80 ஆயிரம் ரூபாய் திருட முயன்ற திருடர்கள்.. 2 லட்சம் ரூபாய் பைக்கை இழந்து சிக்கியது எப்படி?
Bhopal Crime: போபால் மாநிலத்தில் திருடர்கள் தாங்கள் திருடிய பணத்தை விட அதிகமான இழப்பை சந்தித்துள்ளனர். ரூ. 80,000 திருட முயற்சி செய்த போது 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை விட்டுச் சென்றுள்ளனர். பைக்கின் பதிவு எண் கொண்டு போலீஸார் திருடர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

போபால், செப்டம்பர் 7, 2025: போபால் நகரில் ஒரு விசித்திரமான திருட்டு சம்பவம் நடந்துள்ளது. திருடர்கள் திருடிச் சென்ற பணத்தை விட அதிகமான தொகையை அவர்கள் இழந்துள்ளனர். அதாவது, 80 ஆயிரம் ரூபாய் திருடச் சென்ற இடத்தில், 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான பைக்கை தவறவிட்டு வந்துள்ளனர். இந்த பைக்கின் மூலமாகவே அந்த திருடர்கள் மிகவும் எளிதாக காவல்துறையினரிடம் சிக்கியுள்ளனர். இந்தியாவைப் பொறுத்தவரையில், நாளுக்கு நாள் திருட்டு சம்பவங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. பைக், ஆட்டோ, கார் போன்ற வாகனங்களில் கூட வந்து திருடுகிறார்கள். பொருட்களை மட்டுமல்லாமல், பணம், ஆடுகள், மாடுகள், நாய்களையும் திருடிச் சென்ற சம்பவங்கள் நடந்துள்ளன. இவ்வாறான வித்தியாசமான திருட்டுச் சம்பவங்கள் சமீப காலமாக அதிகரித்துக் கொண்டே வருகின்றன. அந்த வகையில், போபால் மாநிலத்தில் திருடர்கள் தாங்கள் திருடிய பணத்தை விட அதிகமான இழப்பை சந்தித்துள்ளனர்.
நடந்தது என்ன?
இந்த சம்பவம் 2025 செப்டம்பர் 4 ஆம் தேதி அயோத்யா நகர் பகுதியில் நடந்துள்ளது. திருடர்கள் அப்பகுதியில் இருந்த காய்கறி வியாபாரியான நீரஜ் என்பவரை நோட்டமிட்டிருந்தனர். அந்த காய்கறி வியாபாரி தினசரி தனது வியாபாரத்தை முடித்துக் கொண்டு இரவு 11 மணியளவில் வீடு திரும்புவார். அப்போது அவர் அன்றைய வருமானத்தை எடுத்துச் செல்வார். இதனை அறிந்த திருடர்கள், மூன்று–நான்கு நாட்கள் தொடர்ந்து அவரை கவனித்து, பின்னர் அவரிடம் இருந்து பணத்தை பறிக்கத் திட்டமிட்டனர்.
மேலும் படிக்க: இப்படியும் நடக்குமா? மூளைச்சாவு அடைந்த இளைஞர்.. இறுதிச் சடங்கில் நடந்த அதிசயம்!
அந்த வகையில், காய்கறி வியாபாரி தனது வியாபாரத்தை முடித்து அன்றைய வசூலை கையில் எடுத்துக்கொண்டு வீடு திரும்பியபோது, திருடர்கள் அவரிடம் இருந்து சுமார் 80 ஆயிரம் ரூபாய் பறித்துச் சென்றனர். இதனால் பதைபதைத்த அந்த வியாபாரி உடனடியாக திருடர்களை பைக்கில் இருந்து இழுத்து கீழே தள்ளினார். ஆனால் திருடர்கள் சாமர்த்தியமாக வியாபாரியை தள்ளிவிட்டு மீண்டும் பைக்கை எடுக்க முயற்சி செய்தனர்.
80 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்ட திருடர்கள், 2 லட்சம் ரூபாய் இழந்தனர்:
அப்போது வியாபாரி நீரஜ், அக்கம் பக்கத்தினர் கேட்கும் வகையில் கூச்சலிட்டார். இதனால் பதற்றமடைந்த திருடர்கள், வேகமாக பைக்கை ஸ்டார்ட் செய்ய முயன்றனர். ஆனால் பைக் ஸ்டார்ட் ஆகவில்லை. நீரஜின் அலறல் சத்தத்தை கேட்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்ததால், திருடர்கள் பதற்றமடைந்து பைக்கை அங்கேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றனர்.
மேலும் படிக்க: இன்று சந்திர கிரகணம்.. எந்த நேரத்தில் காணலாம் தெரியுமா?
பைக்கின் பதிவு எண் மூலம் சிக்கிய திருடர்கள்:
இந்த சம்பவத்திற்குப் பிறகு, காய்கறி வியாபாரி நீரஜ் அருகிலிருந்த காவல்துறையினரிடம் புகார் அளித்தார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, திருடர்கள் விட்டுச் சென்ற பைக்கை கைப்பற்றினர். அந்த பைக்கின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாயாகும். பைக்கில் இருந்த பதிவு எண்ணை பயன்படுத்தி, காவல்துறையினர் அந்த திருடர்களை எளிதாகக் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் இந்த வழக்கு முடிவுக்கு வரும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. 80 ஆயிரம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு, 2 லட்சம் மதிப்புள்ள பைக்கை இழந்து காவல்துறையிடம் வசமாக சிக்கியுள்ளனர் என்பதே சம்பவத்தின் வித்தியாசம்.