விஜய் – ராகுல் சந்திப்பு புகைப்படங்கள், வீடியோக்கள் முடக்கம்.. காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு.. மத்திய அரசு விளக்கம்!
காங்கிரஸ் தலைவரும், ராகுல் காந்தியின் உதவியாளருமான ஸ்ரீவத்சா இது குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிடுகையில், "நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி மற்றும் தளபதி விஜய் இருக்கும் ரீல் மற்றும் புகைப்படப் பதிவுகளை இன்ஸ்டாகிராம் முடக்கியுள்ளது" என்று குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக முதலமைச்சராக தவெக தலைவர் விஜய் பதவியேற்ற விழாவில் கலந்துகொண்ட ராகுல் காந்தி, அவருடன் இருக்கும் வீடியோ மற்றும் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருந்தார். இந்தப் பதிவுகள் திடீரென முடக்கப்பட்டதாகக் கிளம்பியுள்ள புகார், தேசிய அரசியலில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் விதிகளின் காரணமாக, விஜய்யுடன் ராகுல் காந்தி இருக்கும் இன்ஸ்டாகிராம் ‘ரீல்’ மற்றும் புகைப்படப் பதிவை இன்ஸ்டாகிராம் நிறுவனம் முடக்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இருப்பினும், இந்த குற்றச்சாட்டை மத்திய அரசு தரப்பு மறுத்துள்ளன.
இதையும் படிக்க : பணம் இல்லை என பேசாதீங்க.. திசைதிருப்பாதீங்க – முதல்வர் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து கேள்விகளை அடுக்கிய முக ஸ்டாலின்!
கவனம் பெற்ற ராகுல் – விஜய் சந்திப்பு:
View this post on Instagram
நடிகர் விஜய் தமிழக முதலமைச்சராகப் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் பங்கேற்க ராகுல் காந்தி சென்னை வந்திருந்தார். குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் வெளியேறிய பின் முதல்முறையாக, விஜய்யின் பதவியேற்புக்கு ராகுல் வருகை தந்தார். முதல்முறையாக இருவருக்கும் இடையே ஏற்பட்டுள்ள இந்தப் புதிய அரசியல் நெருக்கம், சமூக ஊடகங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் நிலையில், இந்த முடக்கச் சர்ச்சை அரசியல் அனலைக் கிளப்பியுள்ளது.
காங்கிரஸ் பரபரப்பு குற்றச்சாட்டு:
இது குறித்து எக்ஸ் தளத்தில் காங்கிரஸ் தலைவரும், ராகுல் காந்தியின் உதவியாளருமான ஸ்ரீவத்சா பதிவிடுகையில், “நேற்று நடைபெற்ற பதவியேற்பு விழாவில் ராகுல் காந்தி மற்றும் தளபதி விஜய் இருக்கும் ரீல் மற்றும் புகைப்படப் பதிவுகளை இன்ஸ்டாகிராம் முடக்கியுள்ளது” என்று குற்றம் சாட்டியுள்ளார். வைரலான அந்த ரீல் வீடியோ ஒரு மணி நேரத்திற்குள் 1.2 கோடி (12 million) பார்வைகளையும், புகைப்படப் பதிவு 4.6 கோடி (46 million) மக்களையும் சென்றடைந்ததாக ஸ்ரீவத்சா குறிப்பிட்டுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் குரல் நசுக்கப்படுகிறது:
“ஏன் அவரது கணக்கை அணுக முடியவில்லை என்பதற்கு மெட்டா நிறுவனம் எந்தக் காரணமும் கூறவில்லை. இந்த ‘தொழில்நுட்பக் கோளாறுக்கு’ மத்திய அமைச்சகத்தின் விதிகளே காரணம்! ராகுல் காந்தியின் சமூக ஊடகக் கணக்குகள் நீண்ட காலமாக ஒடுக்கப்பட்டு வருகின்றன. அவரது எக்ஸ் தளத்தின் ரீச், யூடியூப் பார்வைகள் மற்றும் இன்ஸ்டாகிராம் பின்தொடர்பாளர்கள் என அனைத்தும் ஒடுக்கப்பட்டுள்ளன,” என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். இந்திய எதிர்க்கட்சித் தலைவரின் குரல் இப்படித்தான் நசுக்கப்படுகிறது என்றும் அவர் மேலும் கூறினார்.
மத்திய அமைச்சகத்தின் விளக்கம்:
காங்கிரஸின் இந்தக் குற்றச்சாட்டுகளை மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சக (MeitY) வட்டாரங்கள் திட்டவட்டமாக மறுத்துள்ளன. ராகுல் காந்தியின் பதிவுகளை முடக்க அமைச்சகம் எந்த உத்தரவும் பிறப்பிக்கவில்லை. இதில் அமைச்சகத்தின் பங்கு எதுவுமில்லை. இன்ஸ்டாகிராம் தளத்தின் சொந்தப் பாதுகாப்பு கட்டமைப்பு தவறுதலாக அந்தப் பதிவைக் கண்டறிந்து முடக்கியுள்ளது. இது ஒரு தொழில்நுட்பப் பிழை மட்டுமே. தற்போது அந்தப் பிழை சரிசெய்யப்பட்டு, முடக்கப்பட்ட பதிவுகள் மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளன என்று அமைச்சகத் தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: முதலமைச்சர் விஜய் vs எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி.. அனல் பறக்கும் சட்டமன்றம்.. தமிழக அரசியலில் புதிய அத்தியாயம்!!
தொழில்நுட்ப கோளாறு:
சமூக ஊடக நிறுவனங்களின் தானியங்கித் தணிக்கை முறைகள் (Algorithm) சில நேரங்களில் முக்கியத் தலைவர்களின் பதிவுகளைத் தவறாக முடக்குவது உலகளாவிய அளவில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. ராகுல் காந்தி – விஜய் வீடியோ விவகாரமும் அத்தகைய ஒரு தொழில்நுட்பக் கோளாறா அல்லது அரசியல் தலையீடா என்ற விவாதம் தொடர்ந்து நீடிக்கிறது.