Operation Sindoor: இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல்.. 15 உள்ளூர்வாசிகள் உயிரிழப்பு.. பதிலடி கொடுத்த இந்தியா!
India Strikes Pakistan: பாகிஸ்தானின் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதலால் ஜம்மு காஷ்மீரில் 15 பொதுமக்கள் பலியாகினர். ஆபரேஷன் சிந்தூருக்குப் பின்னர், பாகிஸ்தான் ராணுவத்தின் தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்களால் 43 பேர் காயமடைந்தனர். இந்திய ராணுவம் பதிலடி கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அமைதி வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய அரசு பாதிக்கப்பட்டோருக்கு உதவி அளித்து வருகிறது.

ஜம்மு காஷ்மீர், மே 7: பாகிஸ்தானில் இந்தியா நடந்திய ஆபரேஷன் சிந்தூர் (Operation Sindoor) தாக்குதலுக்கு பிறகு, ஜம்மு – காஷ்மீரில் பாகிஸ்தான் ராணுவம் நடத்திய கடுமையான எல்லை தாண்டிய ஷெல் தாக்குதலில் குழந்தைகள் உட்பட குறைந்தது 15 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும், 43 பேர் காயமடைந்து மருத்துமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது. பாகிஸ்தான் (Pakistan) மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிகளில் இந்தியா நடத்திய வான்வழித் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் இராணுவம் பூஞ்ச் மற்றும் டாங்தார் பகுதிகளில் உள்ளூர்வாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தத் தொடங்கியது.
என்ன நடந்தது..?
பாகிஸ்தானின் கண்மூடித்தனமான ஷெல் தாக்குதல்கள் ஜம்மு-காஷ்மீர் எல்லை பகுதிகளில் வசித்துவரும் மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது. ஆபரேஷன் சிந்தூருக்கு பிறகு ஜம்மு – காஷ்மீரின் எல்லை பகுதிகளில் பொதுமக்கள் வசிக்கும் பகுதிகளை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தொடர்ச்சியான போர்நிறுத்த மீறல்களை தொடர்ந்தது. இந்த ஷெல் தாக்குதல் கிராம மக்களிடையே பதட்டத்தை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல், பல வீடுகளை சேதப்படுத்தியதாகவும் இராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். எல்லை பகுதிகளில் தற்போதைய நிலைமை குறித்து ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா, ராணுவ அதிகாரிகளுடன் அவசர கூட்டத்தை நடத்தினார்.
பாதிக்கப்பட்டவர்கள் சொன்னது என்ன..?
பாகிஸ்தான் ராணுவம் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த உள்ளூர்வாசி பத்ருதீன் கூறுகையில், “பாகிஸ்தான் ராணுவம் அதிகாலை 2.30 மணியளவில் திடீரென ஷெல் தாக்குதலை தொடங்கியது. இதன் காரணமாக நாங்கள் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓட தொடங்கினோம். எங்கள் பகுதிகளில் இருந்த 4 வீடுகள் எரிக்கப்பட்டன. நானும் என் மகனும் காயமடைந்தோம். என் குடும்பம் தங்குவதற்கு இடமில்லை. நாங்கள் அமைதியை விரும்புகிறோம். அமைதி நிலவ வேண்டும்.
மீண்டும் பதிலடி கொடுத்த இந்திய இராணுவம்:
பாகிஸ்தானின் எல்லை தாண்டிய துப்பாக்கிச் சூட்டுக்கு இந்திய இராணுவம் உடனடியாக பதிலளித்தது. இதனால், இந்திய எல்லைக்குள் உள்ள ரோசௌரி-பூஞ்ச் செக்டாரில் உள்ள பல பாகிஸ்தான் ராணுவ பீரங்கிகள் மீது இந்திய இராணுவம் பெரும் செதத்தை கொடுத்ததாக கூறப்படுகிறது. கிடைத்த தகவலின்படி, கட்டுப்பாட்டுக் கோடு மற்றும் சர்வதேச எல்லையில் இருந்து பொதுமக்களை வெளியேற்ற மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உத்தரவிட்டுள்ளார். எல்லைப் பாதுகாப்புப் படை இயக்குநர் ஜெனரல் தல்ஜித் சிங் சவுத்ரி, ஜம்மு-காஷ்மீர் லெப்டினன்ட் கவர்னர் மனோஜ் சின்ஹா மற்றும் முதல்வர் உமர் அப்துல்லா ஆகியோருடன் அவர் தொடர்ந்து தொலைபேசியில் தொடர்பில் இருந்து வருவதாக கூறப்படுகிறது.