திருப்பதியில் அலைமோதிய கூட்டம்.. தரிசனத்திற்கு 24 மணி நேரம் காத்திருக்கும் பக்தர்கள்..
massive crowd at Tirupati: அசம்பாவிதம் சம்பவம் நடக்காமல் இருக்க தரிசன வரிசைகளில் தேவஸ்தான பறக்கும் படை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணிநேரம் ஆனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
திருப்பதி, ஜனவரி 18: தொடர் விடுமுறையையொட்டி, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. பொங்கல் பண்டிகையையொட்டி, தொடர் விடுமுறையால் ஜனவரி 14ம் தேதி முதலே திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்காக தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு குவிந்த வண்ணம் உள்ளனர். இலவச தரிசனத்தில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்கின்றனர். அதேபோல், ரூ.300 சிறப்பு கட்டண தரிசனத்தில் 3 முதல் 5 மணி நேரம் வரை காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர்.
இதையும் படிக்க: தை அமாவாசை 2026.. உங்கள் தடைகள் நீங்க.. இதை செய்ய தவறாதீர்கள்..
நீண்ட வரிசையில் காத்திருக்கும் பக்தர்கள்:
இதன் காரணமாக வைகுண்டம் கியூ காம்ப்ளக்ஸில் உள்ள 31 அறைகளும் நிரம்பி நாராயணகிரி தோட்டம் , சிலா தோரணம் வரை நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இதனால் இலவச தரிசனத்தில் சாமி தரிசனம் செய்வதற்கு சுமார் 24 மணி நேரமும், இலவச நேர ஒதுக்கீடு சர்வதரிசன டோக்கன்கள் பெற்ற பக்தர்களுக்கு ஏழு மணி நேரமும், ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கட்டுகள் பெற்ற பக்தர்களுக்கு சுமார் ஐந்து மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வைக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பக்தர்களுக்கு உணவு ஏற்பாடு:
பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் உள்ளதால் பக்தர்களுக்கு தேவையான உணவு, தண்ணீர் , பால், காபி உள்ளிட்டவை பக்தர்களுக்கான வரிசையில் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே தங்களுக்கான தரிசனத்திற்கான நேரம் வரும்வரை வரிசையில் பொறுமையுடன் காத்திருந்து ஏழுமலையானின் அருள் பெற வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர்.
போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த சாலைகள்:
இதனிடையே, அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் வாகனங்களில் வந்ததால் அலிபிரி சோதனைச்சாவடியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சோதனைக்காக நீண்ட வரிசையில் வாகனங்கள் பலமணி நேரம் காத்திருந்தன. திருமலையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் பக்தர்கள் நடுங்கும் குளிரில் பல மணிநேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
மேலும் படிக்க : தை அமாவாசை 2026: யார் என்ன செய்ய வேண்டும்? விரத முறை.. முழு விவரம்!!
பாதுகாப்பாக தீவிர கண்காணிப்பு:
அசம்பாவிதம் சம்பவம் நடக்காமல் இருக்க தரிசன வரிசைகளில் தேவஸ்தான பறக்கும் படை ஊழியர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று இலவச தரிசனத்தில் சென்ற பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய 24 மணிநேரம் ஆனது. முன்னதாக, நேற்று முன்தினம் (ஜனவரி 16) மட்டும் 78,733 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 31,146 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்றைய தினம் மட்டும் ஒருநாள் உண்டியல் காணிக்கை ரூ.3 கோடியே 41 லட்சம் ஆகும்.