போட்டி போட்டுக்கொண்டு 19 பீர் குடித்த இளைஞர்கள்.. மயங்கி விழுந்து பரிதாப பலி!
Young Men Died Over Alcohol | ஆந்திர பிரதேசத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் பீர் குடிப்பது தொடர்பாக போட்டி வைத்துள்ளனர். அப்போது இருவரும் போட்டிப்போட்டுக்கொண்டு 19 பீர் குடித்த நிலையில், உடலில் நீர் சத்து குறைந்து இருவரும் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.
திருப்பதி, ஜனவரி 21 : ஆந்திர பிரதேச (Andhra Pradesh) மாநிலம் , அன்னமயா மாவட்டம், பண்டவாரி பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மணி குமார். 34 வயதான இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். அதே ஊரை சேர்ந்த 26 வயது புஷ்பராஜ் என்ற இளைஞரும் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில், இருவரும் இணைந்து சங்கராந்தி பண்டிகை கொண்டாட சென்னையில் இருந்து தங்களது சொந்த ஊருக்கு சென்றுள்ளனர்.
யார் அதிக பீர் குடிப்பது என போட்டி வைத்த நண்பர்கள்
ஊருக்கு சென்ற அவர்கள் நண்பர்களுடன் மகிழ்ச்சியாக நேரம் கழிக்க விரும்பியுள்ளனர். இதன் காரணமாக ஊருக்கு ஒதுக்குப்புறமாக உள்ள மலைக்கு பீர் மற்றும் மதுபாட்டில்களை வாங்கிக்கொண்டு சென்றுள்ளனர். அப்போது நண்பர்களிடையே யார் அதிக பீர் குடிப்பது என போட்டி உருவாகியுள்ளது. அப்போது மணிக்குமார் – புஷ்யராஜ் இருவரும் போட்டி போட்டுக்கொண்டு பீர் குடிக்க தொடங்கியுள்ளனர். அதன்படி மதிய 3 மணி முதல் இரவு 7.30 மணி வரை மொத்தம் 19 பீர் குடித்துள்ளனர்.
இதையும் படிங்க : டெல்லியில் குடியரசு தின விழா.. தேனி பழங்குடித் தம்பதியினருக்கு அழைப்பு.. ஏன் தெரியுமா?
மருத்துவமனைக்கு செல்லும் வழியில் பலியான இளைஞர்கள்
அதிக அளவு பீர் குடித்ததன் காரணமாக அவர்களது உடலில் நீர்சத்து குறைபாடு ஏற்பட்டுள்ளது. உடனே அவர்கள் இருவரும் மயங்கி விழுந்துள்ளனர். அதனை கண்டு அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே மணிக்குமார் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். புஷ்பராஜுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவரும் சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார்.
இதையும் படிங்க : சபரிமலை தங்க திருட்டு வழக்கு: தமிழகம் உள்பட 21 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை!
இது தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், இருவரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். பிரேத பரிசோதனை முடிவில் இருவரும் அதிகப்படியாக மது அருந்தியதன் காரணமாக உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.