நாடு முழுவதும் இன்று ஸ்டிரைக்.. என்னென்ன சேவைகள் பாதிக்கும், என்ன சேவைகள் கிடைக்கும்?
Nationwide strike today: தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவின் தொழிற்சங்கம் இந்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், இன்று மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயங்க வாய்ப்புள்ளது. அதேபோல், மின்சாரம், வங்கி, காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு மற்றும் நீர் விநியோக சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது.

மாதிரிப் புகைப்படம் (AI)
மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து, நாடு முழுவதும் பல்வேறு தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இன்று (பிப்.12) வேலைநிறுத்தம் நடைபெறுகிது. இந்த வேலைநிறுத்தத்தில் வங்கி ஊழியர்கள், பொதுசேவை நிறுவன ஊழியர்கள் என சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்பா் என எதிா்பாா்க்கப்படுவதால், இன்று பல சேவைகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் ஆளும் கட்சியான திமுகவின் தொழிற்சங்கம் இந்த நாடு தழுவிய பொது வேலைநிறுத்தத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இதனால், இன்று மாநிலம் முழுவதும் அரசுப் பேருந்துகள் குறைந்த அளவிலேயே இயங்க வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: 30 ஆண்டுகள் சிறை.. நிரபராதி என கூறி விடுதலை.. அடுத்த நாளே உயிரிழந்த சோகம்.. நடந்தது என்ன?
4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்:
ஐஎன்டியூசி, ஏஐடியூசி, ஹெச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி, யுடியுசி உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில் இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது. 4 தொழிலாளா் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும்; வரைவு விதை மசோதா, மின்சார சட்டத் திருத்த மசோதா, அணுமின் உற்பத்தியில் தனியாரை அனுமதிக்கும் மசோதாவை திரும்பப் பெற வேண்டும் என்பது இந்த தொழிற்சங்கங்களின் முக்கிய கோரிக்கைகளாகும்.
30 கோடி தொழிலாளர்கள் பங்கேற்பு:
இது தொடா்பாக ஏஐடியூசி பொதுச்செயலா் அமா்ஜீத் கெளா் கூறுகையில், மத்திய அரசின் தொழிலாளா் விரோத, விவசாயிகள் விரோத, தேசியவிரோத, பெருநிறுவன ஆதரவு கொள்கைகள் மீதான எதிா்ப்பை வெளிப்படுத்தும் வகையில் நாடு தழுவிய வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறவுள்ளது. மின்விநியோகம், காப்பீடு, போக்குவரத்து, சுகாதாரம், கல்வி, எரிவாயு, குடிநீா் விநியோகம் உள்பட பல்வேறு துறைகளைச் சோ்ந்த சுமாா் 30 கோடி தொழிலாளா்கள் பங்கேற்க உள்ளனா். இதனால், இந்த துறைசாா் சேவைகள் பாதிக்கப்படும்.
இதையும் படிங்க: 50 ஆண்டுகளுக்கு முன்பு கோதுமை திருடிய வழக்கில் 65 வயது முதியவர் கைது.. மபியில் அதிர்ச்சி சம்பவம்!
பெருவாரியாக பங்கேற்கும் பணியாளர்கள்:
வங்கி ஊழியா்கள் ஏற்கெனவே ஜன.27-இல் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்திய நிலையில், குறிப்பிட்ட சில வங்கி ஊழியா் சங்கங்கள் மட்டும் தற்போதைய போராட்டத்தில் பங்கேற்கவுள்ளன. சுரங்கம் மற்றும் எரிவாயு குழாய் பணிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தின் தாக்கம் அதிகமிருக்கும். காப்பீடு துறையில் 100 சதவீத அந்நிய நேரடி முதலீடு அனுமதியைக் கண்டித்து, அந்த துறை பணியாளா்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கின்றனா். போக்குவரத்துத் துறையில் தனியாா் மற்றும் அரசுப் பணியாளா்கள் பெருவாரியாக போராட்டத்தில் பங்கேற்க உள்ளனா் என்றாா்.
என்ன சேவைகள் பாதிக்கப்படலாம்?
வங்கி ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்பதாக அறிவித்துள்ளதால், பொதுத்துறை வங்கி சேவைகள் இடையூறுகளை சந்திக்க நேரிடும். AIBEA, AIBOA மற்றும் BEFI போன்ற முக்கிய வங்கி தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் கலந்து கொள்வதாக குறிப்பிட்டுள்ளன. இது கிளை அளவிலான செயல்பாடுகளை பாதிக்கலாம். குறிப்பாக எஸ்பிஐ ஊழியர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்க உள்ளதால், அவர்களது வங்கிச் சேவைகள் சற்று பாதிக்கப்படலாம் என்று வாடிக்கையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால், சில சேவைகள் தாமதங்களை சந்திக்க நேரிடும் என்றாலும், கிளைகள் திறந்திருக்கும் என்று தெரிகிறது. மேலும், பேருந்து போக்குவரத்து சேவைகளும் பெரிதாக பாதிக்கப்படலாம்.
என்னென்ன திறந்திருக்கும்?
மருத்துவமனைகள் மற்றும் ஆம்புலன்ஸ் சேவைகள் போன்ற அவசர சேவைகள் வழக்கம் போல் செயல்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையங்கள் மற்றும் அத்தியாவசிய பயன்பாடுகளும் வழக்கம் போல் செயல்படும். எனினும், போராட்டங்கள் மற்றும் சாலை மறியல்கள் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படக்கூடும் என்பதால், பயணிகள், இதர பணிகளுக்கு செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு புறப்பட்டுச்செல்வதன் மூலம் கடைசிநேர பதற்றத்தை குறைக்கலாம்.