விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்.. சுபான்ஷு சுக்லாவுடன் பேசிய பிரதமர் மோடி!
PM Modi Talks To Shubhanshu Shukla : சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி பேசியுள்ளார். சுபான்ஷு சுக்லாவின் உடல்நலம், விண்வெளி பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

சுபான்ஷு சுக்லா - பிரதமர் மோடி
டெல்லி, ஜூன் 28 : சர்வதேச விண்வெளி மையத்தில் உள்ள இந்திய வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் (Shubhanshu Shukla) பிரதமர் மோடி (PM Modi) பேசியுள்ளார். சுபான்ஷு சுக்லாவின் உடல்நலம், விண்வெளி பணிகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. சர்வசேத விண்வெளி மையத்தில் இருக்கும் சுபான்ஷு சுக்லா, 14 நாட்கள் தங்கி இருந்து ஆராய்ச்சிகளை மேற்கொண்டு வருகிறார். முதல்முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார் சுபான்ஷு சுக்லா. ஆக்ஸியம் 4 மிஷன் திட்டத்தில் சுபான்ஷு சுக்லா உட்பட 4 வீரர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளனர். சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேருக்கு 2025 ஜூன் 25ஆம் தேதி மதியம் 12.01 மணிளவில் அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி மையத்தில் இருந்து பால்கன் 9 ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தில் புறப்பட்டு சென்றனர்.
விண்வெளி நிலையத்தில் இந்திய வீரர்
இந்த விண்கலம் 28 மணி நேரத்திற்கு பிறகு, 2025 ஜூன் 26ஆம் தேதி மாலை 6 மணியளவில் டிரான் விண்கலன் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றது. அமெரிக்காவின் பெக்கி விட்சன், போலந்தின் ஸ்லாவோஸ் விஸ்னீவ்ஸ்கி மற்றும் ஹங்கேரிய திபோர் கபு ஆகியோர் சுபான்ஷு சுக்லாவுடன் விண்வெளி மையத்திற்குள் நுழைந்துள்ளனர்.
இதன் மூலம் 41 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய வீரர் விண்வெளி நிலையத்திற்கு சென்றுள்ளார். இவர்கள் சர்வதேச விண்வெளி நிலையத்தில் 14 நாட்கள் தங்கி இருந்து 60 வயதனா ஆராய்ச்சிகளை மேற்கொள்கின்றனர்.
14 நாட்கள் சுபான்ஷு சுக்லா மற்றும் குழுவினர் விவசாயம் சார்ந்த ஆராய்ச்சிகள், பயிர் விதைகளை முளைத்தல் செய்முறை, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் உள்ளிட்டவை குறித்து ஆராய்ச்சிகளை மேற்கொள்ள உள்ளனர். இந்த சூழலில், பிரதமர் மோடி சுபான்ஷு சுக்லாவுடன் உரையாற்றி இருக்கிறார்.
சுபான்ஷு சுக்லாவுடன் பேசிய பிரதமர் மோடி
PM @narendramodi interacted with Group Captain Shubhanshu Shukla, who is aboard the International Space Station. pic.twitter.com/Q37HqvUwCd
— PMO India (@PMOIndia) June 28, 2025
விண்வெளி நிலையத்திற்கு சென்ற சுபான்ஷு சுக்லா தனது அனுபவத்தை விவரித்தார். மேலும், சுபன்ஷு சுக்லாவுடன் பேசியபோது, அவரது துணிச்சலையும் பங்களிப்பையும் பிரதமர் மோடி பாராட்டி இருக்கிறார். மேலும், சுபான்ஷு சுக்லாவின் உடல்நலம் குறித்தும் பிரதமர் மோடி கேட்டறிந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அப்போது, பிரதமர் மோடி கூறுகையில், “இன்று, நீங்கள் எங்கள் தாய்நாட்டிலிருந்து விலகி இருக்கிறீர்கள், ஆனால் நீங்கள் இந்தியர்களின் இதயங்களுக்கு மிகவும் நெருக்கமானவர்” என கூறினார். பிரதமருக்கு பதில் அளித்த சுபான்ஷு சுக்லா, “எனது பயணம் மட்டுமல்ல, நமது நாட்டின் பயணமும் கூட” என்று கூறினார்.
சற்று முன்பு, நான் ஜன்னலுக்கு வெளியே பார்த்துக் கொண்டிருந்தபோது, நாங்கள் ஹவாய் மீது பறந்து கொண்டிருந்தோம். ஒரு நாளைக்கு 16 முறை சூரிய உதயத்தையும் சூரிய அஸ்தமனத்தையும் காண்கிறோம்… நமது நாடு மிக வேகமாக முன்னேறி வருகிறது. இங்கே எல்லாம் வித்தியாசமாக இருக்கிறது” என கூறினார்.
தொடர்ந்து பேசிய சுபான்ஷு சுக்லா, “நமது இளம் தலைமுறையினருக்கு நான் சொல்ல விரும்பும் செய்தி என்னவென்றால், இந்தியா மிகவும் தைரியமான மற்றும் உயர்ந்த கனவுகளைக் கண்டுள்ளது. அந்தக் கனவுகளை நிறைவேற்ற, உங்கள் அனைவரும் எங்களுக்குத் தேவை. வெற்றிக்கு ஒரே வழி இல்லை. ஆனால் ஒவ்வொரு பாதையிலும் பொதுவான ஒன்று என்னவென்றால், நீங்கள் ஒருபோதும் முயற்சி செய்வதை நிறுத்தக்கூடாது. இந்த அடிப்படை மந்திரத்தை நீங்கள் ஏற்றுக்கொண்டால், வெற்றி இன்றோ அல்லது நாளையோ வரலாம்” என்று கூறினார்.
மேலும், பிரதமர் மோடி பேசுகையில், “விண்வெளியை ஆராய்வதில் ஒரு புதிய உற்சாகம் ஏற்பட்டுள்ளது. இன்று, குழந்தைகள் வானத்தை மட்டும் பார்ப்பதில்லை, அதை அடைய முடியும் என்று நினைக்கிறார்கள். இந்த உணர்வுதான் நமது எதிர்கால விண்வெளி பயணங்களின் அடித்தளம். நாம் ககன்யான் திட்டத்தை முன்னோக்கி எடுத்துச் செல்ல வேண்டும். நமக்கு என்று ஒரு விண்வெளி நிலையத்தை உருவாக்க வேண்டும்” என்று பிரதமர் மோடி கூறினார்.
முன்னதாக, பிரதமர் மோடி தனது எக்ஸ் தளத்தில், “இந்திய விண்வெளி வீரர், குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்குச் செல்லும் முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெறப் போகிறார். அவர் 1.4 பில்லியன் இந்தியர்களின் விருப்பங்கள், நம்பிக்கைகள் மற்றும் அபிலாஷைகளை தன்னுடன் சுமந்து செல்கிறார்” என பதிவிட்டிருந்தார்.
முன்னதாக, சர்வதேச விண்வெளி நுழையத்திற்குள் நுழைந்த சுபான்ஷு சுக்லா, “இது ஒரு அற்புதமான பயணம். அடுத்த 14 நாட்கள் அறிவியலையும் ஆராய்ச்சியையும் மிகவும் ஊக்கப்படுத்தும். மேலும் சிறப்பானதாக இருக்கும்” என தெரிவித்திருந்தார்.