Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குடியரசு தின நிகழ்ச்சியில் 3வது வரிசையில் இருக்கை.. சால்வை அணிய மறுத்த ராகுல்.. பாஜகVSகாங்., அவமதிப்பு குற்றச்சாட்டு!!

BJP vs Congress clash; இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், பாஜகவினர் இந்த வீடியோவை பகிர்ந்து, ராகுல் காந்தி செய்தது கலாச்சார அவமதிப்பு என குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதோடு, குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டும் அவர் அதனை அணியவில்லை என்றும் சாடி வருகின்றனர்.

குடியரசு தின நிகழ்ச்சியில் 3வது வரிசையில் இருக்கை.. சால்வை அணிய மறுத்த ராகுல்.. பாஜகVSகாங்., அவமதிப்பு குற்றச்சாட்டு!!
ராகுல் காந்தியால் எழுந்த சர்ச்சை
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 27 Jan 2026 13:05 PM IST

டெல்லி, ஜனவரி 27: டெல்லியில் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் 3வது வரிசையில் அமர வைக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் எதிர்க்கட்சித் தலைவரை இப்படி அவமதிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது காங்கிரஸ் கட்சியினர் கொதித்தனர். அதேபோல், குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில், வடகிழக்கு மாநில கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய சால்வையை ராகுல் காந்தி அணிய மறுத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதன் மூலம் காங்கிரஸ் மற்றும் பாஜக ஆகிய இரு கட்சிகளும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் அவமதிப்பு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகின்றன. இந்நிலையில், டெல்லியில் நேற்று என்ன நடந்தது? எதனால் இந்த சர்ச்சை தொடர்கிறது என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மேலும் படிங்க : பட்ஜெட் 2026 : வரி செலுத்துவோருக்கு மீண்டும் குட் நியூஸ் சொல்வாரா நிர்மலா சீதாராமன் – எகிறும் எதிர்பார்ப்பு?

77வது குடியரசு தின விழா:

டெல்லியில் உள்ள கடமைப் பாதையில் 77வது குடியரசு தினவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவில் குடியரசு துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜே.பி.நட்டா, எஸ்.ஜெய்சங்கர், சிவராஜ் சிங் சவுகான், தர்மேந்திர பிரதான், பூபேந்தர் யாதவ், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சியின் போது, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அவமதிப்புக்கு உள்ளாக்கப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

ராகுல் காந்திக்கு 3வது இருக்கை:

இந்த விழாவில், முதல் வரிசையில் மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவுடன், குடியரசு முன்னாள் துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரும் அமர வைக்கப்பட்டிருந்தனர். ஆனால், எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தியும், காங்கிரஸ் தலைவரான மல்லிகார்ஜூன கார்கேவும் 3வது வரிசையில் உள்ள இருக்கையில் அமர வைக்கப்பட்டிருந்தனர். இதையடுத்து, 3வது வரிசையில் கார்கே, ராகுல் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை எக்ஸ் தளத்தில் பகிர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் ரன்தீப் சுர்ஜேவாலா, நாட்டில் எதிர்க்கட்சி தலைவருக்கு இத்தகைய மரியாதை அளிப்பது கண்ணியம், பாரம்பரியம் மற்றும் நெறிமுறைகளின் தரத்திற்கு ஏற்புடையதா? இது தாழ்வு மனப்பான்மையால் பாதிக்கப்பட்ட அரசின் விரக்தியை மட்டுமே வெளிப்படுத்துகிறது என்று விமர்சித்திருந்தார்.

காங்கிரஸ் கடும் விமர்சனம்:

அவரைத்தொடர்ந்து, காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் தங்களது தலைவர்களை அவமதித்துவிட்டதாக கடும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து பாஜகவை விமர்சித்து வருகின்றனர். 2018ம் ஆண்டு இதேபோல் ராகுல் காந்திக்கு கடைசி வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட்டபோதும் காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. நெறிமுறைப்படி, எதிர்க்கட்சித் தலைவருக்கு மத்திய அமைச்சர்களுடன் முன் வரிசையில் இருக்கை ஒதுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் சுட்டிக்காட்டினர்.

சால்வை அணிய மறுத்த ராகுல் காந்தி:

இதனிடையே, டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடைபெற்ற ‘அட் ஹோம்’ வரவேற்பு நிகழ்ச்சியில், ராகுல் காந்தி பங்கேற்றிருந்தார். இதில், வடகிழக்கு மாநில கலாச்சாரத்தைப் பிரதிபலிக்கும் பாரம்பரிய சால்வையை (Gamosa) அங்கிருந்த பலரும் அணிந்திருந்தனர். இந்த சால்வையை ராகுல் காந்தி அணிய மறுத்ததாகக் கூறப்படுகிறது. அதோடு, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு இருமுறை சால்வை அணியும்படி ராகுலிடம் கேட்டுக்கொண்ட போதிலும், அவர் அதை அணியாமல் கையிலேயே வைத்திருந்ததாக தெரிகிறது.

பாஜக அவமதிப்பு குற்றச்சாட்டு:

இதுதொடர்பான புகைப்படங்கள், வீடியோக்கள் இணையத்தில் வெளியான நிலையில், பாஜகவினர் இந்த புகைப்படம், வீடியோவை பகிர்ந்து, ராகுல் காந்தி செய்தது கலாச்சார அவமதிப்பு என குற்றஞ்சாட்டி வருகின்றனர். அதோடு, குடியரசுத் தலைவர் கேட்டுக்கொண்டும் அவர் அதனை அணியவில்லை என்றும் சாடி வருகின்றனர். இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதலிளித்த காங்கிரஸ் தலைவர்கள், ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் சிலரும் அந்த சால்வயை அணியவில்லை என புகைப்பட ஆதாரத்துடன் பதிவிட்டு பதிலடி அளித்து வருகின்றனர்.