சைபர் மிரட்டல்.. ரூ.50 லட்சத்தை இழந்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!
Cyber Crime: மத்தியப் பிரதேச இன்ஸ்டாகிராம் பிரபலம் அசிம் அகமது, சைபர் கிரைம் மோசடியாளர்களால் ₹50 லட்சம் இழந்தார். போலி பதிப்புரிமை அச்சுறுத்தல்கள் மூலம் மிரட்டி பணம் பறித்ததாக அவர் புகார் அளித்துள்ளார். சமூக வலைத்தள பிரபலங்களை குறிவைத்து நடக்கும் இத்தகைய புதிய சைபர் மோசடிகள் குறித்து சைபர் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.

ஜபல்பூர், அக்டோபர் 23: மத்தியப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஒருவர் சைபர் கிரைம் மோசடியில் சிக்கி லட்சக்கணக்கில் பணத்தை இழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தொடர்ச்சியாக சைபர் கிரைம் மோசடிகள் அரங்கேறி வருகிறது. விதவிதமாக நடக்கும் இந்த மோசடிகளை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகள் எடுத்தும், பொதுமக்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்தியும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அப்படியான ஒரு சம்பவம் பற்றி நாம் காணலாம்.மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரைச் சேர்ந்தவர் அசிம் அகமது. 28 வயதான இவர், சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க நபராக உள்ளது. பொருட்கள், கடைகள் போன்றவற்றை விளம்பரப்படுத்துவது தொடங்கி பல்வேறு விதமான பிரமோஷன்களும் செய்து வருகிறார். இவர் இன்ஸ்டாகிராமில் மட்டும் 57 மில்லியன் ஃபாலோயர்ஸ்களை வைத்துள்ளார்.
அசிம் அகமது, மென்பொருள் பொறியாளராக பட்டப்படிப்பு முடித்தவர். ஆனால் தன்னிடம் இருந்த திறமை மூலம் டிஜிட்டல் தொழில்முனைவோராக மாறினார். தனக்கென புதிதாக தனது ஆன்லைன் சாம்ராஜ்யத்தை உருவாக்கினார். 2017 இல் உருவாக்கப்பட்ட அவரது முதல் இன்ஸ்டாகிராம் பக்கம், 2021 ஆம் ஆண்டு கொரோனா ஊரடங்கின் போது பெரும் வரவேற்பைப் பெற்றது, பின்னர் அவர் நண்பர்களுடன் சேர்ந்து ஹூப்பி டிஜிட்டல் என்ற டிஜிட்டல் மார்க்கெட்டிங் ஸ்டார்ட்அப் நிறுவனத்தைத் தொடங்கினார்.
Also Read: தமிழ்நாட்டை அலறவிடும் 2 சைபர் மோசடிகள்.. மக்களே உஷார்!
இந்த நிலையில் இவர் ஜபல்பூர் சைபர் பிரிவில் அகமது புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில் தான் கடினமாக உழைத்ததன் மூலம் எனக்கென ஒரு இடத்தை உருவாக்கினேன். ஆனால் இந்த வெற்றி இப்போது தூக்கமில்லாத இரவுகளைக் கொண்டு வந்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு வருடமாக, எனக்கு போலி பதிப்புரிமை எதிர்ப்புகளும் அச்சுறுத்தல்களும் வருகின்றன. எனது பதிவுகள் தங்கள் உள்ளடக்கம் என்று அவர்கள் கூறி, நான் பணம் செலுத்தவில்லை என்றால், எனது சமூக வலைத்தள கணக்குகளை நீக்க நடவடிக்கை எடுப்போம் என்று சிலர் கூறுகிறார்கள்
இதனால் எனது பக்கங்களையும் வாழ்வாதாரத்தையும் இழந்துவிடுவோமோ என்ற அச்சத்தில், மிரட்டி பணம் பறித்தார்கள். அவர்களுக்கு மீண்டும் மீண்டும் பணம் கொடுத்ததாகவும்,இதுவரை ரூ.50 லட்சம் பெற்றும் விடாமல் மிரட்டுகிறார்கள். தொலைபேசி அழைப்புகள் மற்றும் போலியான இன்ஸ்டாகிராம் மெசெஜ்கள், மின்னஞ்சல்கள் வரை அச்சுறுத்தல்கள் அதிகரித்ததாக அசிம் அகமது கூறியுள்ளார். மேலும் புனேவிலிருந்து ஒரு அழைப்பாளர் இடைத்தரகர் என கூறி போலி மிரட்டல்களை சரி செய்ய ரூ.25,000 முதல் ரூ.30,000 வரை கேட்டார். எனவே இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.
Also Read: பொதுமக்களுக்கு சைபர் கிரைம் எச்சரிக்கை: தகவல்களை தவறாக பகிரும் போலி கணக்குகள்
இப்படியான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த சைபர் காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். இது ஒரு புதிய யுக சைபர் கிரைம் மோசடியாக அரங்கேறி வருகிறது. சமூக வலைத்தளம் மூலம் பிரபலமாகி பணம் சம்பாதிக்கும் நபர்களை குறிவைத்து நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.