வெளிநாடு செல்ல வாய்ப்பு.. வேண்டுதலை நிறைவேற்றும் மாரியம்மன்!

சிதம்பரம் அருகேயுள்ள நஞ்சை மகத்து வாழ்க்கை பனங்காடு மாரியம்மன் கோயிலின் வரலாறு பற்றிக் காணலாம். ஆங்கிலேயர் காலத்தில் தோன்றிய இந்தக் கோயில், வெளிநாடு செல்ல விரும்புவோர் மற்றும் குழந்தைப் பேறு வேண்டி பலர் வழிபடும் தலமாக உள்ளது. ஆண்டுதோறும் ஜூலை மாதத்தில் சூரிய ஒளி சிலைகள் மீது படும் அற்புத நிகழ்வும் இங்கு நடைபெறுகிறது.

வெளிநாடு செல்ல வாய்ப்பு.. வேண்டுதலை நிறைவேற்றும் மாரியம்மன்!

பனங்காடு மாரியம்மன்

Updated On: 

13 Aug 2025 16:45 PM

தமிழகத்தில் பல்வேறு விதமான பெயர்களில் மாரியம்மன் ஒவ்வொரு ஊர்களிலும் அருள்பாலித்து வருகிறாள். பொதுவாக ஆடி மாதத்தில் இத்தகைய மாரியம்மனுக்கு கொடை விழா நடத்தப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது. அதேசமயம் பொதுமக்கள் தங்களுக்கு பிடித்தமான அம்மன் கோயில்களுக்கு இந்த ஆடி மாதத்தில் சென்று வழிபட்டு வருவார்கள். அப்படியான வகையில் கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே நஞ்சை மகத்து வாழ்க்கை என்ற ஊரில் அமைந்திருக்கும் பனங்காடு மாரியம்மன் கோயில் பற்றி நாம் இந்த தொகுப்பில் காணலாம். இந்த கோயிலில் மூலவராக மாரியம்மன் இருக்கும் நிலையில் உற்சவரராக பொய்யா மொழி விநாயகர் அமைந்திருக்கிறார். தல விருட்சமாக வேப்ப மரமும் தீர்த்தமாக குளத்து தீர்த்தமும் அமையப்பெற்றுள்ளது. இந்தக் கோயில் ஆனது காலை 8 மணி முதல் 11 மணி வரையும் மாலையில் 5  மணி முதல் இரவு 7 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்திற்காக திறந்திருக்கும்.

ஆங்கிலேயர் காலத்தில் தோப்புகள் சூழ்ந்த இந்தப் பகுதியில் சுனை வெட்டி பிற பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்லும் வழக்கம் இருந்தது. அதனால் இந்த இடம் பாணி (தண்ணீர்) காடு என அழைக்கப்பட்டு பிற்காலத்தில் பனங்காடு என மருவியது. இந்த கோயில் உருவான விதம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி காணலாம்.

Also Read: சுமங்கலி வரம் அருளும் மாரியம்மன் கோயில்.. எங்கே இருக்கு தெரியுமா?

கோயில் வரலாறு

ஒரு காலத்தில் கோயில் இருந்த இப்பகுதியில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் நஞ்சை வயலும், மரங்களும் சூழ்ந்த பகுதியாக இருந்திருக்கிறது. அப்போது ஆங்கிலேயர்கள் குடிநீருக்காக சுனை வெட்டி தண்ணீர் எடுத்து சென்றனர். இதற்கிடையில் அம்பலவாணன் படையாட்சி என்பவர் முதன்முதலாக சிங்கப்பூர் சென்று பொருள் ஈட்டி வந்தவராக இவ்வூரில் திகழ்ந்தார். அப்போது இப்பகுதியில் தெய்வ வழிபாடு இல்லாததால் கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என கூறி சொந்த செலவில் கோயில் கட்டினார்.

இதனை அவருடைய உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் மட்டும் வணங்கினர். சிங்கப்பூரார் கோயில் என அழைக்கப்பட்ட இந்த கோயிலில் பிரார்த்தனை செய்த பிறகு பலருக்கும் வெளிநாடு சென்று வேலை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. இதனால் அவ்வாறு சென்றவர்கள் திருவிழா காலங்களில் விழா சிறக்க இன்றளவும் உதவி வருகின்றனர். அம்பலவாணன் மறைவிற்குப் பிறகு அவரது குடும்பத்தினர்கள் கோயிலை கண்காணித்து வந்தனர்.

Also Read: வேண்டியதை நிறைவேற்றும் மகா மாரியம்மன்.. இந்த கோயில் தெரியுமா?

தற்போது அது கிராமத்தின் கோயிலாக அறிவிக்கப்பட்டு செயல்பாட்டில் இருந்து வருகிறது. கோயிலின் அருகில் 30 அடி தொலைவில் யோக விநாயகர் சன்னதி அமைந்திருக்கிறது. மேலும் பேச்சியம்மன், துர்க்கை ஆகியோரும் இங்கு அருள்பாலித்து வருகிறார்கள். இந்த மாரியம்மன் கோயிலுக்கு குலதெய்வ வழிபாட்டிற்காக பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோயிலின் சிறப்புகள் 

இந்த கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் முதல் வாரத்தில் மாரியம்மன், விநாயகர் சிலை மீது சூரிய ஒளி விழுவது விசேஷமாக பார்க்கப்படுகிறது. குழந்தை பேறு, திருமண தடை, வெளிநாடு செல்ல விரும்புபவர்கள், நோய் பாதிப்பால் அவதிப்படுபவர்கள் இந்த கோயிலுக்கு வந்து வழிபடுகின்றனர். உயிருடன் ஆடு, கோழி, புறா ஆகியவை இக்கோயிலில் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். மாசிமகம், சித்ரா பௌர்ணமி, ஆடி கடைசி வெள்ளி, விநாயகர் சதுர்த்தி ஆகிய நாட்களில் விசேஷ வழிபாடு நடைபெறுகிறது.

(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கையின் அடிப்படையில் இக்கட்டுரை பற்றிய தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)