சென்னை, அக்டோபர் 5 : மேற்கு வங்க (West Bengal) மாநிலம் டார்ஜிலிங் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில் நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் அக்டோபர் 5, 2025 அன்று கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி குறைந்தது 14 பேர் வரை உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் காணாமல் போயிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். குறிப்பாக மிரிக், சுகியாபோகரி, ஜோரெபங்லோ, டார்ஜிலிங் சதார், புல்பசார் போன்ற இடங்களில் பல்வேறு வீடுகள் நிலச்சரிவில் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகின. டார்ஜிலிங் மாவட்ட காவல்துறை மற்றும் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
பிரதமர் மோடி இரங்கல்
இந்த நிலச்சரிவில் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், டார்ஜிலிங்கில் ஏற்பட்ட கனமழையால் ஏற்பட்ட விபத்தில் பல உயிரிழப்புகள் என்னை கவலையடைய செய்துள்ளன. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும். அரசு அனைத்து உதவிகளையும் அளிக்கத் தயாராக உள்ளது, என்று பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க : அமைதிக்கான முயற்சியை இந்தியா தொடர்ந்து ஆதரிக்கும்.. காசாவில் போர் நிறுத்தம் உருவாகும் சூழலில் பிரதமர் மோடி பதிவு!
பிரதமர் மோடியின் பதிவு
দার্জিলিংয়ে সেতু দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীরভাবে মর্মাহত। যাঁরা তাঁদের প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুন—এই কামনা করি।
প্রবল বৃষ্টিপাত ও ভূমিধসের প্রেক্ষিতে দার্জিলিং ও আশেপাশের এলাকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।…
— Narendra Modi (@narendramodi) October 5, 2025
மேற்கு வங்க மாநிலம் குர்சியோங் என்ற பகுதியில் மட்டும் கடந்த 24 மணி நேரத்தில் 393 மி.மீட்டர் மழை பதிவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் மேற்கு வங்கத்தில் பெய்த மிகப்பெரிய கனமழையாக இது பார்க்கப்படுகிறது. கலிம்பொங் மாவட்டத்திலும் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. பல சாலைகள் வெள்ளத்தின் காரணமாக துண்டிக்கப்பட்டுள்ளன; தொலைத்தொடர்பு சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சிலிகுரி மற்றும் சிக்கிம் இணைக்கும் சாலையானகு பெடாங் மற்றும் ரிஷிகோலா இடையே நிலச்சரிவு ஏற்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : அனைவரும் தைரியம் மற்றும் தெய்வ பக்தி கொண்டிருக்க வேண்டும்.. விஜயதசமிக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர்!
சுற்றுலா தளங்கள் மூடல்
டார்ஜிலிங்கில் பகுதியில் தொடர்ச்சியான மழை மற்றும் நிலச்சரிவு காரணமாக டைகர் ஹில், ராக் கார்டன் உள்ளிட்ட முக்கிய சுற்றுலா தளங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. பொது மக்களும், சுற்றுலா பயணிகளும் தேவையில்லாமல் வீடு மற்றும் விடுதியில் இருந்து வெளியேறுவதைத் தவிர்க்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.