குழந்தைகளின் கையில் ஸ்மார்ட்போன்.. அதிகரிக்கும் டிஜிட்டல் அடிமைத்தனம் – எச்சரிக்கும் ஆய்வுகள்!
அதிகப்படியான ஸ்கிரீன் பயன்பாடும், நேருக்கு நேர் பழகும் உறவுகள் குறைவதும் மனநல பாதிப்புகளுடன் தொடர்புடையவை என்று பொருளாதார ஆய்வறிக்கை எச்சரிக்கிறது. குழந்தைகள் இணையத்தில் எதிர்கொள்ளக்கூடிய சைபர் துன்புறுத்தல் (Cyberbullying), ஆன்லைன் மோசடிகள், சூதாட்ட இணையதளங்கள் போன்ற ஆபத்துகளையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.
மாலை 7 மணி. வேலை முடிந்து வீட்டிற்கு வரும் தந்தை, தலைவலியுடனும் அன்றைய சோர்வுடனும் இருக்கிறார். வீட்டில் இருக்கும் 8 வயது மகளோ, விளையாட எதுவும் இல்லை என்று அடம்பிடிக்கிறாள். தொலைக்காட்சியும் பிடிக்கவில்லை. வீட்டுப்பாடத்தையும் முடித்துவிட்டாள். சமையல் வேலையில் தாய் மும்முரமாக இருக்கிறார். என்ன செய்வதென்று தெரியாத தந்தை, தனது செல்போனை எடுத்து அதில் கார்ட்டூன் ஒன்றைப் போட்டுக் குழந்தையிடம் கொடுக்கிறார். வீட்டில் அமைதி நிலவுகிறது. தந்தையும் சற்று ஓய்வெடுக்கிறார். ஆனால், கார்ட்டூன் முடிந்ததும் தானாகவே அடுத்த வீடியோ தொடங்குகிறது. இப்படித்தான் இன்று பல வீடுகளில் குழந்தைகளின் பொழுதுபோக்கு ஸ்மார்ட்போன்களைச் சுற்றியே நகர்ந்து கொண்டிருக்கிறது.
குழந்தைகள் எவ்வளவு நேரம் செல்போன் பயன்படுத்துகிறார்கள்?
இந்தியாவில் குழந்தைகள் தினமும் எத்தனை மணி நேரம் செல்போன், டேப்லெட் உள்ளிட்ட டிஜிட்டல் சாதனங்களைப் பயன்படுத்துகிறார்கள் என்பதற்கான துல்லியமான தேசிய அளவிலான புள்ளிவிவரங்கள் இன்னும் இல்லை. இதனை மத்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கையான Economic Survey 2025-26-ம் ஒப்புக்கொண்டுள்ளது.
குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே டிஜிட்டல் அடிமைத்தனம் அதிகரித்து வரும் கவலையாக இருப்பதாக இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. அதே நேரத்தில், இதனால் எத்தனை குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதற்கான உறுதியான எண்ணிக்கையை அரசால் வழங்க முடியவில்லை.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான விஷயங்கள் புள்ளிவிவரங்களாகக் கணக்கிடப்படும் நிலையில், ஒவ்வொரு வீட்டிலும் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்ட செல்போன் பயன்பாடு குறித்த முழுமையான தரவுகள் இல்லாதது கவனிக்கத்தக்கது.
குழந்தைகளின் மனநலனை பாதிக்கும் அதிகப்படியான திரை நேரம்!
அதிகப்படியான ஸ்கிரீன் பயன்பாடும், நேருக்கு நேர் பழகும் உறவுகள் குறைவதும் மனநல பாதிப்புகளுடன் தொடர்புடையவை என்று பொருளாதார ஆய்வறிக்கை எச்சரிக்கிறது.
குழந்தைகள் இணையத்தில் எதிர்கொள்ளக்கூடிய சைபர் துன்புறுத்தல் (Cyberbullying), ஆன்லைன் மோசடிகள், சூதாட்ட இணையதளங்கள் போன்ற ஆபத்துகளையும் இந்த ஆய்வறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. ஒரு சிறிய தொடுதலிலேயே குழந்தைகள் இதுபோன்ற ஆபத்தான இணையதளங்களை அணுகும் வாய்ப்பு இருப்பதால் பெற்றோர்கள் கூடுதல் கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.
இதற்கிடையில், LocalCircles என்ற சமூகக் கருத்துக் கணிப்பு தளத்தின் ஆய்வில், சுமார் இரண்டு பெற்றோரில் ஒருவர் தங்களது குழந்தைகள் சமூக வலைதளங்கள், ஓடிடி தளங்கள் அல்லது ஆன்லைன் கேமிங்கிற்கு அடிமையாகி இருப்பதாகக் கருதுவதாகத் தெரியவந்துள்ளது. இது மருத்துவ ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட அடிமைத்தனத்தின் அளவீடு அல்ல என்றாலும், பெற்றோர்கள் மத்தியில் இந்தப் பிரச்சினை எந்த அளவுக்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது என்பதை வெளிப்படுத்துகிறது.
குழந்தைகளைக் காக்க என்ன செய்யலாம்?
குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை முழுமையாகத் தடை செய்வது மட்டுமே இதற்குத் தீர்வாக இருக்க முடியாது. ஏனெனில், அதே செல்போன் மூலம் குழந்தைகள் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்ளவும், கல்வி சார்ந்த தகவல்களைப் பெறவும், உலகத்தைப் புரிந்துகொள்ளவும் முடியும்.
