வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையை கடித்துக் கொன்ற சிறுத்தை.. ஷாக் சம்பவம்!
Leopard Killed One Year Old Infant In UP | உத்தர பிரதேசத்தில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த குழந்தையை சிறுத்தை ஒன்று நள்ளிரவில் கவ்விச் சென்றுள்ளது. இந்த நிலையில், அந்த குழந்தையை வனத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் சடலமாக மீட்டுள்ளனர்.

மாதிரி புகைப்படம்
லக்னோ, டிசம்பர் 01 : உத்தர பிரதேச (UP – Uttar Pradesh) மாநிலம், பலாம்பூர் மாவட்டம், நிவால்கஞ்ச் கிராமத்தை சேர்ந்த இளம் பெண் குணவதி. இவருக்கு திருமணமாகி ஒரு வயதில் பச்சிளம் குழந்தை ஒன்று இருந்துள்ளது. குணவதி நவம்பர் 29, 2025 அன்று இரவு தனது கணவன் மற்றும் பச்சிளம் குழந்தையுடன் வீட்டில் படுத்து உறங்கிக்கொண்டு இருந்துள்ளார். அப்போது அவர்களது வீட்டிற்குள் எதிர்பாராத விதமாக சிறுத்தை ஒன்று நுழைந்துள்ளது. அந்த சிறுத்தை குணவதி அருகே உறங்கிக்கொண்டு இருந்த அவரது ஒரு வயது ஆன பச்சிளம் குழந்தையை கடித்து தூக்கிச் சென்றுள்ளது.
பச்சிளம் குழந்தையை கவ்விச் சென்ற சிறுத்தை
இந்த நிலையில், குழந்தை அழ தொடங்கியுள்ளது. அதனால், குணவதி கண் விழித்து பார்த்துள்ளார். அப்போது சிறுத்தை தனது குழந்தையை கவ்விச் சென்றதை கண்டு கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். உடனடியாக கத்தி கூச்சலிட்ட அவர், குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்பதற்காக சிறுத்தையை துரத்திச் சென்றுள்ளார். ஆனால், சிறுத்தையோ குழந்தையை வாயில் கவ்விக்கொண்டு வனப்பகுதிக்குள் சென்று மறைந்துள்ளது. இதனால், குணவதி மற்றும் அவரது கணவர் உள்ளிட்ட அனைவரும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதையும் படிங்க : நள்ளிரவில் சீறிப் பாய்ந்து வந்த சொகுசு கார்.. நொடிப்பொழுதில் பறிபோன உயிர்
சிறுத்தை கடித்த நிலையில், சடலமாக மீட்கப்பட்ட குழந்தை
என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்த ஊர் மக்கள் இந்த சம்பவம் தொடர்பாக உடனடியாக காவல்துறை மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்படி, சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் வனப்பகுதிக்குள் சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த கிராமத்தின் அருகே உள்ள வனப்பகுதியில் குழந்தையை அதிகாரிகள் சடலமாக மீட்டுள்ளனர்.
இதையும் படிங்க : கள்ளக்காதலுக்கு தடையாக மாறிய கணவன்.. காதலனுடன் இணைந்து கொலை செய்த மனைவி!
சிறுத்தையை பிடிக்க நடவடிக்கைகள் தீவிரம்
சிறுத்தை கடித்து குழந்தை உயிரிழந்ததை உறுதி செய்த அதிகாரிகள், குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சிறுத்தையை பிடிக்க வனத்துறையினர் தீவிர பணியில் இறங்கியுள்ளனர். வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த பச்சிளம் குழந்தையை சிறுத்தை கவ்விச் சென்று கொலை செய்த சம்பவம் அந்த பகுதி மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.