பீகார் தேர்தல்: மாநிலத்தையே வியந்து பார்க்க வைத்த சிராக் பஸ்வானின் வெற்றி!!
Bihar election results 2025: பீகார் சட்டமன்ற தேர்தலில் மகாபந்தன் இந்தியா கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. அவர்கள் 34 தொகுதிகிளில் மட்டுமே முன்னிலையில் உள்ளனர். அதேசமயம் தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக மட்டுமே தனித்து 90க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது.

சிராக் பஸ்வான்
பீகார், நவம்பர் 14: பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், அதில் தேசிய ஜனநாயக கூட்டணி பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இது தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் கூறியதை விட அதிகளவில் முன்னிலையில் உள்ளது. குறிப்பாக பாஜக போட்டியிட்ட 101 தொகுதிகளில் 90 தொகுதிகளில் முன்னிலை வகித்து அம்மாநிலத்தில் தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்துள்ளது. கடந்த 2020 சட்டமன்ற தேர்தலில் 74 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, தற்போது 90 இடங்களில் வெற்றி பெற உள்ளது. அதேசமயம், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள நிதிஷ்குமாரின் ஜேடியூ 81 தொகுகிதகளில் முன்னிலை வகித்து வருகிறது. ஆனால், தொடக்கம் முதலே மகாபந்தன் கூட்டணி கடும் பின்னடைவை சந்தித்து வருகிறது. அதுவும் 60 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சி வெறும் 4 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகித்து வருகிறது.
NDA சாதனையை மறக்க வைத்த சிராக் பஸ்வான்:
குறிப்பாக இந்த தேர்தலில் என்டிஏ கூட்டணி நிகழ்த்திய சாதனையை நிச்சயம் நம்மால் மறக்க முடியாது. ஆனால் அதைவிட முக்கியமாக சிராக் பஸ்வானின் லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) கட்சி நிகழ்த்திய சாதனை அனைவரின் கவனத்தையும் பெற்றுள்ளது. என்டிஏ கூட்டணியில் 29 தொகுதிகளை அக்கட்சியின் தலைவர் சிராக் பஸ்வான் போராடி பெற்ற நிலையில், அதில் 23 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளார். கடந்த ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 5 இடங்களிலும் வெற்றி பெற்று அக்கட்சி கவனம் பெற்றிருந்தது.
Also Read : பஞ்சாபில் நடைபெறவிருந்த பயங்கரவாத சதி அம்பலம் – 10 பேரை கைது செய்த போலீஸ்
முன்னதாக, நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2020 சட்டமன்ற தேர்தலில் லோக் ஜனசக்தி கட்சி தனித்து களமிறங்கியது. இதில், போட்டியிட்ட 130 தொகுதிகளில் 1 இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. இதனால், தந்தை ராம் பஸ்வானுக்கு கிடைத்த அரசியல் செல்வாக்கை, சிராக் பஸ்வானால் தக்க வைத்துக்கொள்ள முடியவில்லை, அவருக்கு அந்த அரசியல் அனுபவம் இல்லை என்றெல்லாலும் விமர்சனங்கள் எழுந்தன. தொடர்ந்து, 2021ல் அவரது மாமா பசுபதி குமார் பராஸ், கட்சி தனக்கே சொந்தம் எனக்கூறி கட்சியை பிளவுபடுத்தியதால், சிராக் பஸ்வானுக்கு மேலும் அழுத்தம் அதிகரித்தது.
எனினும், அனைத்து அழுத்தங்களையும் சமாளித்து தன்னை பீகாரின் இளம் அரசியல் தலைவராக நிலை நிறுத்திக்கொண்டுள்ளார். அதேநேரத்தில், கட்சியின் தலித் சமூக நலக் கொள்கைகளையும் தொடர்ந்தார். 2024 மக்களவை தேர்தலில் போட்டியிட்ட 5 இடங்களிலும் வென்று பீகாரில் கணக்கில் கொள்ள வேண்டிய முக்கிய சக்தியாக விளங்கினார்.
துணை முதல்வர் பதவி?
தேர்தலுக்கு முன்பே தனது கட்சியினர் தான் மாநிலத்தில் முக்கிய பதவியில் இருப்பதை காண வேண்டும் என்று விரும்புவதாக கூறி, தனது துணை முதல்வர் பதவி ஆசையை வெளிப்படுத்தியிருந்தார். அதோடு, தொண்டர்களின் கனவை மதிப்பதாகவும், கட்சித் தலைவரை உச்சத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதோடு, தன் தந்தை ராம் விலாஸ் பஸ்வானை தானும் எப்போதும் பிரதமராக பார்க்கவே ஆசைப்பட்டதாகவும் பகிர்ந்திருந்தார்.
Also Read : என்னை ப்ரோன்னு கூப்பிடுங்க… Gen Z இளைஞர்களுடன் ராகுல் காந்தி கலகலப்பு உரையாடல்
தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்னதாக கூட, எந்த சூழ்நிலையிலும் பிரதமர் மோடியை விட்டு வேறு கூட்டணிக்கு செல்லமாட்டேன் என்று உறுதி கூறியிருந்தார். பிரியங்கா காந்தியிடம் இயல்பாக பேசுவேன். ஆனால் கூட்டணி தொடர்பாக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்றும், பீகார் தேர்தலுக்குப் பிறகும் நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலக மாட்டேன். பிரதமர் மோடி மீதான எனது மதிப்பும் அன்பும் என்றென்றும் நிலைத்திருக்கும் என்றும் கூறியிருந்தார்.