மின்னல் தாக்கில் 34 பேர் பலி.. ஒரே நாளில் 2 மடங்காக உயர்ந்த எண்ணிக்கை.. பீகாரில் சோகம்!
34 Killed By Lightning in Bihar | இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. அந்த வகையில் பீகாரில் பெய்து வரும் இடி, மின்னலுடன் கூடிய மழை காரணமாக அங்கு கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 34 பேர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாதிரி புகைப்படம்
பீகார், ஜூலை 19 : பீகாரில் (Bihar) கடந்த இரண்டு நாட்களில் மட்டும் மின்னல் தாக்கி (Lightning Attack) உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது. நேற்றைய (ஜூலை 18, 2025) நிலவரப்படி மின்னல் தாக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆக இருந்த நிலையில், இன்று (ஜூலை 19, 2025) அந்த எண்ணிக்கை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இவ்வாறு உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், பீகாரில் மின்னல் தாக்கி இரண்டு நாட்களில் 34 பேர் உயிரிழந்தது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மின்னல் தாக்குதல் – 2 நாட்களில் 34 பேர் பரிதாப பலி
இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் பருவமழை தொடங்கியுள்ளது. இதன் காரணமாக பல இடங்களில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், பீகார் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக பீகார் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக அங்கு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பீகாரில் கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 34 பேர் மின்னல் தாக்கி பலியாகியுள்ளனர்.
இதையும் படிங்க : கல்யாண விருந்தில் களேபரம்.. சிக்கன் 65 தராததால் ஆத்திரம்.. இளைஞர் படுகொலை!
மின்னல் தாக்குதல் காரணமாக பீகாரில் தொடர்ந்து உயரும் பலி எண்ணிக்கை
பீகாரில் மின்னல் தாக்கி கடந்த 48 மணி நேரத்தில் மட்டும் 34 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதில், அதிகபட்சமாக நலந்தா மற்றும் வைஷாலி பகுதிகளில் தலா 6 பேர் உயிரிழந்துள்ள நிலையில், ஷேக்புராவில் 5 பேரும், பாட்னா மற்றும் அவுரங்காபாத்தில் தலா மூன்று பேரும் உயிரிழந்துள்ளனர். மேலும் நவாடா மற்றும் பங்காவில் தலா இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இது தவிர போஜ்பூர், பாகல்பூர், ரோடாஸ், கயாஜி, சமஸ்திபூர் மற்றும் ஜமுய் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவரும் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். மேலும், மின்னல் தாக்கி பல்வேறு பகுதிகளில் 6 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இதையும் படிங்க : மின்னல் தாக்கி ஒரே நாளில் 19 பேர் பலி.. பீகாரில் சோக சம்பவம்!
24 மணி நேரத்தில் 19 பேர் பலி
பீகாரின் நேற்றைய (ஜூலை 18, 2025) நிலவரப்படி 24 மணி நேரத்தில் 19 பேர் பலியாகி இருந்தனர். அதிகபட்சமாக நலந்தாவில் 5 பேரும், வைஷாலியில் 4 பேரும், பங்கா மற்றும் பாட்னாவில் தலா 2 பேரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இதேபோல ஷேக்புரா, நவாடா, ஜெனகாபாத், அவுரங்காபாத், ஜமுய் மற்றும் சமஸ்திபூர் பகுதிகளில் தலா ஒருவரும் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே அங்கு பலி எண்ணிக்கை 34 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.