சித்திரை தமிழ் புத்தாண்டு 2026.. செல்வம் பெருகச் செய்ய வேண்டிய எளிய வழிபாடுகள்!
Chithirai Tamil New Year: 'விசு' என்றால் சமம் என்று பொருள். புவி மேக்னடிக் கோட்டின் அடிப்படையில், சூரியன் பூமத்திய ரேகைக்கு நேராக வரும் காலக்கட்டம் இது. இதனால் இந்த நாளில் பகல் பொழுதும், இரவுப் பொழுதும் சமமாக இருக்கும். இது இயற்கையின் சமநிலையைக் கொண்டாடும் ஒரு அறிவியல் பூர்வமான பண்டிகையும் கூட.
2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 14ஆம் தேதி (சித்திரை 1) ‘பராபவ’ என்ற பெயரில் தமிழ் புத்தாண்டு பிறக்கிறது. சூரியன் மேஷ ராசியில் தனது பயணத்தைத் தொடங்கும் இந்த நாளை, ஒரு மங்களகரமான துவக்கமாகக் கொண்டாடுவது நமது மரபு. இந்த ஆண்டு முழுவதும் மகிழ்ச்சியும் ஆரோக்கியமும் பெருக நாம் செய்ய வேண்டிய வழிபாடுகளைப் பார்ப்போம்.
இதையும் படிக்க: தமிழ் புத்தாண்டுக்கு பிறகு கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்…
கனி காணுதல் (முன்தினம் செய்ய வேண்டியவை):
புத்தாண்டு பிறப்பதற்கு முதல் நாள் இரவே வீட்டைச் சுத்தம் செய்து, ஒரு தாம்பாளத்தில் மங்களகரமான பொருட்களை அடுக்கி வைக்க வேண்டும். தேவையான பொருட்கள்: மா, பலா, வாழை ஆகிய முக்கனிகள், வெற்றிலை பாக்கு, எலுமிச்சம்பழம், மஞ்சள், குங்குமம், நாணயங்கள், ரூபாய் நோட்டுகள், தங்கம் அல்லது வெள்ளி நகைகள். எல்லாவற்றிற்கும் மேலாக ஒரு கண்ணாடி வைப்பது மிகவும் அவசியம். கொன்றை மலர் கிடைத்தால் விசேஷம், இல்லையெனில் மஞ்சள் நிற மலர்களைப் பயன்படுத்தலாம்.
புத்தாண்டு காலை வழிபாடு:
சித்திரை முதல் நாள் அதிகாலையில் எழுந்தவுடன், முதலில் அந்தத் தாம்பாளத்தில் உள்ள மங்களப் பொருட்களையும், பின்னர் கண்ணாடியில் நமது முகத்தையும் பார்க்க வேண்டும். இது அந்த ஆண்டு முழுவதும் சுபிட்சத்தைத் தரும். பின்னர் குளித்துவிட்டு, அந்தத் தாம்பாளத்தைப் பூஜை அறைக்குக் கொண்டு சென்று இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்ய வேண்டும். ஒரு நெய் விளக்கேற்றி குலதெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் மனதாரப் பிரார்த்திக்க வேண்டும்.
வழிபாட்டிற்கு உகந்த நேரங்கள்:
காலை வழிபாடு: 06:00 – 07:00 மணி வரை, அடுத்த நல்ல நேரம்: காலை 07:20 – 08:45 மணி வரை. மதிய வழிபாடு: காலை 10:40 – 11:50 மணி வரை. இலை போட்டுப் படைக்க மதியம் 01:30 – 02:00 மணி வரை நல்ல நேரம் ஆகும்.
சித்திரை விசு – பகல், இரவு சமநிலை:
‘விசு’ என்றால் சமம் என்று பொருள். புவி மேக்னடிக் கோட்டின் அடிப்படையில், சூரியன் பூமத்திய ரேகைக்கு நேராக வரும் காலக்கட்டம் இது. இதனால் இந்த நாளில் பகல் பொழுதும், இரவுப் பொழுதும் சமமாக இருக்கும். இது இயற்கையின் சமநிலையைக் கொண்டாடும் ஒரு அறிவியல் பூர்வமான பண்டிகையும் கூட.
அறுசுவை உணவு:
தமிழ் புத்தாண்டு அன்று நமது உணவில் அறுசுவைகளும் (இனிப்பு, புளிப்பு, காரம், உப்பு, துவர்ப்பு, கசப்பு) இடம் பெற வேண்டும். குறிப்பாக, வாழ்வில் ஏற்படும் இன்ப துன்பங்களைச் சமமாக எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்த மாங்காய் பச்சடி (புளிப்பு/இனிப்பு) மற்றும் வேப்பம்பூ ரசம் (கசப்பு) கண்டிப்பாகச் சமைக்க வேண்டும்.
இதையும் படிக்க: தமிழ் புத்தாண்டு ராசிபலன்கள்: 2026 -ல் அதிர்ஷ்டம் பெறப்போகும் ராசிகள்!
கைவிசேஷம் மற்றும் புதிய துவக்கங்கள்:
இந்த நாளில் குடும்பத் தலைவர் மற்ற உறுப்பினர்களுக்குக் ‘கைவிசேஷம்’ என்ற பெயரில் பணம் கொடுப்பது வழக்கம். இது அந்த ஆண்டு முழுவதும் செல்வம் பெருகும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. மேலும், புதிய வியாபாரம் அல்லது நற்செயல்களைத் துவங்க இது மிகச்சிறந்த நாளாகும். பிறக்கப் போகும் இந்தப் பராபவ ஆண்டு அனைவருக்கும் இன்பமான ஆண்டாக அமையட்டும்.