ஆடிப்பூரம் நாளில் வீட்டில் ஆண்டாள் வழிபாடு.. திருமணம் கைகூடும்!
ஆடிப்பூரம், ஆண்டாள் அவதார தினமாகவும், மகாலட்சுமி அவதார தினமாகவும் கொண்டாடப்படுகிறது. வீட்டில் ஆண்டாள் வழிபாடு, திருமணத் தடைகளை நீக்கும் என்பது நம்பிக்கையாக உள்ளது. அப்போது தாமரை, கற்கண்டு சாதம் படைத்து வழிபடலாம். இந்த இறை வழிபாட்டில் திருப்பாவை, லலிதா சரஸ்கர நாமம் பாராயணம் செய்யலாம்.

ஆடிப்பூரம் நாளில் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவாரான ஆண்டாள் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அதேபோல் இன்னாள் மகாலட்சுமி அவதார தினமாகவும், பூமா தேவி தோன்றிய நாளாகவும், பார்வதி தேவிக்கு வளைகாப்பு வைபவம் கொண்ட நாளாகவும் பார்க்கப்படுகிறது. பூரம் நட்சத்திரம் ஜோதிட சாஸ்திரத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இப்படியான நிலையில் 2025ம் ஆண்டு ஜூலை 28ம் தேதி ஆடிப்பூரம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுகிறது, ஏற்கனவே ஆண்டாள் தலமாக அறியப்படும் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூரில் 10 நாட்கள் திருவிழா தொடங்கி விட்டது. தன்னுடைய தவத்தின் மூலம் எம்பெருமானை ஆண்டாள் ஐக்கியமான கதை நம் அனைவருக்கும் தெரியும். அப்படியான ஆண்டாளை நாம் எப்படி வழிபடுவது, வழிபட்டால் என்ன பலன்கள் கிடைக்கும் என்பது பற்றிக் காணலாம்.
ஆடிப்பூரம் நாளில் ஆண்டாளை வீட்டிற்கு அழைத்து வழிபாடு செய்தால் திருமண தடை நீங்கும் என்பது நம்பிக்கையாகும். இந்நாளில் அதிகாலையில் எழுந்து புனித நீராடிய பின் சுத்தமான ஆடைகளை அணிய வேண்டும், பின்பு பூஜையறையில் ஆண்டாளை வழிபடுவதற்கான வேலைகளை தொடங்கலாம். அவளுக்கு பிடித்த தாமரை மலர், கற்கண்டு சாதம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வைத்து வணங்கலாம். வீட்டின் பூஜையறையில் தாமரை பூ கோலமிட்டு ஆண்டாளின் புகைப்படம் அல்லது சிலைகளை வைத்து வழிபடலாம்.
Also Read: வாரத்தின் 7 நாட்கள்.. எந்த நாளில் எந்த கடவுளை வணங்கினால் சிறப்பு?
திருப்பதி பெருமாளுடன் மகாலட்சுமி இருக்கும் படம் அல்லது தனியாக மகாலட்சுமி மட்டும் இருக்கும் படம், அப்படியும் எதுவும் இல்லை என்றால் விளக்கை ஆண்டாளாக நினைத்து வணங்கலாம். இந்த வழிபாட்டின்போது அவருக்கு விருப்பமான துளசி செடியையும் வைக்க வேண்டும். ஏனென்றால் ஆண்டாள் துளசி செடியில் இருந்து கண்டெடுக்கப்பட்டதாக புராணங்களில் சொல்லப்படுகிறது.
இந்த இறைவழிபாட்டின்போது ஆண்டாளின் திருப்பாவை, லலிதா சரஸ்கர நாமம் ஆகியவை பாராயணம் செய்யலாம். மேலும் மனதிற்கு பிடித்த, நல்வாழ்க்கை அமையக்கூடிய வாழ்க்கை துணை வேண்டும் என ஆண்டாளிடம் வேண்டலாம். இந்நாளில் அருகிலுள்ள பெருமாள் கோயிலில் வீற்றிருக்கும் ஆண்டாளுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெறும். அதில் கலந்து கொண்டு பலன்களை பெறலாம்.
Also Read: கடன் பிரச்னைகளை தீர்க்கும் ஆடி செவ்வாய் வழிபாடு.. எப்படி செய்ய வேண்டும்?
ஆடிப்பூர நாளில் தான் ஆண்டாள் பெருமாளுடன் ஐக்கியமானதை குறிப்பிடும் வகையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் மற்றும் ஸ்ரீரங்கத்தில் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். இதனை நேரில் கண்டால் பெருமாள் போன்ற வாழ்க்கை துணை அமைந்து இல்வாழ்க்கை சிறக்கும் என சொல்லப்படுகிறது. அதேபோல் வீட்டிலும், கோயிலிலும் ஆண்டாளுக்கு பிடித்த சிவப்பு நிற மலர்களை வழிபாட்டிற்காக வைக்கலாம். ஆண்டாளை மனதார நினைத்தாலே நம் இல்வாழ்க்கை நிச்சயம் சிறப்பாக அமையும் என நம்பப்படுகிறது.
(இறை மற்றும் ஆன்மிக நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)