எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது. போட்டியை சமாளிக்க தகுந்த திட்டமிடுவீர்கள். குரு பரிகாரம் செய்வது மிகவும் வசதியாக இருக்கும்.
பெண்களைப் பொறுத்தவரை குரு பெயர்ச்சியால் கடினமான சூழ்நிலை எதுவும் ஏற்படுவதற்கு வாய்ப்பு இல்லை. அனைத்தும் மகிழ்ச்சியான செய்திகளாகவே இருக்கும். குருபகவான் கடக ராசியில் இருக்கும் வரை அனைத்து விஷயங்களிலும் மிகவும் ஜாக்கிரதையாக நடந்து கொள்ள வேண்டும். ஒவ்வொரு வியாழக்கிழமையும் ஒரு ஏழை பெண் குழந்தைக்கு புத்தாடை வழங்கி சிறப்பிப்பது சிறந்த பலன்களை தரும் என சொல்லப்பட்டுள்ளது.
(ஜோதிட நம்பிக்கையின்படி இந்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு எந்த அறிவியல் விளக்கமும் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)