ரூ.1 கோடி காப்பீட்டு தொகை…வங்கியை நம்ப வைக்க கொடூர நாடகம்…ஊழியருக்கு போலீசார் காப்பு!
Bank Employee Kills Man: ரூ. 1 கோடி ஆயுள் காப்பீட்டு தொகையை பெறுவதற்காக வங்கியை நம்ப வைப்பதற்காக வங்கி ஊழியர் கொடூர நாடகம் ஆடி உள்ளார். இந்த நாடகம் தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. அந்த நபருக்கு போலீசார் காப்பு பூட்டினர்.

காப்பீடு தொகைக்காக வங்கி ஊழியர் கொடூர செயல்
மகாராஷ்டிரா மாநிலம், லத்தூரில் உள்ள அவுசா என்ற பகுதியில் ஒரு கார் எரிந்த நிலையில் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்த்த போது, அதில், ஒரு நபர் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டதில், அந்த காரின் உரிமையாளர் தனது உறவினரான வங்கியில் பணிபுரியும் கணேஷ் சவானுக்கு காரை கொடுத்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, அந்த நபரின் வீட்டுக்கு போலீசார் சென்று விசாரணை மேற்கொண்ட போது, அவர் வெகு நாள்களாக வீட்டுக்கு வரவில்லை என்பதும், அவரது செல்ஃபோன் ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டு இருப்பதும் தெரிய வந்தது. இதில், காரில் எரிந்த நிலையில் உயிரிழந்து கிடந்தது கணேஷ் சவான் என போலீசார் எண்ணினர்.
ரூ.1 கோடி மதிப்பிலான ஆயுள் காப்பீடு
ஆனால், விசாரணையில் கணேஷ் சவான் ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும், கணேஷ் சவானின் செல்போன் என்னை ஆய்வு செய்ததில், அவர் கோலாப்பூர் மற்றும் சிந்து துர்க் ஆகிய பகுதியில் பதுங்கி இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து, போலீசார் அங்கு சென்று அவரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், கணேஷ் சவான் ரூ. ஒரு கோடி மதிப்பிலான ஆயுள் காப்பீட்டை எடுத்துள்ளார்.
வங்கியை நம்ப வைக்க கொடூர திட்டம்
அவருக்கு ஏற்கெனவே உள்ள வீட்டுக் கடனை அடைப்பதற்காக இந்த தொகையை பெற விரும்பியதாக தெரிகிறது. அதன்படி, கணேஷ் சவான் தான் உயிரிழந்ததாக வங்கியை நம்ப வைப்பதற்காக கொடூர திட்டம் ஒன்றை திட்டி உள்ளார். இதில், அவுசாவில் உள்ள துல்ஜாபூர் டி சந்திப்பு பகுதியில் கோவிந்த் யாதவ் என்பவரை காரில் அழைத்து சென்றுள்ளார். இவர்கள், இருவரும் வனவாடா பட்டி சாலையில் சென்ற போது, கணேஷ் சவான் காரை சாலையோரம் நிறுத்தி உணவு அருந்தி உள்ளனர்.
ஒருவரை காருடன் எரித்து கொன்ற வங்கி ஊழியர்
பின்னர், மது போதையில் கோவிந்த் யாதவ் காரில் தூங்கி உள்ளார். அப்போது, ஆயுள் காப்பீட்டு தொகை ரூ.ஒரு கோடியை பெறுவதற்கு தான் இறந்தது போல காண்பிப்பதற்காக கோவிந்த் யாதவை காரின் இருக்கையில் சீட் பெல்டால் கட்டி தீ வைத்துள்ளார். இதில், கோவிந்த் யாதவ் பரிதாபமாக உயிரிழந்தார். காரில் உயிரிழந்தது கணேஷ் சவான் தான் என்பதை நிரூபிப்பதற்காக, தனது கையில் இருந்த காப்பை கோவிந்த் யாதவின் கையில் மாட்டி நாடகம் ஆடி உள்ளார். இதைத் தொடர்ந்து, கணேஷ் சவான் மீது போலீசார் கொலை வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.