ஆவணி பௌர்ணமி.. திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல ஏற்ற நேரம் இதுதான்!
Aavani Pournami: ஆவணி மாத பௌர்ணமி கிரிவலத்திற்கான நேரம் திருவண்ணாமலை கோயில் நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 7, 2025 அன்று அதிகாலை 1.46 மணிக்கு தொடங்கும் பௌர்ணமி திதி அன்று முழுவதும் நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கிரிவலத்தால் பாவங்கள் நீங்கி புண்ணியம் பெருகும் என்பது நம்பிக்கையாகும்.

திருவண்ணாமலை
ஆவணி மாத பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில் கிரிவலம் செல்வதற்கான நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக இந்து மதத்தில் பௌர்ணமி மிகவும் விசேஷம் நிறைந்த நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் இறைவழிபாடு மேற்கொண்டால் பல்வேறு விதமான பலன்கள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை பௌர்ணமி நாள் என்றால் அது திருவண்ணாமலையில் நடக்கும் கிரிவலம் தான் அனைவரது நினைவுக்கும் வரும். சுமார் 14 கிலோமீட்டர் தொலைவு கொண்ட இந்த கிரிவலம் பாதையில் பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். திருவண்ணாமலை கோயிலுக்கு பின்புறம் உள்ள தீபமமலையில் தான் இந்த கிரிவலம் ஆனது நடைபெறுகிறது. பஞ்சபூத தலங்களில் திருவண்ணாமலை அக்னி ஸ்தலமாக திகழும் நிலையில் இங்கு மட்டும்தான் கிரிவலம் செல்லும் வழக்கமும் உள்ளது. இப்படியான நிலையில் ஆவணி மாதத்திற்கான பௌர்ணமி கிரிவலம் செல்வதற்கான உகந்த நேரத்தை கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
நள்ளிரவில் தொடங்கும் பௌர்ணமி திதி
அதன்படி பௌர்ணமி வரும் 2025 செப்டம்பர் 7 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1.46 மணிக்கு தொடங்குகிறது. இந்த திதியானது அன்று முழுவதும் இருந்து நள்ளிரவு 12:30 மணிக்கு நிறைவடைகிறது. இந்த முறை ஞாயிற்றுக்கிழமை பௌர்ணமி வர உள்ளதால் விடுமுறை தினத்தை முன்னிட்டு பழக்கத்தை விட கூடுதல் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: ஆவணி பௌர்ணமி.. இப்படி தீபமேற்றி வழிபட்டால் நிம்மதி கிடைக்கும்!
இதனால் கிரிவலப் பாதையில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் செய்து தரப்பட்டுள்ளது. மேலும் பௌர்ணமி கிரிவளத்தை முன்னிட்டு திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகளும் இந்நாளில் இயக்கப்படுகிறது. மேலும் சென்னை விழுப்புரம் போன்ற பகுதிகளில் இருந்து சிறப்பு ரயில்களும் அறிவிக்கப்பட்டுள்ளது.
விடிய விடிய திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் வருவார்கள் என்பதால் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது. மேலும் ஆம்புல்ன்ஸ், முதலுதவி சிகிச்சையளிக்க மருத்துவர்கள், தீயணைப்பு துறையினர் என அனைவரும் தயார் நிலையில் உள்ளனர்.
Also Read: சந்திர கிரகணம்.. இந்த பொருட்களை தானம் செய்தால் நல்லது!
பௌர்ணமி கிரிவலம் செல்வதால் கிடைக்கும் பலன்கள்
திருவண்ணாமலையில் பௌர்ணமி நாளில் கிரிவலம் செல்வதால் நம்முடைய பாவங்கள் அனைத்தும் நீங்கி புண்ணியம் பெருகும் என நம்பப்படுகிறது. மேலும் இந்நாளில் நாம் வைக்கம் வேண்டுதல்களை சிவபெருமான் உடனடியாக நிறைவேற்றுவார் எனவும் நம்பப்படுகிறது. அது மட்டும் அல்லாமல் கிரிவலம் செல்லும் போது சிவாய நமக என மந்திரத்தை உச்சரிக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் சிவனுக்குரிய பக்தி பாடல்கள்,மந்திரங்கள் என எது தெரிந்தாலும் பாராயணம் செய்யலாம்.
மேலும் மற்றவர்களை இடித்து தள்ளாமல் நிதானமாக நடக்க வேண்டும். திருவண்ணாமலையில் கிரிவலம் செய்தால் ஆன்மீகத்தில் அதிக நாட்டமும் முன்னேற்றமும் ஏற்படும் என்பது அசைக்க முடியாத நம்பிக்கையாக உள்ளது.