27 கொண்டை ஊசி வளைவுகள்.. யானைகள்-புலிகள் நிறைந்த சுற்றுலா தலம்.. திகிலூட்டும் அனுபவத்துக்கு இங்க போங்க!
Dhimbam Hills Tourist Spot: தமிழகத்தில் கோடை காலம் நெருங்கி வரும் நிலையில், காட்டு பகுதிக்குள் வன விலங்குகள் திரியும் பகுதியில் சுற்றுலா செல்ல விரும்பினால் இந்தப் பகுதியை சுற்றுலாப் பயணிகள் தேர்வு செய்யலாம். அது தான் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பகுதியாகும்.

தமிழகத்தில் சுற்றி பார்ப்பதற்கு பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. இதில், சிறந்த சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருவது ஈரோடு மாவட்டத்தில் அமைந்துள்ள திம்பம் மலைப்பகுதியாகும். தமிழகம் - கர்நாடகம் மாநில எல்லையில் அமைந்துள்ள இந்த திம்பம் மலையானது மேற்கு தொடர்ச்சி மலை தொடரில் அமைந்துள்ளது. கடல் மட்டத்தில் இருந்து சுமார் 1,100 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த மலையில் எந்த காலத்திலும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை காணப்படும். இதனால், இங்கு சுற்றுலா செல்வதற்கு ஏற்ற இடம் ஆகும்.

மேலும், அந்த பகுதி முழுவதும் ஏராளமான மரங்கள், செடிகள், கொடிகள் உள்ளிட்டவை காடுகள் போல வளர்ந்து இருக்கும். இதன் வழியாக வாகனங்களில் செல்லும்போது ஒருவித பேரானந்தத்தை நமக்குத் தரும். இந்த மலைப்பகுதியில் தான் பிரபலமான சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் அமைந்துள்ளது. இங்கு சுற்றுலா செல்லும் பொதுமக்கள் திம்பம் மலைப்பகுதிகளை சுற்றி பார்த்துவிட்டு, இந்த புலிகள் காப்பகத்துக்கு சென்று சுற்றி பார்க்கலாம். அங்கு அடைக்கப்பட்டிருக்கும் புலிகளை பார்த்து பரவசமடையலாம்.

மேலும், இந்த பகுதியில் யானைகள், சிறுத்தை, மான், கரடி மற்றும் புலிகள் நடமாட்டம் அதிகமாக காணப்படும். இதனால், திம்பம் மலைப்பகுதியில் சுற்றுலா செல்லும் சுற்றுலாப் பயணிகள் மிகுந்த எச்சரிக்கையுடன் இந்த பகுதியை கடந்து செல்ல வேண்டி இருக்கும். இதை தாண்டி சென்ற பின்னர் அந்தப் பகுதியில் தமிழகத்தின் 2- ஆவது மிகப்பெரிய அளவில் பிரம்மாண்டமாக அமைந்திருக்கும் பவானிசாகர் அணையையும், அதில் கடல் போல தேங்கி இருக்கும் நீரையும் கண்கள் குளிர சுற்றிப் பார்க்கலாம்.

அந்த அணையை ஒட்டிய சாலையில் இயற்கையோடு பேசிக்கொண்டு கைகளை வீசியவாறு நடைபயணமும் மேற்கொள்ளலாம். அப்போது, நம்மை தாலாட்டும் வகையில் வீசும் அப்பழுக்கற்ற தூய்மையான தென்றல் காற்று நம் தேகத்தை தழுவி செல்லும். அப்படியே சற்று அண்ணாந்து பார்த்தால் ஆகாயத்தை தொடும் அளவுக்கு மேற்கு தொடர்ச்சி மலை அணிவகுத்து அமைந்திருக்கும். அந்த மேற்கு தொடர்ச்சி மலையை மேகக் கூட்டங்கள் உரசி செல்லும் காட்சிகள் கண்டிப்பாக நாம் கண்களுக்கு விருந்தாக அமையும். இவற்றையெல்லாம் சுற்றி பார்த்துவிட்டு அடுத்ததாக 27 கொண்டை ஊசி வளைவுகளுடன் நமக்காக காத்திருக்கும் திம்பம் மலை பகுதிக்கு செல்ல வேண்டும்.

இந்த கொண்டை ஊசி வளைவுகள் மிகவும் ஆபத்தானவையாக இருந்தாலும், ஆபத்தானவை தான் அழகாக இருக்கும் என்பது போல அந்த பகுதியும் சற்றும் குறைவின்றி அவ்வளவு ரம்யமாக இயற்கை சூழலுடன் காட்சியளிக்கும். ஒரு திரில்லிங்கான சுற்றுலா செல்ல விரும்பும் சுற்றுலா பயணிகள் இந்த இடத்துக்கு முன்னுரிமை அளிக்கலாம். இந்த பகுதியில் திரில்லிங் அனுபவத்தை சற்றும் குறைக்காத வகையில் குறுகலான சாலையாகவும், செங்குத்தான சாலையாகவும் இந்த திம்பம் மலை சாலை அமைந்துள்ளது.ஈரோட்டில் இருந்து சுமார் 74 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள இந்த திம்பம் மலைக்கு சுமார் 1.30 மணி நேரத்தில் சென்றடையலாம்.