வேலை பிடிக்காத தலைமுறை எது? ஆய்வில் வெளியான ஆச்சரியத் தகவல்
Workplace Dissatisfaction: வேலையை அதிகம் வெறுப்பது இளைய தலைமுறையினர் மட்டுமல்ல; ஜென் எக்ஸ் தலைமுறையினரிடையே வேலை மீதான அதிருப்தி அதிகமாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. ஜென் எக்ஸ் தலைமுறையினரில் 34 சதவீதத்தினர் தங்கள் வேலையை விரும்பவில்லை என்றும், 53 சதவீதத்தினர் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாவிட்டால் வேலையை விட்டுவிடுவோம் என்றும் தெரிவித்துள்ளனர்.
வேலைக்குச் செல்வது, பணிச்சுமையைச் சமாளிப்பது, அலுவலகச் சூழலுடன் ஒத்துப்போவது போன்றவை பலருக்கும் சவாலாக உள்ளன. சிலர் தங்கள் வேலையை விரும்பிச் செய்தாலும், பலர் அதிருப்தியுடன் பணியாற்றுகின்றனர். அமெரிக்காவைச் சேர்ந்த Fast Company வெளியிட்டுள்ள செய்தியின்படி, 1,000-க்கும் மேற்பட்டோரிடம் நடத்தப்பட்ட ஆய்வில், பெரும்பாலானவர்கள் தங்கள் வேலையை முழுமையாக விரும்பவோ வெறுக்கவோ இல்லை என்பது தெரியவந்துள்ளது. Kickresume நிறுவனம் நடத்திய இந்த ஆய்வில், 38 சதவீதத்தினர் தங்கள் வேலையைப் பற்றி நடுநிலையான மனநிலையைக் கொண்டுள்ளனர். 19 சதவீதத்தினர் தங்கள் வேலையை விரும்புவதாகவும், 16 சதவீதத்தினர் மிகவும் விரும்புவதாகவும் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், 15 சதவீதத்தினர் தங்கள் வேலையை விரும்பவில்லை என்றும், 12 சதவீதத்தினர் வேலையை வெறுப்பதாகவும் கூறியுள்ளனர்.
Also Read: இந்திய சருமத்திற்கு ஏற்ற மேக்கப்: சரியான பவுண்டேஷன் மற்றும் பிளஷ் தேர்ந்தெடுப்பது எப்படி?
இளைஞர்கள் அல்ல, ஜென் எக்ஸ் தலைமுறையினரே அதிருப்தியில் முதலிடம்
இளைய தலைமுறையினரான ஜென் இசட் (Gen Z) வேலை செய்வதில் ஆர்வமற்றவர்கள் என்ற கருத்து பரவலாக உள்ளது. ஆனால், இந்த ஆய்வின் முடிவுகள் அதற்கு மாறாக அமைந்துள்ளன. 46 முதல் 61 வயதுக்குட்பட்ட ஜென் எக்ஸ் (Gen X) தலைமுறையினரில் 34 சதவீதத்தினர் தங்கள் வேலையை விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளனர். மில்லினியல்களில் இந்த எண்ணிக்கை 26 சதவீதமாகவும், ஜென் இசட் தலைமுறையினரில் 22 சதவீதமாகவும் உள்ளது.
வேலையை விட்டு வெளியேற விரும்பும் ஊழியர்கள்
வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லாவிட்டால் வேலையை விட்டுவிடுவோம் என்று ஜென் எக்ஸ் தலைமுறையினரில் 53 சதவீதத்தினர் கூறியுள்ளனர். மில்லினியல்களில் 46 சதவீதத்தினரும், ஜென் இசட் தலைமுறையினரில் 36 சதவீதத்தினரும் இதே கருத்தைக் கொண்டுள்ளனர். மேலும், வேறு சிறந்த வேலை கிடைக்காததால் தற்போதைய வேலையில் தொடர்வதாக ஜென் எக்ஸ் பிரிவில் 29 சதவீதத்தினர் தெரிவித்துள்ளனர்.
வேலையை விரும்புவதுபோல் நடிக்கும் ஊழியர்கள்
பணியிடத்தில் தங்களின் உண்மையான உணர்வுகளை வெளிப்படுத்தாமல், உற்சாகமாக இருப்பதுபோல் பலர் நடந்துகொள்வதாகவும் ஆய்வு கூறுகிறது. சுமார் 37 சதவீதத்தினர் வேலையை விரும்புவதுபோல் வெளிப்படுத்தினாலும், வாரத்தில் சில நாட்கள் வேலை குறித்த மனஅழுத்தத்தை உணர்கின்றனர். மேலும், 26 சதவீதத்தினர் பணியில் இருந்துகொண்டே வேறு வேலை தேடுகின்றனர். 20 சதவீதத்தினர் மாற்று வேலை கிடைக்காததால் தற்போதைய பணியில் தொடர்கின்றனர்.
Also Read: இந்திய சருமத்திற்கு ஏற்ற மேக்கப்: சரியான பவுண்டேஷன் மற்றும் பிளஷ் தேர்ந்தெடுப்பது எப்படி?
பணியிடத்தில் உண்மையான மகிழ்ச்சி குறைவா?
ஆய்வில் பங்கேற்றவர்களில் 16 சதவீதத்தினர் ஒவ்வொரு வேலை நாளையும் மனஅழுத்தத்துடன் எதிர்கொள்வதாகத் தெரிவித்துள்ளனர். அதே நேரத்தில், 13 சதவீதத்தினர் மட்டுமே தங்கள் வேலையில் உண்மையான மகிழ்ச்சியுடன் இருப்பதாகக் கூறியுள்ளனர். கடந்த வாரத்தில் மட்டும் 86 சதவீதத்தினர் தாங்கள் உணர்ந்ததைவிட அதிக உற்சாகத்துடன் இருப்பதுபோல் நடந்துகொண்டதாகத் தெரிவித்துள்ளனர். இதன் மூலம், பணியிடத்தில் வெளிப்படும் உற்சாகத்திற்கும் ஊழியர்களின் உண்மையான மனநிலைக்கும் இடையே வேறுபாடு இருக்கலாம் என்பது தெரியவருகிறது.
பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.