Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

40 வயதுக்கு பிறகும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? இந்த எளிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க

Fitness Tips After 40 : உடல் 40 வயதுக்கு மேல் முன்பை விட மெதுவாக செயல்பட துவங்குகிறது. குறிப்பாக சமீப காலமாக அனைவரும் அமர்ந்தபடியே கணினி முன் வேலை செய்து வருகிறோம். இந்த நிலையில் 40 வயதுக்கு பிறகும் சுறுசுறுப்பாக இருக்க செய்ய வேண்டிய உடற்பயிற்சிகள் குறித்து இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

40 வயதுக்கு பிறகும் சுறுசுறுப்பாக இருக்க வேண்டுமா? இந்த எளிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க
மாதிரி புகைப்படம்
karthikeyan-s
Karthikeyan S | Published: 30 Jun 2025 23:21 PM

இப்போதெல்லாம், கணினி முன் உட்கார்ந்தபடியே வேலை பார்ப்பது பழக்கமாகி வருகிறது. இருப்பினும், இவை உடலின் ஆரோக்கியத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக நீங்கள் வயதாகும்போது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக 40 வயதிற்குப் பிறகு, உடல் முன்பை விட மெதுவாகவே செயல்படும். இதுபோன்ற நேரங்களில், சிறிய உடற்பயிற்சிகளைச் செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியத்தைப் பராமரிக்கலாம். உட்கார்ந்த படியே வேலை பார்ப்பதன் காரணமாக எடை அதிகரிப்பு, முதுகுவலி, கால் வலி போன்ற பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். இருப்பினும், ஒரே சேரில் அமர்ந்த படியே செய்யப்படும் சிறிய உடற்பயிற்சிகள் உங்கள் உடலை சுறுசுறுப்பாக வைத்திருக்கும்.

உட்கார்ந்தபடியே செய்யக்கூடிய எளிமையான பயிற்சிகள்

ஆரோக்கியமாக இருப்பது என்பது உடலுக்கானது மட்டுமல்ல, மன அழுத்தத்தைக் குறைப்பதற்கும் இது முக்கியம். ஒரு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, உங்கள் கால்களை தரையில் உறுதியாக வைக்கவும். இரு கைகளையும் தலையை நோக்கி உயர்த்தி, உடலை மேல்நோக்கி நீட்டவும். 10 வினாடிகள் நிறுத்திவிட்டு இயல்பு நிலைக்குத் திரும்பவும். இது முதுகுவலியைக் குறைப்பதில் பயனுள்ளதாக இருக்கும்.

நீண்ட நேரம் உட்கார்ந்திருப்பது கால்களில் உணர்வின்மை மற்றும் வலியை ஏற்படுத்தும். இதனைத் தவிர்க்க இந்த எளிய பயிற்சியை செய்யலாம். கால்கள் தரையில் உறுதியாக ஊன்றப்பட வேண்டும். பின்னர் உங்கள் குதிகால்களை உயர்த்தவும். கால் விரல்கள் தரையில் இருக்க வேண்டும். 5 முதல் 10 வினாடிகள் தொடர வேண்டும், பின் மெதுவாக உங்கள் பாதத்தை தரையில் இறக்கவும். இது இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது.

அமர்ந்தபடி கால் தூக்கும் பயிற்சி. இந்த பயிற்சி உடலை பலப்படுத்துகிறது. ஒரு நாற்காலியில் நிமிர்ந்து உட்கார்ந்து, ஒரு காலை தரைக்கு இணையாக உயர்த்தவும். அந்த நிலையில் 5 விநாடிகள் இருங்கள். பின்னர் மீண்டும் உங்கள் முழங்காலை தாழ்த்தவும். மற்ற காலிலும் அவ்வாறே செய்யுங்கள். இது முழங்கால்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

உட்கார்ந்தபடி வேலை செய்பவர்களுக்கு கழுத்து வலி மிகவும் பொதுவான பிரச்சனையாகும். இதைக் குறைக்க, கழுத்தை மெதுவாக இருபுறமும் சுழற்றி, ஒவ்வொரு மணி நேரமும் மேலும் கீழும் சுழற்ற வேண்டும். இது தசை பதற்றத்தைக் குறைத்து கழுத்து இயக்கத்தை மேம்படுத்துகிறது.

நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்து டைப் செய்வது உங்கள் கைகள் மற்றும் தோள்களில் அழுத்தத்தை ஏற்படுத்தும். உங்கள் கைகளை நேராக பக்கவாட்டில் நீட்டி, அவ்வப்போது உங்கள் தோள்களை சுழற்றுவது உங்கள் தசைகளில் ஏற்படும் இருக்க உணர்வைக் குறைக்க உதவும்.

உங்கள் உடலை கொஞ்சம் கவனித்துக் கொண்டால், நீண்ட காலத்திற்கு உங்கள் ஆரோக்கியத்தை பராமரிக்க முடியும். உடற்பயிற்சியைத் தவிர்ப்பதற்கு பதிலாக, உட்கார்ந்தபடியே உடற்பயிற்சி செய்வது உடலுக்குத் தேவையான இயக்கத்தைக் கொடுக்க உதவும். 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்காக தங்கள் வாழ்க்கை முறையில் இந்த சிறிய மாற்றங்களைச் செய்யலாம்.