Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Aadi Pooram: 2025 ஆடிப்பூரம் எப்போது? – அதன் முக்கியத்துவம் தெரியுமா?

ஆடி மாதத்தில் வரும் மிக முக்கிய நாளான ஆடிப்பூரமானது உமாதேவியின் அவதாரம், ஆண்டாள் ஜெயந்தி மற்றும் சித்தர்களின் தவ ஆரம்பம் என பல்வேறு முக்கியத்துவங்களைக் கொண்டுள்ளது. குடும்ப ஒற்றுமை, வளமான வாழ்க்கைக்காக ஆடிப்பூரத்தில் அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வது சிறப்பானதாக சொல்லப்படுகிறது.

Aadi Pooram: 2025 ஆடிப்பூரம் எப்போது? – அதன் முக்கியத்துவம் தெரியுமா?
ஆடிப்பூரம்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 25 Jul 2025 15:55 PM

ஆடி மாதம் என்றாலே ஆன்மிக அன்பர்களுக்கு கொண்டாட்டமான மற்றும் மகிழ்ச்சியான காலமாக அமையும். இந்த மாதம் முழுக்க பெண் தெய்வங்களுக்கான சக்தி அதிகளவில் இருக்கும் என நம்பப்படுகிறது. ஆன்மிகத்தில் ஆடி மற்றும் மார்கழி மாதம் ஆன்மிக மாதமாக அடையாளப்படுத்தப்படுகிறது. அதற்கு ஏற்றாற்போல ஆடி மாதத்தில் பல்வேறு ஆன்மிக திருவிழாக்கள் வருகிறது. இப்படியான நிலையில் ஆடி மாதம் வரும் மிக முக்கியமான விசேஷ தினங்களில் ஒன்று தான் ஆடிப்பூரம். பெயருக்கு ஏற்றாற்போல பூரம் நட்சத்திரம் நாளில் வரும் இந்த பண்டிகை அனைத்து அம்மன் கோயில்களிலும் வெகு விமரிசையாக கொண்டாடப்படும். அந்த வகையில் 2025ம் ஆண்டு ஆடிப்பூரம் எப்போது என்பது பற்றியும் அதன் முக்கியத்துவம் பற்றியும் தெரிந்துக் கொள்வோம்.

ஆடிப்பூரம் சிறப்புகள்

இந்நாளில் தான் உலகைக் காக்க உமாதேவியாக பராசக்தி வடிவெடுத்தாள் என சொல்லப்படுகிறது. அதேசமயம் ஆடிப்பூரம் நாளில் அம்மனுக்கு நடத்தப்படும் வளைகாப்பு திருவிழாவும் நடத்தப்படுகிறது. வைணவ தலங்களில் இந்நாள் ஆண்டாள் அவதரித்த தினமாக கருதப்படுகிறது. அதனால் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோயில் 10 நாட்கள் திருவிழா கொண்டாடப்படுகிறது. மேலும் ஆண்டாள் ஜெயந்தி என இந்நாள் அழைக்கப்படுகிறது.

Also Read: Aadi Tuesday: பலன்களை அள்ளித்தரும் ஆடி செவ்வாய்.. விரதம் இருப்பது எப்படி?

இதே நாளில் தான் சித்தர்களும், முனிவர்களும் தங்களுடைய தவத்தை தொடங்குவதாகவும் புராணங்கள் தெரிவிக்கின்றது. இந்நாளில் அம்மன் கோயில்களில் நாம் வழிபாடு செய்தால் வாழ்க்கை வளமாக இருக்கும் என நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் அம்மனின் வளைகாப்பு திருவிழாவில் நாம் வளையல்கள் வாங்கி கொடுத்தால் குழந்தை பாக்கியம், திருமண வரன், பெண்களுக்கான நாள்பட்ட பிணி உள்ளிட்ட பல பிரச்னைகள் நீங்கும் என நம்பப்படுகிறது.

அதேசமயம் வீட்டிலும் நாம் அம்மனுக்கு அலங்காரம் செய்து சிறப்பு வழிபாடு மேற்கொள்ளலாம். இதனால் கிடைக்கும் பலன்கள் ஏராளம் சொல்லப்படுகிறது. அவ்வாறு நீங்கள் செய்யும்போது அக்கம் பக்கத்தினரை அழைத்து அவர்கள் பூஜை முடிந்து செல்லும்போது வளையல்கள் கொடுக்க வேண்டும். மேலும் விரதங்களும் கடைபிடிக்கலாம்.

Also Read:  ஆடி வெள்ளிக்கிழமை வழிபாடு.. இவ்வளவு நன்மைகள் கிடைக்குமா?

2025ல் ஆடிப்பூரம் எப்போது?

2025ம் ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவாது ஜூலை 28ம் தேதி திங்கட்கிழமை கொண்டாடப்படுகிறது, இந்நாளில் கண்டிப்பாக அனைவரும் வீட்டின் அருகில் உள்ள அம்மனையாவது தரிசனம் செய்ய வேண்டும் என சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் குடும்ப ஒற்றுமை ஓங்கி, இன்பமான, வளமான வாழ்க்கை அமையும் என்பது ஐதீகமாக உள்ளது.

(ஆன்மிக மற்றும் இறை நம்பிக்கை அடிப்படையில் இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் கிடையாது. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)