செப்டமர் மாதத்தில் 109% அதிக மழைப்பதிவு இருக்கும்.. எச்சரிக்கும் வானிலை ஆய்வு மைய தலைவர்..
India Weather Forecast: ஆகஸ்ட் மாதம் முடிவடையக்கூடிய நிலையில், 2025 செப்டம்பர் 1, 2025 ஆம் தேதி முதல் இந்தியாவில் வழக்கத்தை விட அதிகப்படியான மழை இருக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் 109% அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.

இந்தியா, ஆகஸ்ட் 31, 2025: இந்தியாவில் செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தை விட அதிக மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஏற்கனவே பல மாநிலங்களில் பேரழிவு தரும் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு உள்ளிட்ட பாதிப்புகளை ஏற்படுத்திய தென்மேற்கு பருவமழை காலம் இன்னும் தீவிரமடையும் எனவும் இது சுட்டிக்காட்டுகிறது. இந்திய வானிலை ஆய்வு மைய தலைவர் மிருத்யுஞ்சய மொஹபத்ரா தெரிவித்ததாவது, “செப்டம்பர் மாதத்தில் நாடு முழுவதும் சராசரியாக பெய்யக்கூடிய மழையிலிருந்து சுமார் 109 சதவீதம் அதிக மழை பதிவு செய்யப்படக்கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழை பெய்யும். இருப்பினும் வடகிழக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளிலும், தென் தீபகற்ப இந்தியாவின் சில பகுதிகளிலும், வடமேற்கு இந்தியாவின் சில பகுதிகளிலும் இயல்பை விட குறைவான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.” என தெரிவித்துள்ளார்.
பாதிப்புகள் ஏற்படும் மாநிலங்கள்:
செப்டம்பர் மாதத்தில் ஏற்படும் பலத்த மழையால் உத்தரகாண்டில் புதிய நிலச்சரிவுகள் மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு உருவாகக்கூடும். டெல்லி, தெற்கு ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தானிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படும் என்று மொஹபத்ரா எச்சரித்துள்ளார். மேலும், “இந்த மழை காரணமாக உத்தரகாண்டில் பல ஆறுகள் பெருகும். கனமழை என்பது கீழ்நோக்கி வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை குறிக்கிறது. இது நகரங்கள் மற்றும் கிராமங்களை நேரடியாக பாதிக்கும். இதை மக்கள் மனதில் கொள்ள வேண்டும்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: FASTag வருடாந்திர பாஸை யார் பயன்படுத்தலாம்..? நிபந்தனைகள் என்னென்ன..?
2025 பருவமழை தரவுகள்:
- ஜூன் 1 – ஆகஸ்ட் 31, 2025 வரையிலான காலத்தில் இந்தியாவில் மொத்தம் 743.1 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. இது இயல்பை விட 6% அதிகம்.
- ஜூன் 2025: 180 மிமீ மழை (இயல்பை விட 9% அதிகம்).
- ஜூலை 2025: 294.1 மிமீ மழை (இயல்பை விட 5% அதிகம்).
- ஆகஸ்ட் 2025: 268.1 மிமீ மழை (இயல்பை விட 5.2% அதிகம்).
ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் வடமேற்கு இந்தியாவில் 265 மிமீ மழை பெய்துள்ளது. இது 2001க்குப் பிறகு அந்த மாதத்திற்கான அதிகபட்ச மழை. 1901க்குப் பிறகு இது 13வது அதிகபட்ச மழை எனவும் கருதப்படுகிறது.
மேலும் படிக்க: தலைவர் விஜயின் தேர்தல் சுற்றுப்பயணம்.. மாவட்ட செயலாளர்களுக்கு பறந்த உத்தரவுகள்..
பகுதி வாரியாக மழை நிலவரம்
- வடமேற்கு இந்தியா: மொத்தம் 614.2 மிமீ மழை, இது 27% அதிகம்.
- தெற்கு தீபகற்ப இந்தியா: ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 250 மிமீ மழை, இது 31% அதிகம். 2001க்குப் பிறகு மூன்றாவது அதிகபட்ச மழை.
இந்த நிலையில், செப்டம்பர் 1 முதல் 17, 2025 வரை பருவமழை மீண்டும் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இமயமலைப் பகுதிகளில் (இமாச்சலப் பிரதேசம், உத்தரகாண்ட், ஜம்மு & காஷ்மீர்) தொடர்ச்சியான மேக வெடிப்பு கனமழை மற்றும் திடீர் வெள்ளப்பெருக்கு பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த இடங்கள் ஆகஸ்ட் மாதத்தில் மிக மோசமாக பாதிக்கப்பட்டதாக தரவுகள் கூறுகின்றன.