எனவே, குழந்தைகளின் வயதுக்கு ஏற்ப எளிமையான செல்போன்களை வழங்குவது, படிப்புக்காக மட்டுமே டேப்லெட்களைப் பயன்படுத்த அனுமதிப்பது, குறிப்பிட்ட நேர வரம்புகளை நிர்ணயிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
மேலும், பள்ளிகளில் இணையப் பாதுகாப்பு மற்றும் டிஜிட்டல் நல்வாழ்வு குறித்த விழிப்புணர்வுப் பாடங்களை அறிமுகப்படுத்த வேண்டும். குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் செலவிடுவதற்குப் பதிலாக விளையாட்டு மற்றும் பிற வெளிப்புறச் செயல்பாடுகளில் ஈடுபடுவதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும்.
வீடுகளில் உணவு சாப்பிடும் நேரம் மற்றும் குடும்பத்தினருடன் உரையாடும் நேரங்களில் செல்போன் பயன்படுத்துவதைத் தவிர்ப்பதும் முக்கியம். அதேபோல், குழந்தைகள் பயன்படுத்தும் செயலிகளின் வயது வரம்புகளைச் சரிபார்ப்பது மற்றும் பாதுகாப்பான அமைப்புகளை உறுதிசெய்வது போன்ற பொறுப்புகளை சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்களும் ஏற்க வேண்டும்.
குழந்தைகளின் கற்பனைத் திறனைப் பறிக்கிறதா ஸ்மார்ட்போன்?
குழந்தைப் பருவத்தில் எதுவும் செய்யாமல் வெறுமனே இருக்கும் நேரம்கூட அவர்களின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு தீப்பெட்டியைப் படகாகக் கற்பனை செய்வதும், வானில் நகரும் மேகங்களைப் பார்த்துக் கதைகள் உருவாக்குவதும் குழந்தைகளின் கற்பனைத் திறனை வளர்க்கின்றன.
ஆனால், ஒவ்வொரு நொடியும் புதுப்புது வீடியோக்களையும் பொழுதுபோக்குகளையும் வழங்கும் செல்போன்கள், குழந்தைகளுக்கு காத்திருக்கும் பொறுமையையும் சுயமாகச் சிந்திக்கும் வாய்ப்பையும் குறைக்கக்கூடும்.
அதிகப்படியான செல்போன் பயன்பாடு குழந்தைகளின் தூக்கத்தையும் பாதிக்கலாம். இரவில் நீண்ட நேரம் செல்போன் பயன்படுத்துவதால் போதுமான தூக்கம் கிடைக்காமல் போகலாம். இது அவர்களின் கற்றல் திறன், நினைவாற்றல் மற்றும் மன அமைதியையும் பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. வகுப்பறைகளில் ஒரு பாடத்தைக் கவனித்துக் கேட்பதில் சிரமம், தூக்கக் கலக்கம் போன்ற பாதிப்புகளை ஆசிரியர்களும் கவனிப்பதாகக் கூறப்படுகிறது.
பெற்றோர்களும் முன்மாதிரியாக இருக்க வேண்டும்!
குழந்தைகள் பெற்றோர்கள் சொல்வதைக் கேட்பதைவிட, அவர்கள் செய்வதைத்தான் அதிகம் பின்பற்றுகிறார்கள். சாப்பிடும்போது செல்போன் பயன்படுத்தக்கூடாது என்று குழந்தைகளிடம் கூறிவிட்டு, பெற்றோர்களே உணவு நேரத்தில் செல்போனைப் பயன்படுத்தினால், குழந்தைகளுக்கு அது தவறான முன்னுதாரணமாக மாறும்.
சிறிய வரிசையில் காத்திருக்கும்போதுகூட உடனே செல்போனை எடுக்கும் பழக்கம் பெரியவர்களிடமும் அதிகரித்துள்ளது. ஒரு சில நிமிடங்கள் எதுவும் செய்யாமல் இருப்பதைக்கூட பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இப்படிப்பட்ட சூழலில் வளரும் குழந்தைகளும் அதே பழக்கத்தைப் பின்பற்றுவது இயல்பான ஒன்றாகிவிடுகிறது.
மீண்டும் ரமேஷின் வீட்டிற்குச் செல்வோம். ஓய்வெடுத்துக் கொண்டிருந்த அவர் கண்களைத் திறந்து பார்க்கிறார். அவரது மகள் செல்போன் திரையில் மூழ்கியிருக்கிறாள். தந்தை அருகில் இருப்பதைக்கூட அவள் கவனிக்கவில்லை.
திடீரெனத் தனது குழந்தைப் பருவத்தில் எந்தப் பொழுதுபோக்கும் இல்லாமல் நீண்ட மதிய நேரங்களைக் கழித்த நினைவுகள் அவருக்கு வருகின்றன. அப்போது அந்த நேரத்தை எப்படியெல்லாம் விளையாட்டாகவும் கற்பனையாகவும் மாற்றினோம் என்பதை நினைத்துப் பார்க்கிறார்.
இன்று குழந்தைகளுக்கு நாம் வழங்க வேண்டியது இன்னும் அதிகமான வீடியோக்களா? அல்லது அவர்கள் சுயமாகச் சிந்திக்கவும், விளையாடவும், கற்பனை செய்யவும் தேவையான நேரமா? குழந்தைப் பருவத்தின் ஒவ்வொரு நிமிடத்தையும் திரைகள் ஆக்கிரமிக்காமல் பார்த்துக்கொள்வது பெற்றோர்களின் கைகளில்தான் இருக்கிறது.