Diwali 2025: தீபாவளி நாளில் எண்ணெய் குளியல்.. நல்ல நேரம் எது?
Diwali Oil Bath: தீபாவளி இந்து மதத்தின் முக்கிய பண்டிகையாகும். இது 2025 ஆம் ஆண்டு அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் எண்ணெய் குளியல் ஒரு பாரம்பரிய சடங்காக பார்க்கப்படுகிறது. இது நரகாசுர வதத்துடன் தொடர்புடையதுடன், உடல் ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை வழங்குகிறது.

தீபாவளி எண்ணெய் குளியல்
இந்து மதத்தில் மிகப்பெரிய மற்றும் முக்கியமான பண்டிகையாக தீபாவளி பார்க்கப்படுகிறது. ஐப்பசி மாத அமாவாசை நாளை கணக்கில் கொண்டு தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு ஐப்பசி மாத பிறப்பு அக்டோபர் 18ம் தேதி சனிக்கிழமை தொடங்கும் நிலையில், அக்டோபர் 20ம் தேதி திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே நாம் முதலில் எண்ணெய் குளியலில் இருந்து ஆரம்பிப்போம். ஆனால் காலப்போக்கு எண்ணெய் குளியலே இல்லாத சூழலுக்கு நம்மை தள்ளி விட்டது. உடலில் இருக்கும் வெப்பச்சூடு தொடங்கி பல்வேறு உடல் நல பாதிப்புகளுக்கும் எண்ணெய் குளியல் அருமருந்தாக கடந்த காலங்களில் கடைபிடிக்கப்பட்டது.
இருந்தாலும், தீபாவளி அன்று எண்ணெய் குளியலுக்கு பின்னால் விசேஷ காரணம் உள்ளது. அதாவது கிருஷ்ண பகவான் நரகாசுரனை வதம் செய்த நிகழ்வே தீபாவளியாக கொண்டாடப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவர் கங்கை நதி நீரில் நீராடியது தான் எண்ணெய் குளியல் காரணமாக சொல்லப்படுகிறது.
Also Read: தீபாவளி நாளில் துளசி செடியை வழிபாடு.. அதிர்ஷ்டம் கொட்டும்!
எண்ணெய் குளியல் முறை
ஒரு சிறிய பாத்திரத்தில் வீட்டின் உறுப்பினர்களுக்கு தேவையான அளவு நல்லெண்ணெய் எடுத்து அதனை மிதமான சூட்டில் கொதிக்க விட வேண்டும். அதில் சீரகம், தோல் சீவிய இஞ்சி, 2 பல் பூண்டு ஆகியவை சேர்க்கலாம். பின்னர் அதனை வடிகட்டி விட்டு ஆற வைக்க வேண்டும். முதலில் தலையில் இரண்டு சொட்டு வைத்து தொடங்க வேண்டும்.
வீட்டின் குளியலறை பகுதியில் தான் இதனை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சிய எண்ணை தலை முதல் கால் வரை தேய்க்க வேண்டும். அரை மணி நேரம் ஊற வைத்து விட்டு, பின்னர் சீயக்காய் தேய்த்து குளிக்க வேண்டும். இந்நாளில் ஷாம்பூ போன்ற பொருட்களை தவிர்ப்பது நல்லது. குளிக்கும் நீரில் கங்கா தேவி வாசம் செய்வதாக ஐதீகம். அதனால் இரண்டு கல் உப்பை அதில் போட்டு புனித நீராடலாம்.
இவ்வாறு குளியல் எடுப்பதால் நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகமாகும். எண்ணெய் குளியல் உடல் சூட்டை தவிர்த்து நாம் நன்றாக தூங்கவும், சருமத்தின் தன்மையை மேம்படுத்தும்படி அமையும்.
Also Read: தீபாவளிக்கு சுத்தம் செய்ய நேரமில்லையா? எளிதாக சுத்தம் செய்ய உதவும் குறிப்புகள்!
எந்த நேரம் சிறந்தது?
தீபாவளி நாளில் நாம் எண்ணெய் குளியல் எடுப்பதற்கு பிரம்ம முகூர்த்த காலக்கட்டம் எனப்படும் அதிகாலை 4.30 மணி முதல் காலை 6 மணிக்குள் சிறந்ததாக இருக்கும். ஆனால் வாரம் ஒருமுறை, மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் எடுக்கும்போதுன் இந்த நேரத்தை பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை என்பதை உணர வேண்டும். எண்ணெய் குளியலில் பயன்படுத்தும் நீரில் கங்கா தேவியும், சீயக்காயில் சரஸ்வதியும், எண்ணெயில் லட்சுமி தேவியும் வாசம் செய்வதாக ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)