Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு.. துளசி வைத்தால் இவ்வளவு பலன்களா?

கிருஷ்ண ஜென்மாஷ்டமி பண்டிகையில் துளசி செடியின் முக்கியத்துவம் பற்றி தெரிந்திருக்க வேண்டும் என ஆன்மிக அன்பர்கள் கூறுகின்றனர். துளசி லட்சுமி தேவியின் வடிவம் என்பதால், அதனைக் கொண்டு வழிபாடு செய்வதால் ஒரே நேரத்தில் கிருஷ்ணர் மற்றும் லட்சுமி தேவியின் ஆசிகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது.

Gokulashtami: கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு.. துளசி வைத்தால் இவ்வளவு பலன்களா?
கிருஷ்ண ஜெயந்தி வழிபாடு
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Published: 15 Aug 2025 12:24 PM

கிருஷ்ண ஜென்மாஷ்டமி (Gokulashtami) பண்டிகை என்பது பகவான் கிருஷ்ணன் பிறந்தநாளை குறிப்பதாகும். வழக்கமாக ஆவணி மாதத்தில் தேய்பிறை அஷ்டமி திதியில் ரோகிணி நட்சத்திரத்தில் தான் கிருஷ்ணர் அவதரித்ததாக புராணங்களில் உள்ளது. இப்படியான நிலையில் அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் ஆகியவை ஒருங்கே இணைந்து வருவது அபூர்வமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. அதனால் தான் திதியை கணக்கிட்டு இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது. 2025 ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி பண்டிகையானது ஆகஸ்ட் 16ஆம் தேதி சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இந்நாளில் வீட்டிலும், கோயில்களிலும் கிருஷ்ணருக்கு பல்வேறு விதமான சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். அந்த வகையில் சாஸ்திரங்களில் துளசி கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமான பொருளாக குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தகைய துளசி இலைகள் இல்லாமல் அவருக்கு வழிபாடு செய்வது முழுமையடையாது என்று நம்பப்படுகிறது. இப்படியான சூழலில், கிருஷ்ண ஜெயந்தி நாளில் துளசி இலைகள் மூலம் நம் வீட்டில் கிடைக்கும் பலன்கள் பற்றி காணலாம்.

துளசி லட்சுமி தேவியின் ஒரு வடிவமாகவும் கருதப்படுகிறது. அதனால் இந்நாளில் நாம் வழிபடுவதன் மூலம் கிருஷ்ணர் மற்றும் லட்சுமி தேவியின் ஆசிகள் கிடைக்கும் என நம்பப்படுகிறது. இவை வீட்டில் மகிழ்ச்சி, செழிப்பு மற்றும் நேர்மறை ஆற்றல் ஆகியவற்றை தரும் என்பது ஐதீகமாக உள்ளது.

Also Read: Gokulashtami: கிருஷ்ணர் பிறப்பின் அர்த்தம் தெரியுமா? – இதைப் படிங்க!

என்னென்ன செய்ய வேண்டும்?

கோகுலாஷ்டமி நாளில் கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்தார் என்பதால் அந்நேரம் பூஜை நடக்கும். அதனை செய்யும்போது, துளசி செடியின் முன் பசு நெய்யால் விளக்கேற்றுங்கள். தீபம் ஏற்றும்போது, “ஓம் நமோ பகவதே வாசுதேவாய” என்ற மந்திரத்தை உச்சரிக்கவும். அவ்வாறு செய்வது கிருஷ்ணரை மகிழ்விக்கும் என்றும், வீட்டில் செல்வம் மற்றும் செழிப்பு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.

இந்நன்னாளில் கிருஷ்ணர் சிலைக்கு துளசி மாலையை அர்ப்பணிப்பது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. கிருஷ்ணரின் கழுத்தில் அல்லது அவரது காலடியில் அதனை அர்ப்பணிக்கலாம். இந்த செயல் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் அமைதியையும் தரும்.

கிருஷ்ண ஜென்மாஷ்டமி நாளில் கிருஷ்ணருக்கு எந்தப் பிரசாதம் அளிக்கப்பட்டாலும், அதனுடன் துளசி இலைகளைச் சேர்க்க வேண்டும். துளசி இல்லாத பிரசாதம் முழுமையடையாததாகக் கருதப்படுகிறது. துளசி இலைகளைச் பிரசாதத்தில் சேர்ப்பதன் மூலம், கிருஷ்ணர் பிரசாதத்தை விரைவாக ஏற்றுக்கொண்டு பக்தர்களின் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவார் என்பது நம்பிக்கையாகும்.

Also Read: Krishna Jayanthi: வளமான வாழ்வு.. கிருஷ்ண ஜெயந்தி நாளில் இந்த 4 ராசிக்கு லக்!

ஒருவேளை உங்கள் வீட்டில் துளசி செடி இல்லையென்றால், இந்த சிறப்பான நாளில் புதிய துளசி செடியை வீட்டிற்கு கொண்டு வருவது மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது. இந்த செடியை வீட்டின் முற்றத்திலோ அல்லது வடகிழக்கு திசையிலோ நடலாம். இதை தொடர்ந்து வழிபடுவது லட்சுமி தேவி வீட்டில் தங்குவதற்கான பலனாக பார்க்கப்படுகிறது.

கிருஷ்ண ஜெயந்தி அன்று பூஜை செய்யும்போது துளசி செடிக்கு அருகில் சங்கு வைத்திருப்பது மிகவும் பலனளிக்கும். சங்கு மற்றும் துளசி இரண்டும் விஷ்ணுவுக்கு மிகவும் பிரியமானவை. இந்த பரிகாரத்தைச் செய்வதன் மூலம், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல் முடிவுக்கு வந்து நேர்மறை சக்தி பரவுகிறது.

(ஆன்மிக நம்பிக்கையின்படி இக்கட்டுரையில் உள்ள தகவல்கள் இடம் பெற்றுள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)