80 வயது முதியவருக்கு பேஸ்புக்கில் ஸ்கெட்ச்.. ரூ.9 கோடி அபேஸ்!
80 வயது முதியவரிடம் ஆன்லைன் மூலம் பேசி பழகி மோசடி செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண், அவரது சகோதரி, தோழி என விதவிதமான உறவுகள் மூலம் மிகவும் நூதனமாக இந்த மோசடி நடைபெற்றுள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகாராஷ்ட்ரா, ஆகஸ்ட் 9: மும்பையில் 80 வயது முதியவரிடம் ஆன்லைன் மூலம் பேசி பழகி ரூ.9 கோடி மோசடி செய்த பெண்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். தொழில்நுட்ப வளர்ச்சி பெருகி விட்ட இந்த காலக்கட்டத்தில் ஸ்மார்ட்போன் உபயோகிக்காதவர்களே கிடையாது. அதேசமயம் இத்தகைய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி நாளொருமேனி பொழுதொரு வண்ணமாக ஏராளமான விதவிதமான மோசடிகள் அரங்கேறி வருகிறது. ஆயிரம் தொடங்கி கோடிக்கணக்கில் பணத்தை இழந்து, விபரீத முடிவுகளை தேடிக் கொள்பவர்களும் இருக்கத்தான் செய்கிறார். என்னதான் மத்திய, மாநில அரசுகள் டிஜிட்டல் மோசடி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தினாலும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. அப்படியான ஒரு சம்பவம் தான் மும்பையில் நடைபெற்றுள்ளது.
2023ல் தொடங்கிய கதை
பொதுவாக சமூக வலைத்தளங்கள் ஒருவருக்கொருவர் உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தொடர்பு கொள்ளவே அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் அதனை பயன்படுத்தி தான் இந்த மோசடி நடந்துள்ளது. மும்பையில் 80 வயதான ஒரு முதியவர் தனிமையில் வசித்து வருகிறார். அவர் தன் தனிமையை போக்க சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்துள்ளார். இப்படியான நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அந்த முதியவர் ஷர்வி என்ற பெண்ணுக்கு ஃபேஸ்புக் மூலம் நண்பராக கோரிக்கை அனுப்பினார். முதலில் எதிர்தரப்பில் முதியவரின் கோரிக்கை மறுக்கப்பட்டிருக்கிறது.
ஆனால் சில நாட்களுக்குப் பிறகு அதே பெண் இந்த முதியவருக்கு பேஸ்புக்கில் நட்பாகும் நோக்கில் கோரிக்கையை அனுப்பினார். இதனைக் கண்டு அந்த முதியவர் மகிழ்ச்சியடைந்துள்ளார். இருவரும் தினமும் மணிக்கணக்கில் அரட்டை அடிக்கத் தொடங்கியுள்ளனர். அதைத் தொடர்ந்து வாட்ஸ்அப் எண்ணை கேட்டு வாங்கியும் பேசி வந்திருக்கின்றனர்.
அப்போது எதிர்முனையில் பேசிய ஷர்வி தான் திருமணமாகி விவாகரத்து பெற்றவர் என்றும், இரண்டு குழந்தைகளின் தாய் என்றும் கூறியுள்ளார். தற்போது பல பிரச்சினைகளை எதிர்கொண்டு வருதாகவும் தெரிவித்துள்ளார். அவரின் நிலையை எண்ணி முதியவர் பரிதாபப்பட்டுள்ளார். இதனை தனக்கு சாதகமாக ஷர்வி பயன்படுத்த முடிவு செய்தார். இரு குழந்தைகளின் தாய், நிதி நெருக்கடி போன்றவை இருப்பதாக சொல்லி முதியவரிடம் பலமுறை பண உதவி கேட்டுள்ளார். ஒவ்வொரு முறையும், அவள் ஒரு புதிய காரணத்தைக் கூறிய நிலையில் சளைக்காமல் முதியவர் உதவி வந்துள்ளார்.
அடுத்தடுத்து நுழைந்த பெண்கள்
இதைத் தொடர்ந்து ஷர்வி – முதியவர் உறவு விரிவடைந்தது. அதாவது கவிதா என்ற மற்றொரு பெண் அவரிடம் பேச தொடங்கினார். ஆபாசமான செய்திகளை அனுப்பி முதியவரை தன் வழிக்கு வர செய்தார். பின்னர் ஒரு நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு பணம் கேட்டு வந்து அதனைப் பெற்றுள்ளார். இதன் பிறகு ஷர்வியின் சகோதரி என்று டினாஸ் என்ற பெண் வந்துள்ளார்.
கதைப்படி நோயால் அவதிப்பட்ட ஷர்வி இறந்துவிட்டதாகவும், இறப்பதற்கு முன் நீங்கள் தான் தனது மருத்துவமனை கட்டணங்களை செலுத்த வேண்டும் என்றும் அவர் விரும்பியதாகவும் முதியவருக்கு டினாஸ் வாட்ஸ்அப் உரையாடல் ஸ்கிரீன் ஷாட்களை அனுப்பி ஏமாற்றி பணம் பெற்றார்.
Also Read: சிஆர்பிஎஃப் பெண் அதிகாரி வீட்டில் நகை திருட்டு.. வழக்குப்பதிய தாமதம் செய்ததா காவல்துறை..?
இதைத் தொடர்ந்து அடுத்ததாக ஜாஸ்மின் என்ற பெண் முதியவரிடம் பேசினார். அவர் தன்னை டினாஸின் தோழி என கூறியுள்ளார். அவரை புகழ்ந்து தள்ளி வழக்கம்போல உதவி கோரத் தொடங்கினார். அந்த முதியவர் அவளுக்கும் பணமும் அனுப்பியுள்ளார். இப்படியாக 2023 ஏப்ரல் முதல் 2025 ஜனவரி வரை அந்த முதியவர் மொத்தம் 734 முறை பணத்தை அனுப்பியுள்ளார்
இதன்மூலம் சுமார் ரூ.8.7 கோடி சேமிப்பு பணம் அனைத்தும் தீர்ந்து போயுள்ளது. இதன் பின்னர் செலவுக்கு திண்டாடிய அவர் தனது மருமகளிடம் 2 லட்சம் கடன் வாங்கியுள்ளார். தனது மகனிடம் ரூ.5 லட்சம் கேட்டார்.
இதில் தான் மகனுக்கு சந்தேகம் வந்த நிலையில் உண்மை முழுவதும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. தான் ஏமாற்றப்பட்ட விவகாரம் தெரிய வந்த நிலையில் அந்த முதியவர் அதிர்ச்சியடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார். அந்த முதியவருக்கு ஞாபக சக்தியும் புரிந்துகொள்ளும் சக்தியும் படிப்படியாகக் குறைந்து வரும் டிமென்ஷியா என்ற நோய் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்ததுள்ளனர்.
இதற்கிடையில் முதியவர் தரப்பில் போலீசில் புகாரளிக்கப்பட்டது. அதனடிப்படையில் எஃப்.ஐ.ஆர் பதிவு செய்த காவல்துறை அதிகாரிகள் இந்த சம்பவம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.