உங்கள் வாட்ஸ் அப் தகவல் பரிமாற்றம் அரசால் கண்காணிக்கப்படுகிறதா?.. விளக்களித்த மத்திய அரசு..
PIB Fact Check; வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு விடுக்கும் தகவல் தொடர்பு விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அதற்கு மத்திய அரசின் தகவல் சரிபார்ப்பகம் விளக்கமளித்துள்ளது.
ஸ்மார்ட்போன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், வாட்ஸ் அப் செயலியை தங்களது செல்போன்களில் பயன்படுத்தவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இதனால், சமூக வலைத்தளங்கள் தகவல்களை விரைவாக பரிமாறும் மிகப்பெரிய தளமாக மாறிவிட்டன. ஆனால் அதே வேகத்தில் போலி தகவல்கள், உறுதிப்படுத்தப்படாத செய்திகள், வதந்திகள் என்பவையும் பரவி வருகின்றன. இத்தகைய பொய்யான தகவல்கள் தேவையற்ற பயம் மற்றும் பதட்டத்தை ஏற்படுத்தலாம். அவை, சமூக ஒற்றுமையை பாதிக்கலாம், தனி நபர்கள் அல்லது அமைப்புகளின் மதிப்பைக் குலைக்கலாம். சில சமயங்களில் சட்ட பிரச்சனைகள் கூட உருவாக்கக்கூடும். ஆகவே, சமூக ஊடகங்களில் வரும் ஒவ்வொரு தகவலும் உண்மை என்று நம்ப வேண்டிய அவசியமில்லை.
மேலும் படிக்க: எதிர் காலத்தை கணிக்கும் சீன கோயில்…அதுவும் இந்தியாவில் எங்கு உள்ளது தெரியுமா!
வாட்ஸ் அப்பில் பரவும் தகவல்:
இந்தநிலையில், வாட்ஸ் அப்பில் தகவல் பரிமாற்றம் மற்றும் அழைப்பு விடுக்கும் தகவல் தொடர்பு விதிகளில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் பரவி வருகிறது. அந்தத் தகவலின் படி, வாட்ஸ்அப்பில் செய்யப்படும் அனைத்து அழைப்புகளும் பதிவு செய்யப்படும். சமூக ஊடக கணக்குகள் கண்காணிக்கப்படும். தனிநபர்களின் மொபைல் எண்கள் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் இணைக்கப்படும். அதனால், அரசையோ, பிரதமரையோ அல்லது அரசியல் விவகாரங்களையோ குறை கூறி செய்தி அல்லது வீடியோ போன்ற தகவல்களை யாருக்கும் அனுப்ப வேண்டாம். அவ்வாறு அதை மீறி அனுப்பும் பட்சத்தில், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதோடு, போலீஸ் நோட்டீஸ் அனுப்பி தண்டனை வழங்கும் என்ற எச்சரிக்கைத் தகவல் பரவி வருகிறது.
உண்மை நிலவரம் என்ன?
Heads up! Have you also come across a message claiming the Indian government has rolled out new WhatsApp monitoring guidelines? 👀#PIBFactCheck:
❌That information is FALSE!
📣 The Government of India has NOT released any such guidelines.
🚨Stay informed and don’t fall for… pic.twitter.com/jEkRnyR9lH
— PIB Fact Check (@PIBFactCheck) January 9, 2026
இந்த செய்தி பரவியதையடுத்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகத்தின் தகவல் சரிபார்ப்பகம் (PIB Fact Check) பதில் வெளியிட்டது. அதில், “இது முற்றிலும் தவறான மற்றும் பொய்யான தகவல். மத்திய அரசு இத்தகைய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிடவில்லை.” என்று தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: Budget 2026: இதுவே முதல்முறை.. ஞாயிற்றுக்கிழமை தாக்கலாகும் பட்ஜெட்.. கவனிக்க வேண்டியவை என்ன?
மக்களுக்கு எச்சரிக்கை:
சமூக ஊடகங்களில் சரிபார்க்காத தகவல்களை நம்ப வேண்டாம். முன்னெச்சரிக்கையின்றி எந்த தகவலையும் பகிர வேண்டாம் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளையே நம்ப வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக ஒரு செய்தி எங்கே இருந்து வந்தது என்பதை சரிபார்க்கவும். அதிகாரப்பூர்வ ஊடகங்கள் அல்லது அரசு தளங்களில் உறுதி செய்யவும். தலைப்பை மட்டும் படித்து பகிர வேண்டாம். உணர்ச்சிகளை தூண்டும், கோபமூட்டும் செய்திகளை மிகுந்த கவனத்துடன் அணுகவும். உங்களுக்கு அந்த தகவலில் சந்தேகம் இருந்தால், பகிராமல் தவிர்க்கவும். பகிர்வதற்கு முன் சிந்திக்கவும் தவறான செய்தி பலருக்குத் தீங்கு செய்யலாம்.