வைகுண்ட ஏகாதசி – விரதம் இருக்கப்போறீங்களா? அப்போ இந்த தவறுகளை செய்யாதீர்கள்
Vaikunta Ekadasi : வைகுண்ட ஏகாசதி வருகிற டிசம்பர் 30, 2025 அன்று பக்தர்களால் வெகு விமர்சையாக கொண்டாடப்படவிருக்கிறது. அன்றைய நாளில் விரதம் இருப்பவர்கள் செய்யக் கூடாத தவறுகள் குறித்து ஆன்மீக அறிஞர்கல் எச்சரிக்கின்றனர். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
மார்கழி மாதத்தின் மிக முக்கியமான ஆன்மிக நாளாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி (Vaikunta Ekadasi), பக்தர்களால் வெகு விமர்சையாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளில் விரதம் இருந்து, பெருமாளை நினைத்து வழிபடுபவர்கள் குறிப்பிட்ட சில தவறுகளை செய்யக் கூடாது என ஆன்மிக அறிஞர்கள் வலியுறுத்துகின்றனர். அதன் படி ஏகாதசி நாளில் உணவு எடுத்துக்கொள்ளாமல், தூங்காமல் விரதம் இருப்பது சிரப்பானதாக கருதப்படுகிறது. அன்றைய நாளில் துளசி கலந்த நீரை மட்டும் குடிக்கலாம். அன்றைய நாள் முழுமையாக இறைவனின் நாமத்தை உச்சரித்து முழு நாளும் இறை சிந்தனையில் கழித்தால் மோட்சத்தை அடையலாம் என்பது நம்பிக்கை. இந்த நிலையில் வைகுண்ட ஏகாதசியில் செய்யக் கூடாதவை குறித்து பார்க்கலாம்.
ஏகாதசி உடல் உறுப்புகள் மற்றும் மனம் ஆகியவற்றை இறைவனுக்கே அர்ப்பணிப்பதே ஏகாதசி விரதத்தின் உண்மையானபொருளாக கூறப்படுகிறது. விஷ்ணு பகவான், மாதங்களில் நான் மார்கழி என கூறியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன. மார்கழி மாத வளர்பிறை ஏகாதசியே வைகுண்ட ஏகாதசி என்றும், இதை மோட்ச ஏகாதசி என்றும் அழைக்கின்றனர்.
ஏகாதசி விரதம் தசமி நாளிலிருந்தே தொடங்க வேண்டும். தசமி தினத்தன்று ஒருவேளை மட்டும் உணவு எடுத்துக்கொண்டு, விஷ்ணு வழிபாடு செய்து, மனதைத் தூய்மையாக வைத்திருக்க வேண்டும். ஏகாதசி நாளன்று அதிகாலையில் எழுந்து, நீராடி, பெருமாளை வழிபட்டு, மந்திர ஜபம் செய்ய வேண்டும். விஷ்ணு கோயில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளை தரிசிப்பது மிகவும் புண்ணியமாக கருதப்படுகிறது. இரவு முழுவதும் தூங்காமல், புராணங்கள் வாசித்தல் உள்ளிட்டவற்றை செய்வது சிறப்பாகும்.
இதையும் படிக்க : பூமி பூஜை தீர்க்கும் 3 தோஷங்கள்.. ஆன்மிகம் சொல்வது இவைதான்!
வைகுண்ட ஏகாதசி விரதத்தின்போது செய்யக்கூடாதவை
ஏகாதசியின் மறுநாள் துவாதசி நாளில், அதிகாலையில் நீராடி, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபட வேண்டும். அதன் பின்னர், உப்பு மற்றும் புளி இல்லாத உணவை கோவிந்தா கோவிந்தா என்று மூன்று முறை கூறியபடி, பற்கள் படாமல் எடுத்துக்கொண்டு விரதத்தை முடிக்க வேண்டும். இப்படி விரதத்தை முடிக்கும் முறைக்கு பாராணை என்று பெயர். துவாதசி நாளில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்வது மிகவும் புண்ணியமானதாக கருதப்படுகிறது.
