உடற்பயிற்சிக்கு பிறகு ஐஸ் பாத் வேண்டாமா? புதிய ஆய்வு சொல்லும் எச்சரிக்கை!
Cold Water Therapy: ஐஸ் பாத் எடுத்துக்கொள்வது உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் தசை வலியைக் குறைத்து, உடல் விரைவாக மீண்டு வர உதவலாம். ஆனால் தொடர்ந்து எடை தூக்கும் பயிற்சிக்குப் பிறகு ஐஸ் பாத் எடுப்பது தசை வளர்ச்சியையும் வலிமை அதிகரிப்பையும் பாதிக்க வாய்ப்புள்ளது. எனவே, உடற்பயிற்சியின் தன்மை மற்றும் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவ ஆலோசனையுடன் ஐஸ் பாத் மேற்கொள்வது நல்லது.
உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் தசை வலியைக் குறைக்க ஐஸ் பாத் எனப்படும் குளிர்ந்த நீர் குளியல் (Cold Water Therapy) பலராலும் பின்பற்றப்படுகிறது. குறிப்பாக விளையாட்டு வீரர்கள் மற்றும் உடற்பயிற்சி ஆர்வலர்கள் தசைகள் விரைவாக மீண்டு வருவதற்காக இந்த முறையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ஐஸ் பாத் உண்மையில் உடலுக்கு நன்மை தருகிறதா என்பது குறித்து ஆஸ்திரேலியாவின் எடித் கோவன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் விரிவான ஆய்வு மேற்கொண்டுள்ளனர். உடற்பயிற்சியின் தன்மை மற்றும் தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்தே ஐஸ் பாத் பயன்படுத்துவது சிறந்தது.
Also Read: மழைக்காலத்தில் துணிகளில் ஈர வாடை வருகிறதா? அலமாரி முதல் ஆடை வரை எப்படி பாதுகாப்பது?
தசை வலியைக் குறைக்க உதவும்
இந்த ஆய்வில் 15 ஆய்வு மதிப்பீடுகள், 161 தனிப்பட்ட ஆய்வுகள் மற்றும் 3,200-க்கும் மேற்பட்டோரின் தரவுகள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் உடற்பயிற்சிக்குப் பிறகு குளிர்ந்த நீரில் குளிப்பது தசை வலியைக் குறைக்க உதவுவது தெரியவந்துள்ளது. குறிப்பாக அதிக தீவிரமான உடற்பயிற்சிக்குப் பிறகு ஏற்படும் தசை வலியை நான்கு நாட்கள் வரை கட்டுப்படுத்துவதற்கும், தசை பாதிப்பைக் குறிக்கும் சில ரத்தக் குறியீடுகளை மேம்படுத்துவதற்கும் உதவலாம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.
உடல் வலிமை அதிகரிப்பதில் கவனம் தேவை
ஐஸ் பாத் எடுத்த உடனேயே தசைகளின் செயல்திறன் அதிகரிக்கும் என்று கூற முடியாது. குளிர்ந்த நீரால் தசைகளின் வெப்பநிலை தற்காலிகமாகக் குறைவதால், வேகமாகச் செயல்படுதல், துள்ளிக் குதித்தல் போன்ற செயல்பாடுகளில் ஆரம்ப நேரத்தில் பாதிப்பு ஏற்படலாம். போதுமான நேரம் உடலை இயல்பான வெப்பநிலைக்குக் கொண்டுவந்த பிறகே சில செயல்திறன் மேம்பாடுகள் கிடைக்கக்கூடும்.
தசை வளர்ச்சியைப் பாதிக்கும் அபாயம்
இந்த ஆய்வில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம், தொடர்ந்து எடை தூக்கும் பயிற்சிக்குப் பிறகு ஐஸ் பாத் எடுப்பது தசை வளர்ச்சியைக் குறைக்கக்கூடும் என்பதாகும். தசைகளின் வளர்ச்சிக்குத் தேவையான புரத உற்பத்தி மற்றும் இயற்கையான மீட்பு செயல்முறைகளை குளிர்ந்த நீர் பாதிக்கலாம். இதனால் நீண்டகாலத்தில் தசை அளவு மற்றும் வலிமை அதிகரிப்பது குறைய வாய்ப்புள்ளது.
Also Read: மழைக்காலத்தில் துணிகளில் ஈர வாடை வருகிறதா? அலமாரி முதல் ஆடை வரை எப்படி பாதுகாப்பது?
எவ்வளவு நேரம் ஐஸ் பாத் எடுக்கலாம்?
ஆய்வாளர்களின் பரிந்துரைப்படி, பொதுவாக 10 முதல் 15 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையுள்ள நீரில் 10 முதல் 15 நிமிடங்கள் வரை உடலை மூழ்க வைப்பது மீட்புக்கு உதவக்கூடும். இருப்பினும், ஐஸ் பாத் அனைவருக்கும் ஏற்றது அல்ல. குறிப்பாக இதயப் பிரச்சினைகள் உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் உள்ளவர்கள் மருத்துவரின் ஆலோசனையின்றி இதனை முயற்சிக்கக் கூடாது. உடற்பயிற்சியின் தன்மை மற்றும் தனிநபரின் உடல்நிலையைப் பொறுத்தே ஐஸ் பாத் பயன்படுத்துவது சிறந்தது.