ஆயுள் தண்டனை அனுபவிக்கும் பிரஜ்வால் ரேவண்ணா.. சிறையில் நூலக எழுத்தாளராக நியமனம்..
Prajwal Revanna: பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டு கர்நாடகா பரப்பன அக்ரஹார சிறையில் ஆயுள் தண்டனை கைதியாக முன்னாள் எம்.பி பிரஜ்வால் ரேவண்ணா இருந்து வருகிறார். இவருக்கு சிரையில் நூலக எழுத்தாளர் பணி ஒதுக்கப்பட்டுள்ளதாக சிறை துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கர்நாடகா, செப்டம்பர் 7, 2025: பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் ஹாசன் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு, பரப்பன அக்ரஹார சிறையில் நூலக எழுத்தராக பணி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறை அதிகாரிகளின் கூற்றுப்படி, சக கைதிகளுக்கு புத்தகங்களை வழங்குதல் மற்றும் கடன்களின் பதிவுகளைப் பராமரித்தல் ஆகியவை அவரது பொறுப்புகளில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வேலை செய்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வீட்டில் வேலை செய்த பெண்ணை ஒருமுறை அல்ல, இரண்டு முறை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண் இந்த சம்பவத்தின் வீடியோவையும் நீதிமன்றத்தில் ஒப்படைத்தார். மேலும், அந்த பெண் அன்றைய அணிந்திருந்த சேலையையும் வைத்திருந்தார். அந்த சேலையில் விந்தணு அடையாளங்கள் கண்டறியப்பட்டதால், வழக்கிற்கு மேலும் வலுவூட்டியது.
வழக்கு பின்னணி என்ன?
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில், முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு எதிராக சிஐடி சைபர் கிரைம் காவல் நிலையத்தில் பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, பாலியல் வன்கொடுமை, பாலியல் துஷ்பிரயோகம், மிரட்டல் மற்றும் டிஜிட்டல் குற்றங்கள் தொடர்பான வழக்கில், 2025 ஆகஸ்ட் 1 ஆம் தேதி நீதிமன்றம் பிரஜ்வால் ரேவண்ணாவை குற்றவாளி என தீர்ப்பளித்தது.
மேலும் படிக்க: 80 ஆயிரம் ரூபாய் திருட முயன்ற திருடர்கள்.. 2 லட்சம் ரூபாய் பைக்கை இழந்து சிக்கியது எப்படி?
இரண்டு வழக்குகளில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதுடன், மற்ற வழக்குகளில் மொத்தம் ரூ. 11 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. அந்த தொகை முழுவதையும் பாதிக்கப்பட்டவருக்கு வழங்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டது. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை, 2025 ஆகஸ்ட் 2 ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தது.
பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு நூலக எழுத்தாளர் பணி:
இந்த நிலையில், தற்போது சிறையில் இருக்கும் முன்னாள் எம்.பி. பிரஜ்வால் ரேவண்ணாவுக்கு அங்கு நூலக எழுத்தாளராக பணி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஒரு சிறை அதிகாரி கூறுகையில், அவர் பரிந்துரைக்கப்பட்ட கடமைகளை முடித்தால், ஒவ்வொரு நாளும் ரூ. 572 சம்பளம் பெற உரிமையுள்ளதாக தெரிவித்துள்ளார். சிறை விதிகளின்படி, ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் ஏதேனும் ஒரு வகையான வேலை செய்ய வேண்டும். அவர்களின் திறமை மற்றும் விருப்பத்தைப் பொறுத்து பணிகள் வழங்கப்படுகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும் படிக்க: இப்படியும் நடக்குமா? மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. இறுதிச் சடங்கில் நடந்த அதிசயம்!
நூலக எழுத்தாளராக பிரஜ்வால் ரேவண்ணா ஏற்கனவே ஒரு நாள் பணியை முடித்துள்ளார். கைதிகள் பொதுவாக மாதத்திற்கு குறைந்தது 12 நாட்கள் வேலை செய்ய வேண்டும். வாரத்திற்கு மூன்று நாட்கள் என விருப்பப்படி 12 நாட்களில் பணி செய்யலாம். இருப்பினும், நீதிமன்ற நடவடிக்கைகளில் கலந்து கொள்வதற்கும், தனது வழக்கறிஞர்களை சந்திப்பதற்கும் பிரஜ்வால் ரேவண்ணா நேரத்தை செலவிடுவதால், அவரது அட்டவணை தற்போது குறைக்கப்பட்டுள்ளது.