Food Recipe: பருவ கால மாற்றம்! சளி, இருமல் தொல்லையா..? பாதுகாக்கும் ஆட்டுக்கால் பாயா சூப்!
Healthy Mutton Paya Soup: மழைக்காலத்தில் சளி, இருமல் போன்ற பிரச்னைகளில் இருந்து பாதுகாக்க ஆட்டுக்கால் பாயா சூப் சிறந்தது. இதில் எலும்பு வலிமையை அதிகரிக்கும் தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இந்த செய்முறையில் ஆட்டுக்கால்களை மசாலா பொருட்களுடன் பிரஷர் குக்கரில் வேகவைத்து, சுவையான சூப்பாக தயாரிக்கலாம். இது ஆரோக்கியமானது மட்டுமல்லாமல் ருசியாகவும் இருக்கும்.

கிட்டத்தட்ட வெயில் காலம் (Summer) முடிவடைந்து மழைக்காலம் தொடங்க இருக்கிறது. வெப்பநிலை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகிறது. அதேநேரத்தில், மழையும் பெய்து வருகிறது. இதுபோன்ற காலக்கட்டத்தில் பலரும் சூடான மற்றும் காரமான ஏதாவது ஒரு உணவை சாப்பிட விரும்புவார்கள். அதன்படி, பலரும் சிக்கன் பிரைடு ரைஸ் போன்ற துரித உணவுகளை சாப்பிடுகிறார்கள். இவை ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மழைக்காலத்தில் சூடாகவும், ஆரோக்கியமானதாகவும் ஏதாவது ஒன்றை சாப்பிட வேண்டுமென்றால், ஆட்டுக்கால் பாயா சூப்பை செய்யலாம். இதில் உள்ள தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உடலை சூடாக வைத்திருக்க உதவி செய்யும். மேலும், சளி மற்றும் உடல் பருமனை தடுக்க உதவி செய்யும். இதுபோன்ற சூழ்நிலையில், ஆட்டுக்கால் பாயா சூப் (Mutton Paya Soup) எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
ஆட்டுக்கால் பாயா சூப்
தேவையான பொருட்கள்:
- ஆட்டுக் கால்கள் – 5 முதல் 6
- தண்ணீர் – 650 மில்லி
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்
- நறுக்கிய வெங்காயம் – 1 கப்
- நறுக்கிய பூண்டு – 5
- கொத்தமல்லி இலைகள் – ஒரு கைப்பிடி அளவு
- இலவங்கப்பட்டை – 1
- ஜாதிக்காய் – 1
- கிராம்பு – 2
- பிரியாணி இலைகள் – 2
- ஏலக்காய் – 2
- இஞ்சி – சிறு துண்டு
- உப்பு – தேவையான அளவு
- மிளகு பொடி – தேவையான அளவு
ஆட்டுக்கால் பாயா சூப் செய்வது எப்படி..?
- கடைகளில் வாங்கிய ஆட்டுக்கால்களை கழுவி மஞ்சள் உப்பு தேய்த்து ஓடும் தண்ணீரில் நன்றாக கழுவி எடுத்து கொள்ளவும்.
- இப்போது, அடுப்பை ஆன் செய்து பிரஷர் குக்கரை வைத்து சூடாக்கவும். பிரஷர் குக்கரில் எண்ணெயை ஊற்றி சூடானதும் இலவங்கப்பட்டை, ஜாதிக்காய், கிராம்பு, பிரியாணி இலைகள், ஏலக்காய், இஞ்சி போன்ற மசாலா பொருட்களை சேர்க்கவும்.
- இவற்றை நன்றாக வதக்கியதும் நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி சேர்த்து வதக்கி கொள்ளவும். பின்னர், கழுவி வைத்துள்ள ஆட்டுக்கால்களை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து குறைந்த தீயில் வதக்கவும்.
- ஆட்டுக்கால்களை பிரட்டிய சிறிது நேரத்திற்கு பிறகு, உப்பு, மிளகு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கவும். அடுத்ததாக, பிரஷர் குக்கரை மூடி போட்டு 3 விசில் வரும் வரை காத்திருக்கவும்.
- விசில் அடங்கியதும் உப்பு மற்றும் காரம் சரியான அளவில் இருக்கிறதா என்பதை சோதனை செய்து கொள்வோம். குறைவாக இருந்தால் உப்பு மற்றும் மிளகு பொடியை தேவைகேற்ப சேர்த்து கொள்ளுங்கள்.
- இப்போது, ஒரு பரிமாறும் பாத்திரத்தில் ஆட்டுக்கால் பாயா சூப்பை ஊற்றி எலுமிச்சை சாற்றை பிழிந்து கொள்ளவும். அவ்வளவுதான், சுவையான ஆட்டுக்கால் பாயா சூப் ரெடி.
ஆட்டுக்கால் பாயா சூப்பின் நன்மைகள்:
ஆட்டுக்கால் பாயா சூப்பில் தாதுக்கள், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், சோடியம், ஃப்ளூரைடு மற்றும் பொட்டாசியம் போன்ற நல்ல ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இது எலும்புகளை வலிமையாக்குகிறது. நியூட்ரிஷன் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையின்படி, ஆட்டுக்கால் பாயா சூப் குடிப்பது உடலில் வீக்கத்தை குறைக்கும். இதிலுள்ள அழற்ஜி எதிர்ப்பு பண்புகள் சளி போன்றவற்றை சரிசெய்யும்.