ஏகாசதி விரதம் இருக்கும் நாளில் பகலில் தூங்கக்கூடாது. ஏகாதசி விரதத்தில் குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நோயாளிகள் விதிவிலக்காகக் கருதப்படுகின்றன. பெற்றோரின் நினைவு தினம் ஏகாதசி நாளில் வந்தால், அதனை ஏகாதசி அன்று செய்யாமல், மறுநாள் துவாதசி அன்று செய்ய வேண்டும் என சாஸ்திரங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பவர்களை ஏளனம் செய்வது மிகப்பெரிய பாவமாக கருதப்படுகிறது. மேலும், ஏகாதசி நாளில் துளசி இலைகளை பறிக்கக்கூடாது. அதற்கு முந்தைய நாளே தேவையான அளவுக்கு துளசி இலைகளை பறித்து வைத்திருக்க வேண்டும்.
வைகுண்ட ஏகாதசி அன்று இரவு முழுவதும் விழித்திருந்து பரமபதம் விளையாட்டு விளையாடுவது ஒரு முக்கிய பாரம்பரியமாக உள்ளது. இதன் மூலம், பாவம் செய்பவர்கள் வாழ்க்கையில் வீழ்ச்சி அடைவார்கள் என்றும், புண்ணியம் செய்பவர்கள் எளிதில் வைகுண்டம் அடைவார்கள் என்றும் கூறப்படுகிறது. ஏகாதசி நாளில் முழு விரதம் கடைப்பிடிப்பவர்கள் உணவோ, பிரசாதமோ எதையும் எடுத்துக்கொள்ளக்கூடாது. குளிர்ந்த நீர் அருந்துவதற்கு தடையில்லை. உடலுக்கு வெப்பம் அளிக்கும் தன்மை கொண்டதால், துளசியை ஏழு முறை அருந்துவது சிறப்பாகும். அந்த இரவு பெருமாள் கோவில்களில் நடைபெறும் சிறப்பு பூஜைகளில் கலந்து கொண்டு, சொர்க்கவாசல் வழியாக தரிசனம் செய்வது மிகுந்த புண்ணியமாக கருதப்படுகிறது.
இதையும் படிக்க : 2026 ராசிபலன்: இந்த 5 ராசிகளுக்கு சொந்த வீடு, சொத்து, வாங்கும் யோகம் இருக்காம்!!
வைகுண்ட ஏகாதசியின் மறுநாளான துவாதசி அன்று, காலை நேரத்தில் 21 வகை காய்கறிகள் சேர்த்து சமைக்கப்படும் உணவை உண்ண வேண்டும். அகத்திக் கீரை பொரியல், சுண்டைக்காய் வறுவல் ஆகியவை முக்கியமாகக் கருதப்படுகின்றன. இவற்றை இறைவனுக்கு படைத்துவிட்டு, ஏழை ஒருவருக்கு தானம் வழங்கிய பிறகே உண்ண வேண்டும். துவாதசி நாளில் இரவு நேரத்தில் இந்த உணவுகளை எடுத்துக்கொள்ளக்கூடாது.
மார்கழி மாதத்தில் ஏகாதசி விரதம் கடைப்பிடிப்பதால் ஜீரண அமைப்புக்கு ஓய்வு கிடைக்கிறது என்றும், குளிர்ந்த நீர் வயிற்றை சுத்தமாக்குகிறது என்றும் முன்னோர்கள் நம்புகின்றனர். அகத்திக் கீரையில் பாற்கடலின் அமிர்தம் இருப்பதாகவும், நெல்லிக்காய் மற்றும் சுண்டைக்காயில் மகாலட்சுமியின் அருள் இருப்பதாகவும் நம்பப்படுகிறது. வைகுண்ட ஏகாதசி விரதத்தை முறையாக கடைப்பிடித்தால், சொர்க்கவாசல் திறந்து, இறைவன் மோட்சத்தை அருள்வார் என்பது பக்தர்களின் உறுதியான நம்பிக்கையாக உள்ளது.



